இலங்கை

வெளிநாட்டு ராஜதந்திரிகளைச் சந்திக்க தமிழ் பேசும் கட்சிகள் திட்டம்

இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் முக்கிய விடயங்களில் இணைந்து செயல்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன.

இதற்கமைய, மேற்படி கட்சிகள் தத்தமது சுயாதீனம், அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் கொள்கைகளைப் பாதுகாத்துக் கொண்டு, பொதுவான இணக்கப்பாடு காணப்படும் விடயங்களில் தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயல்பட இணக்கம் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்ற வளாகத்தில்  நடைபெற்ற சந்திப்பின்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாட இக்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக ஜனாதிபதியிடம் நேர ஒதுக்கீடும் கோரப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவரையும், இலங்கையில் உள்ள இராஜதந்திரப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவும் அவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதன் மூலம் இவ்விடயங்கள் தொடர்பாகக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டு, ஜனநாயக ரீதியிலான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் ஊடாக பரந்த இணக்கப்பாட்டை உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

தமது கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்குவார் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அக்கட்சிகள், இணக்கப்பாடு காணப்படும் விடயங்களில் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்பட்டு நீதி, நிலையான சமாதானம் மற்றும் நீடித்த அரசியல் தீர்வை நோக்கிப் பயணிப்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button