இலங்கை

நாமல் திருமண மின் கட்டண விவகாரம் மீண்டும் நீதிமன்றத்தில் – டிசம்பர் 4ஆம் திகதி விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீரக்கெட்டிய இல்லத்தில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண விழாவுக்காக பயன்படுத்தப்பட்ட மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான அடிப்படை உரிமை மனுவை, எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதியரசர்கள் ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சம்பத் அபேகோன் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இலங்கை மின்சார சபை மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அதற்குப் பதிலான அங்கத்துவ நிறுவனத்தை பிரதிவாதியாக இணைக்க மனுதாரருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இலங்கைகலாச்சார நிகழ்வுகள்

சட்டத்தரணி விஜித குமாரவால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 2019 செப்டம்பர் 12 முதல் 15ஆம் திகதி வரை நடைபெற்ற திருமண நிகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணம் ரூபா 2,682,246.57 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தொகையை ராஜபக்ஷ குடும்பத்தினர் செலுத்துவார்கள் என அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அது இதுவரை செலுத்தப்படவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாதாரண நுகர்வோரின் குறைந்த அளவிலான மின் கட்டணம் செலுத்தப்படாதபோது மின் இணைப்பு துண்டிக்கப்படும் நிலையில், இவ்வளவு பெரிய தொகை நிலுவையில் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது சட்டத்தின் முன் சமத்துவத்தை மீறுவதாக மனுதாரர் வாதிட்டுள்ளார்.

இதன் மூலம் அரசியலமைப்பின் 12(1)ஆம் சரத்தின் கீழ் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, நாமல் ராஜபக்ஷவின் திருமண விழாவுக்கான மின்சாரக் கட்டணம் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதாக மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த முன்பு ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button