இலங்கை

அரசிடம் ஏழு கோரிக்கைகள்; வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்! திருமலையில் உண்ணாவிரத போராட்டம்

கடந்த காலங்களில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்ற கேள்வியை முன்வைத்து, திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்னால் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று இடம்பெற்று வருகின்றது.

திருகோணமலை மக்கள் சமூக செயற்பாட்டாளர் உண்ணாவிரத வேந்தனால் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரசாங்கத்திடம் ஏழு பிரதான கோரிக்கைகளை முன்வைத்து அவற்றுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட வெடிமருந்துகள் மற்றும் சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மீன்பிடியைத் தடுத்தல், அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் 500க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அது தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மந்தகதியில் இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டிய அவர்கள், விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும், நாட்டின் அனைத்து பிரதேசங்களையும் போதைப்பொருள் அற்ற பகுதிகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஜனாதிபதித் தேர்தலின்போது அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்ற கேள்வியையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button