அனுமதியின்றி கட்டப்பட்ட பலாலி இராணுவ வைத்தியசாலையை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்; சுமந்திரன் தெரிவிப்பு

உள்ளூராட்சி சபையின் கட்டிட அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட பலாலி இராணுவ வைத்தியசாலையை இடிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையை வலிகாமம் வடக்கு பிரதேச சபை எடுக்கும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பலாலி இராணுவ வைத்தியசாலை கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தது சம்பந்தமாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,
வலிகாமம் வடக்கில் 2176 காணிகள் சம்பந்தமான வழக்கிலேயும் ஒரு காணியாக அதுவும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்தபோது நீதிமன்றத்திலேயும் நான் அந்த விடயத்தைச் சொல்லியிருந்தேன்.
ஆனால், அது ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட காணி என்ற நிலைப்பாட்டில்தான் இருக்கிறது. அந்த சுவீகரிப்பு வர்த்தமானியை ரத்துச் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாக இருந்து வருகிறது. அவர்கள் இதுவரை செய்யவில்லை. ஆகையினாலே, சுவீகரிக்கப்பட்ட காணிக்குள்ளே நாங்கள் இராணுவ வைத்தியசாலை கட்டுகிறோம் என்று அவர்களுடைய பதிலாக இருக்கிறது.
ஆனால், எந்தக் கட்டுமானப் பணிகளைச் செய்வதாக இருந்தாலும், அங்கே இருக்கிற உள்ளூராட்சி மன்றத்தினுடைய கட்டிட அனுமதி தேவை. ஆனால் இது கட்டிட அனுமதி பெறப்படாமல் செய்யப்படுகிற ஒரு விடயம். வலி. வடக்கு பிரதேச சபை இதனை உடனடியாக நிறுத்தும்படியாக அவர்களுக்கு அறிவுறுத்தல் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் அதனைச் செய்யாவிட்டால், அதனை இடிப்பதற்கான அடுத்த நடவடிக்கை வலி. வடக்கு பிரதேச சபை எடுக்கும் – என்றார்.
![]()