“துப்பாக்கிச் சூடு நடத்தியாவது இந்தியப் படகுகளைக் கட்டுப்படுத்துங்கள்!”

எல்லை தாண்டி அத்துமீறும் தமிழகக் கடற்றொழிலாளர்களைத் துப்பாக்கிச் சூடு நடத்தியாவது கட்டுப்படுத்துமாறு யாழ். மாவட்டக் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனப் பொருளாளர் மகேஷ் கடற்படையிடம் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தீவகப் பகுதிகளில் அண்மைக்காலமாக இந்திய இழுவைமடிப் படகுகளின் அட்டகாசம் மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் எமது பகுதி கடற்றொழிலாளர்களின் பெருந்தொகையான வலைகளும் வாழ்வாதார உபகரணங்களும் முற்றாக அழிக்கப்பட்டு வருகின்றன.
நாங்கள் எத்தனையோ போராட்டங்களை நடத்தி, பல மகஜர்களைக் கையளித்தும், சகல தரப்பினரிடமும் முறையிட்டும் கூட இந்தச் சொல்லொண்ணாத் துயரம் இன்னும் முடிந்தபாடில்லை.
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற பின்னர், எல்லைதாண்டும் படகுகளுக்கு ஏதேனும் கட்டுப்பாடு வரும் என நாம் எதிர்பார்த்தோம். ஆனால், தற்போது மேலும் அதிகமான படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைகின்றன. அண்மையில் மன்னாரில் ஒரு படகைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஆனால் அது எங்களுக்குப் போதுமானதாகவோ திருப்தியாகவோ இல்லை. ஆயிரம் படகுகள் வரும்போது ஒரு படகைக் கைது செய்வதால் எந்தத் தீர்வும் கிடைக்கப்போவதில்லை.
எனவே, கடற்படையினரிடம் நாங்கள் கேட்பது என்னவென்றால், எந்தவிதமான துப்பாக்கிப் பிரயோகத்தையாவது மேற்கொண்டு இந்த அத்துமீறும் படகுகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுங்கள். தொடர்ந்து கேட்டுக்கொண்டும் கெஞ்சிக்கொண்டும் இருக்க முடியாது.
இந்திய மீனவர்களுடனோ அல்லது இந்திய அரசாங்கத்துடனோ பேசுவதால் எங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. அவர்கள் பேசிப் பேசியே எமது மக்களை ஏமாற்றி, எங்களது கடல் வளங்களையும் சூறையாடி வருகிறார்கள். இதனால் இன்றைக்கு எமது கடற்றொழில் சமூகம் பெருந்துயரத்தைச் சந்தித்து நிற்கிறது.
ஆகவே, இதற்கு உடனடி கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கடற்படைக்கும் ஜனாதிபதிக்கும் கோரிக்கை விடுக்கின்றோம். அவ்வாறு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், எமது 117 சங்கங்களும் சமாசச் சம்மேளனங்களும் கடற்படைக்கு என்றென்றும் நன்றியுடையவர்களாகவும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குபவர்களாகவும் இருக்கும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
![]()