இலங்கை

அரசாங்கத்திற்கு எதிராக வாக்கு மூலம் அளிப்பவர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுகின்றனர்; நாமல் பகிரங்க குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் அளிப்பவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு நாட்டில் அச்சுறுத்தல் மற்றும் அடக்குமுறை நிலவி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

கேகாலை மாவட்டத்தின் தெதிகம தேர்தல் தொகுதியில் நடைபெற்ற கட்சியின் வட்டாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய சூழலில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் அளிப்பவர்கள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், சிலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சுயாதீனமான மற்றும் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அரசாங்கம் மக்கள் ஆணையை மீறி, அடக்குமுறைகள் மூலம் ஆட்சியைத் தொடர முயற்சிப்பதாகவும், அதற்கு எதிராக கிராம மட்டத்திலிருந்து மக்கள் அணிதிரள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், நீதித்துறையை அரசியல்மயமாக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டிய நாமல் ராஜபக்ஷ, இதன் காரணமாக காமன்வெல்த் சட்டத்தரணிகள், ஆசிய சட்டத்தரணிகள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் நீதிபதிகள் சங்கம் ஆகியவை நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்கப் போராடி வருவதாக தெரிவித்தார்.

அதேபோன்று, அரச சேவை சீரழிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் நலனுக்காக நேர்மையான முடிவுகளை எடுக்கும் அதிகாரிகள் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த கால இயற்கை அனர்த்தங்களின்போது அரச இயந்திரம் செயலிழந்ததற்கு அதிகாரிகளின் சட்டரீதியான கட்டுப்பாடுகளும் காரணமாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் வரலாற்றிலேயே அதிகளவில் வரிகள் விதிக்கப்பட்டுள்ள அரசாங்கம் இதுவென குற்றஞ்சாட்டிய அவர், அரசாங்கம் அதிக வருமானம் ஈட்டியதாகக் கூறினாலும், அந்த வருவாய் கிராமப்புற அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் பிரதிபலிக்கவில்லை என்றார்.

அரசாங்கத்தின் நிதிக் கணக்குகளில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் இணையத் தாக்குதலின் மூலம் திருடப்பட்டதாகக் கூறப்படுவதாகவும், இதுதொடர்பில் மத்திய வங்கியும் நிதியமைச்சும் ஒன்றுக்கொன்று பொறுப்பை சுமத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இறுதியில் அதன் சுமை பொதுமக்கள் மீதே விழுவதாகவும் அவர் கூறினார்.

விவசாயிகள், தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் ஆகியோர் மின்சாரக் கட்டண உயர்வு, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் விரைவாக கைது செய்யப்படுகின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

எனவே, அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும், அச்சுறுத்தல் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் தயாராக இருப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ தனது உரையில் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button