இலங்கை

மனித விழுமியங்களும் ஆன்மீகமும் சீரழிந்து வருகின்றன – கர்தினால் மெல்கம் ரஞ்சித்

நவீன மனித சமுதாயத்தில் மதமும் ஆன்மீகமும் பின்தள்ளப்பட்டு, மனித விழுமியங்கள் சீரழிந்து வருவதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மாகேவிட்ட பகுதியில் அமைந்துள்ள ‘திவ்ய இரட்சகர்’ தேவாலயத்தின் 150ஆவது ஆண்டு ஜூபிலி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விசேட மாலை கூட்டுத் திருப்பலியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பல வளர்ச்சியடைந்த நாடுகளில் மக்கள் வார இறுதி நாட்களில் தேவாலயங்களுக்குச் செல்வதை விடுத்து, பொழுதுபோக்கு மற்றும் உல்லாசப் பயணங்களில் அதிக நேரத்தை செலவிடுவதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், ஐரோப்பாவின் பல பிரம்மாண்ட பேராலயங்கள் இன்று மக்கள் வருகை குறைந்து வெறிச்சோடியுள்ள நிலையில், கால்பந்து மைதானங்கள் ஆயிரக்கணக்கான மக்களால் நிரம்பி வழிவதாகவும், இது மனிதர்களின் முன்னுரிமைகள் மாறிவருவதை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சியடைந்த பல நாடுகள், தார்மீக மற்றும் ஆன்மீக ரீதியில் வீழ்ச்சியை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டிய அவர், மனிதர்கள் தங்களது மனித விழுமியங்களை விட பௌதிக மற்றும் சரீரத் தேவைகளுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கும் நிலை உருவாகியுள்ளதாகக் கூறினார்.

இத்தகைய சூழலில், மனிதனின் ஆன்மீக வாழ்க்கை சமூகத்தில் மிகவும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தனது உரையில் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button