இலங்கை

சஜித்-ரணிலின் கூட்டணியில் அனைவர் மீதும் வழக்குகள்

சஜித்-ரணில் கூட்டணி என்பது . ஒரு கூட்டணி அல்ல ரணில் விக்கிரமசிங்க தலைவராகி, சஜித்தை தனது ஆதரவாளராக்கப் பார்க்கும் ஒரு முயற்சி. முதல் பேச்சுவார்த்தையிலேயே ரணில் உத்தரவிடுகிறார், சஜித் அதை எழுதுகிறார் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

அவர்கள் முன்னர் ஒன்றாயிருந்தவர்கள் . ஒன்றாக இருந்தபோதே செய்ய முடியாத காரியத்தை, இரண்டாகப் பிரிந்து சென்று மீண்டும் ஒன்று சேர்ந்து செய்ய முடியாது.மற்றொன்று, நான் பார்ப்பது இது ஒரு கூட்டணி அல்ல ரணில் விக்கிரமசிங்க தலைவராகி, சஜித்தை தனது ஆதரவாளராக்கப் பார்க்கும் ஒரு முயற்சி. முதல் பேச்சுவார்த்தையிலேயே நீங்கள் பார்த்திருப்பீர்கள்—ரணில் உத்தரவிடுகிறார், சஜித் அதை எழுதுகிறார். ரணில் விக்கிரமசிங்க புதிதாகப் பணம் செலவழிக்காமல் ஒரு செயலாளரைப் பிடித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அனுபவத்தோடு அவர் அங்கே சென்று தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தித் தான் தான் தலைவர் என்பதைக் காட்டுகிறார். சஜித் இரண்டாம் இடம் அல்ல, அதற்கும் கீழே தள்ளப்பட்டுள்ளார்.

அதற்கெல்லாம் நாம் பயப்படவில்லை. ஏனென்றால் அந்த அணியில் இணைந்திருக்கும் அனைவரும் வெளியில் வந்து குரல் கொடுத்த குழுவை எடுத்துப் பாருங்கள். அவர்களது வழக்குத் திகதிகளை எழுதிப் பாருங்கள். வழக்கு இல்லாத எவரும் அங்கே இல்லை.அனைவருக்கும் வழக்குகள் உள்ளன. ஒன்று பிணையில் உள்ளார்கள், இல்லையேல் சந்தேகநபர்களாக உள்ளார்கள். அந்தக் குழு தான் ஒன்று சேர்ந்துள்ளது. அவர்கள் பிரிந்து இருப்பதை விட ஒன்று சேர்வது நல்லதுதான், ஏனென்றால் மக்கள் அவர்களைப் பார்க்கும்போதுதான் என்ன நடக்கிறது என்று புரியும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button