இலங்கை

பழமை அரசியல் முகங்களை ஒரே புகைப்படத்தில் தோன்றவைத்த பிணைமுறியால் முறித்த இருக்கரங்கள்…

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற முழக்கத்தின் கீழ், இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒரே மேசையில் கடந்த 23 ஆம் திகதி அமர்ந்த காட்சி அரசியல் ரீதியாக குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்தது.

ஆனால் அந்தப் புகைப்படத்தை அரசியல் நினைவுகளின் கண்ணாடியில் பார்த்த பலருக்கு அது ஜனநாயகத்தைக் காப்பதற்கான புதிய தொடக்கமாக அல்ல, கடந்த கால அரசியல் கூட்டணிகளின் மீள்வருகையாகவே தோன்றியது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு எதிராக ஒருங்கிணைந்த பதிலை உருவாக்கும் நோக்கில், மொட்டுக்கட்சியின் நாமல் ராஜபக்ச எழுத்துப்பூர்வமாக விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த உயர்மட்டக் கூட்டத்தை கூட்டினார்.

நீதித்துறையைப் பற்றிய ஆலோசனை

 

இதில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன,பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச , மற்றும் ஐக்கிய குடியரசு முன்னணி தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் இக்கூட்டத்தில் அடங்குவர்.

பழமை அரசியல் முகங்களை ஒரே புகைப்படத்தில் தோன்றவைத்த பிணைமுறியால் முறித்த இருக்கரங்கள்... | The Bonds That United The Losers Have Been Broken

அதிகாரப்பூர்வமாக இது நீதித்துறையைப் பற்றிய ஆலோசனையாக இருந்தாலும், அரசியல் ரீதியாக அந்த அறையில் அமர்ந்திருந்த முகங்கள்தான் அதிக கவனத்தை ஈர்த்தன.

ஒரு காலத்தில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்தவர்களும், தேர்தல் மேடைகளில் ஒருவரை ஒருவர் தோற்கடிக்கப் போராடியவர்களும், இப்போது “நீதித்துறை சுதந்திரம்” என்ற பொதுவான கருப்பொருளின் கீழ் ஒன்றிணைந்திருந்தனர்.

சஜித் பிரேமதாசவும் ரணில் விக்ரமசிங்கவும் அதற்கான மிகத் தெளிவான எடுத்துக்காட்டாக இருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உட்பிளவுகள், திறைசேரிப் பத்திர விவகாரத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மோதல்கள், பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி உருவான வரலாறு ஆகியவற்றின் பின்னணியில், இவர்கள் இருவரும் ஒரே மேசையில் அமர்ந்திருப்பது இலங்கை அரசியலின் புதிய சமன்பாடுகளை வெளிப்படுத்தியது.

அந்த மேசையில் ரணில் விக்கிரமசிங்க மட்டும் அல்ல. முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன, நாமல் ராஜபக்ச, பாட்டளி சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச, ரவூப் ஹக்கீம், சாகல ரத்நாயக்க, திரான் அலஸ், திலித் ஜயவீர உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இது ஒரு சாதாரண எதிர்க்கட்சிக் கூட்டமாக இல்லாமல், கடந்த இரு தசாப்தங்களாக இலங்கையின் ஆட்சியிலும் அதிகார மையங்களிலும் முக்கிய பங்கு வகித்த அரசியல் தலைமைகளின் மறுசேர்க்கையை நினைவூட்டும் நிகழ்வாக அமைந்தது.

பொது நிர்வாகம் தொடர்பான சர்ச்சை

 

இந்தக் கூட்டத்தின் மிகப் பெரிய முரண்பாடு, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்திய பல அரசியல் தலைவர்களே தங்களது அரசியல் வாழ்க்கையின் பல கட்டங்களில் நீதித்துறை, அரசியலமைப்பு அல்லது பொது நிர்வாகம் தொடர்பான சர்ச்சைகளில் சிக்கியவர்களாக இருந்ததுதான்.

நாமல் ராஜபக்ச தற்போது மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் பிணையில் உள்ளார்.

பழமை அரசியல் முகங்களை ஒரே புகைப்படத்தில் தோன்றவைத்த பிணைமுறியால் முறித்த இருக்கரங்கள்... | The Bonds That United The Losers Have Been Broken

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பொது நிதி பயன்படுத்தப்பட்டமை தொடர்பான வழக்கில் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகிறார்.

மேலும், ரவி கருணாநாயக்க, உதய கம்மன்பில, சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட பலரும் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்களின் முன் நிற்கும் அரசியல் முகங்களாக உள்ளனர்.

இவ்வாறான பின்னணியில், நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்கும் உரிமையை அவர்கள் முன்வைப்பதை சட்டரீதியாக மறுப்பதற்கு அடிப்படை இல்லாவிட்டாலும், அதன் அரசியல் நம்பகத்தன்மை குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்புவது இயல்பானதே.

இன்று நீதித்துறையின் மீது அரசாங்கம் தலையிடுகிறது என்று குற்றம்சாட்டும் அரசியல் தலைமைகள், தாங்கள் ஆட்சியில் இருந்த காலங்களில் நீதித்துறை சுதந்திரம் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு எவ்வாறு பதிலளித்தனர் என்பதையும் மக்கள் நினைவுகூர்கிறார்கள்.

கூட்டத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, “அரசாங்கம் நீதித்துறையின் மீது கை வைத்துள்ளது” என்று குற்றம்சாட்டினார். அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நீதித்துறையை அரசியல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறது என்றும் அவர் வாதிட்டார்.

மறுபுறம், ரணில் , நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் மக்கள் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயம் என வலியுறுத்தினார். நாட்டில் நிலுவையில் உள்ள சுமார் 11 இலட்சம் வழக்குகளைத் தீர்ப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார்.

ஊழல், குடும்ப ஆட்சி, அதிகார துஷ்பிரயோகம் 

நாமல் ராஜபக்ச, “நீதித்துறை மற்றும் காவல்துறையை அரசியல் கருவிகளாக மாற்ற அரசாங்கம் முயன்றால் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு” என்றார்.

பழமை அரசியல் முகங்களை ஒரே புகைப்படத்தில் தோன்றவைத்த பிணைமுறியால் முறித்த இருக்கரங்கள்... | The Bonds That United The Losers Have Been Broken

 

விமல் வீரவன்ச, “அரசாங்கத்தின் செயல்களே பல ஆண்டுகளாகப் பிரிந்திருந்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்துள்ளன” என்று கூறினார்.

ரவூப் ஹக்கீம், பாட்டளி சம்பிக்க ரணவக்க உள்ளிட்டவர்களும் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் தொடர்பான அச்சங்களை முன்வைத்தனர்.

ஆனால் இந்தக் கூட்டத்தின் உண்மையான அரசியல் செய்தி, நீதிபதிகளின் ஓய்வுவயது விவகாரத்தைத் தாண்டி இருந்தது.

அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் சக்திகளை ஒரே மேடையில் நிறுத்தும் முயற்சி இது என்ற வாசிப்பும் உருவாகியுள்ளது.

பழமை அரசியல் முகங்களை ஒரே புகைப்படத்தில் தோன்றவைத்த பிணைமுறியால் முறித்த இருக்கரங்கள்... | The Bonds That United The Losers Have Been Broken

ஒருகாலத்தில் ஊழல், குடும்ப ஆட்சி, அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளை ஒருவர்மீது ஒருவர் முன்வைத்த தலைவர்கள், இன்று ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் என்ற ஒரே முழக்கத்தின் கீழ் தோன்றியிருப்பது அரசியல் தேவையா அல்லது கொள்கை மாற்றமா என்ற கேள்வி இன்னும் விடைபெறவில்லை.

இந்த அணிதிரட்டல் தேர்தல் அரசியலை முன்னிட்டு பழைய அதிகார மையங்கள் மீண்டும் ஒருங்கிணையும் ஆரம்ப அறிகுறியாக கூட இருக்கலாம்.

இந்தக் கேள்விகளுக்கு உடனடி பதில் அளிக்க முடியாது. ஆனால் ஒரு விடயம் தெளிவாகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரே அறையில் கூட அமர முடியாத அரசியல் தலைவர்கள், இன்று ஒரே புகைப்படத்தில் தோன்றியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button