என்னென்று சொல்வேன்?… கவிதை… சங்கர சுப்பிரமணியன்

எண்ணெய் தடவி வாரிமுடித்த கூந்தல்
வறண்ட பாலையாய் விரித்த கோலமாச்சு
பூமுடித்து பூமணம் கமழ்ந்த கூந்தல்
ஷாம்பூ மணமாய் மாறியும் போச்சு
மஞ்சள்பூசி மங்களகரமான முகமதுவோ
அழகுக்கு சலவை செய்து வெண்மையாச்சு
பொட்டு வைத்து முகமாய் திகழ்ந்த முகம்
ஒட்டிய பொட்டால் ஒய்யாரமாய் தெரிகிறது
வில்போல் வளைந்த புருவங்கள் இப்போது
நேர்கோடாய் நீண்டு பயணம் செய்கிறது
புல்லாக்காய் மூக்கில் தொங்கிய ஆபரணம்
வளையமாய் மூக்கிலிப்போ தெரிகிறது
இரண்டாய் வாங்கிய காது வளையத்தில் ஒன்று
கீழுதட்டோரம் உதட்டைக் கவ்வி நிற்கிறது
கோவைப்பழம் போன்ற உதடு நிலைமாறி
பற்பல நிறங்களில் தினமும் மாறுகிறது
வாயினுள் மறைந்திருக்கும் நாவிற்கும்
அணிகலன் இப்போது உண்டு
பாவாடை தாவணி அருங்காட்சியகத்தில்
கால்சட்டை மேல்சட்டையே உடலில்
அன்ன நடை முற்றாய் மாறிப்போச்சு
குதிகால் உயர்ந்த செருப்பால் சத்தமாச்சு
குனிந்த தலை நிமிராத நடையுமின்று மாறி
நிமிர்ந்தநடை நேர்கொண்ட பார்வையாச்சு
அதிர்ந்து பேசா அணங்கும் இப்போ
அட்டகாசமாய் பேசும் நிலையாச்சு
நாகரிகத்தால் மாறிய பெண் இவளா?
அல்ல பாரதிகண்ட புதுமைப்பெண்ணா?

![]()