75 வீத மக்கள் ஆதரவென அநுர குறித்த கருத்துக் கணிப்பு தவறானது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீதான மக்கள் விருப்பம் 75 வீதமாக உயர்வடைந்துள்ளதாக கூறப்படும் கருத்துக் கணிப்பு உண்மைக்கு புறம்பானவை என்றும், அரசாங்கத்தை ஏமாற்றி மாகாண சபைகள் தேர்தலை நடத்தச் செய்வதற்கான முயற்சியாக இவ்வாறு கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டதாக இருக்கலாம் என்றும் பிவித்துறு ஹெல உறுமய தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துறு ஹெல உறுமய அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளதாவது,
மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையத்தினால் நடத்தப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்பொன்றை வெளிப்படுத்தி ஜனாதிபதி அநுரகுமார மீதான மக்கள் விருப்பம் 75 வீதத்திற்கும் மேல் உயர்வடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை ஏப்ரல் முதலாம் திகதி செய்திருந்தால் முட்டாள்கள் தினமென்று பேசமாமல் விட்டிருக்கலாம். ஆனால் இதனை ஜுலை மாதத்தில் செய்ததால் இந்த அறிக்கை தொடர்பில் பேசாமால் இருந்தால் இந்த பச்சைப் பொய்யர்கள் ஜனாதிபதியின் செல்வாக்கு 175 வீதத்தை கடந்துள்ளது என்று 2029இல் கூறலாம்.
எவ்வாறாயினும் முமுநாடும் தொடர்புபட்ட மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதாவது ஜனாதிபதித் தேர்தலில் 42 வீத வாக்குகளே ஜனாதிபதிக்கு கிடைத்தது. பின்னர் பாராளுமன்ற தேர்தலில் 62 வீதம் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்தது. உள்ளூராட்சித் தேர்தலில் 43 வீத வாக்குகளே கிடைத்தது. இவ்வாறான நிலைமையில் மாற்றுக்கொள்கைகளுக்காக நிலையத்தினால் ஜனாதிபதி மீதான மக்கள் விருப்பம் 75 வீதத்திற்கும் அதிகமாகியுள்ளதாக கூறியுள்ளனர். பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் உள்ளுராட்சித் தேர்தலில் அரசாங்கத்தின் வாக்குகள் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் இப்போது மக்கள் செல்வாக்கு அதிகமென்று கூறுகின்றனர்.
கடந்த காலங்களில் அரசாங்கத்திற்கு பின்னடைவே ஏற்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகளால் அரசாங்கம் மீது மக்களுக்கு வெறுப்புகளே அதிகரித்துள்ளன. 44 வீதமானவர்கள் அரசாங்கத்தினால் வாழ்க்கைச் செலவை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் அதிருப்தி நிலையில் இருக்கின்றனர். இவ்வாறான நிலைமையில் 75 வீதமான மக்கள் எப்படி விருப்பம் என்று கூற முடியும். மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் 22 மில்லியன் மக்களின் நிலைப்பாட்டை அறிய 1240 பேரிடமே கருத்து கேட்டுள்ளனர். கருத்துக் கணிப்பு கேட்போரின் எண்ணிக்கை குறைவடையும் போது மக்கள் நிலைப்பாடு திரிபுப்படுத்தப்படும் நிலைமையே காணப்படுகின்றது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அத்துடன் இந்த கருத்துக் கணிப்புக்கு யார் பணம் செலவிட்டது என்று தெரிந்தால் இதன் உண்மையை அறிந்துகொள்ள முடியும்.
மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையமானது வெளிநாட்டு நிதியில் அதிகார பகிர்வுக்காக செயற்படும் அரச சார்பற்ற நிறுவனமாகும். மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயங்குவதால் பயமின்றி தேர்தலை நடத்துங்கள் என்று அரசாங்கத்தை ஏமாற்றும் முயற்சியாகவே நாங்கள் இந்த கருத்துக்கணிப்பு அறிக்கையை பார்க்கின்றோம் என்றார்.
![]()