மக்களின் கருத்தை அறிய சர்வஜன வாக்கெடுப்பை அரசு நடத்த வேண்டும்

உயர் நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக் காலத்தை நீடிக்க வேண்டும் என்று அரசாங்கம் நினைக்குமாக இருந்தால் அது தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்புக்குச் சென்று அது தொடர்பில் தீர்மானிக்கும் பொறுப்பை மக்களிடம் வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜாஎலவில் நடைபெற்ற மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் அதன்போது மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை நாளுக்க நாள் சரிந்து வருகின்றது. இதற்கு காரணம் என்ன? ஒரு புறம் அரசாங்கம் ஆட்சிக்கு வர வரம்பற்ற பொய்களைக் கூறியது. ஒரு பொயை மறைக்க இன்று மேலும் நூறு பொய்களைச் சொல்ல வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. மறுபுறம் தாம் வைத்த எதிர்பார்ப்புகளையும் வழங்கிய வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை.இந்த நாட்டின் இளைஞர்களுக்கு அரசாங்கம் மாற்றத்தை ஏற்படுத்துவதாக வாக்குறுதி அளித்தது. பல வருடங்களுக்குப் பிறகு பிரதான அரசியல் நீரோட்டத்திற்கு வெளியேயுள்ள ஒரு கட்சிக்கு வரம்பற்ற அதிகாரத்துடன் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்தார்கள். அந்த மக்களுக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது. முந்தைய கட்சிகள் மற்றும் அரசாங்கங்களுடன் ஒப்பிடும்போது ஏதேனும் புதிய விஷயத்தைச் செய்வார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அவ்வாறு புதிய விடயங்கள் எதனையும் செய்யவில்லை.
இப்போது மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளன. இதனால் ஒருபுறம் விவசாயிகள் வீதிக்கு இறங்கியுள்ளனர். மீனவர்கள் அனாதையாகியுள்ளனர். உயர்தர மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராக முடியாமல் கடும் மன அழுத்தத்தில் உள்ளனர், கல்வி அமைச்சர் செவிசாய்ப்பதில்லை, கல்வி அமைச்சரைச் சந்திக்க முடியாதுள்ளனர். விளையாட்டு வீரர்கள் விளையாட்டு அமைச்சரைச் சந்திக்க முடியாது எனக் குற்றம் சாட்டுகிறார்கள்.
இப்போது அரசாங்கம் இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மத்தியில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிப்பதைப் பற்றிப் பேசுகிறது. இப்போது அரசாங்கம் நினைக்கிறது நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை இதுவென்று.அமைச்சர் ஒருவர் பாராளுமன்றத்தில்ராஜபக்ஷர்களின் வழக்குகளை விரைவாக விசாரிக்க தலைமை நீதியரசர் இருக்க வேண்டும் என்று கூறுகின்றார். இதை நான் சொல்லவில்லை. ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சொல்கிறார். அப்படியானின் அதில் ஒரு மறைமுக நோக்கம் இருக்கின்றது.
விவசாயியின் பிரச்சினையை விட, மீனவரின் பிரச்சினையை விட, பட்டதாரியின் பிரச்சினையை விட, பாடசாலை மாணவனின் பிரச்சினையை விட, வேலையற்ற இளைஞனின் பிரச்சினையை விட, பிள்ளையின் கல்வியிலுள்ள பிரச்சினைகளை விட, தாய் தந்தையரின் வாழ்க்கைச் செலவை விட, வரம்பற்ற வரிச் சுமையை விட இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டு வந்து உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிக்க வேண்டும் என்று அரசாங்கம் நினைத்தால் அதற்காக சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லலாம். நான் சவால் விடுக்கின்றேன் அரசாங்கத்தால் முடியுமானால் சர்வஜன வாக்கெடுப்புக்குச் சென்று மக்களுக்கு வாய்ப்பளியுங்கள். பதவிக் காலத்தை நீடிக்க வேண்டும் என மக்கள் தீர்மானித்தால், அதை மக்களே தீர்மானிக்கட்டும். ஆனால் அதைத் தீர்மானிக்க எமக்கு உரிமையில்லை என்றார்.
![]()