இலங்கை

சஜித்தால் முடியவில்லை; எதிர்க் கட்சிக்குத் தலைமை தாங்குவதற்கு நாமல் தயார்

எதிர்க்கட்சித் தலைவரினதும், எதிர்க்கட்சியினதும் பலவீனத்தை பயன்படுத்தி அரசாங்கம் தமக்கு தேவையானவற்றை செயற்படுத்தி வருகின்றது என்றும், இந்த நிலைமை தொடர்ந்தால் எதிர்காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எவரும் இருக்க மாட்டார்கள் எனவும், இதனால் எதிர்க்கட்சிக்கு தலைமை வகிக்க நாமல் ராஜபக்‌ஷ தயாராக இருக்கின்றார் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் ஊடக பேச்சாளரான சட்டத்தணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மனோஜ் கமகே மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் ஜனநாயகம் படு பாதாளத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விழிப்பாக இருக்க வேண்டும். இதற்கு நீங்களே தலைமைத்துவம் வழங்க வேண்டும். உங்களால் முடியாவிட்டால் கூறுங்கள். நாமல் ராஜபக்‌ஷ தலைமைத்துவத்தை வழங்குவார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை உங்களிடமே மக்கள் வழங்கியுள்ளனர். ஆனால் நீங்கள் அந்தப் பணிகளைச் செய்வதில்லை.

இந்த நேரத்தில் மகிந்த ராஜபக்‌ஷ எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருந்தால் நாடு எங்கு இருந்திருக்கும். ஆனால் இன்று எதிர்க்கட்சி நாளுக்கு நாள் துண்டுகளாக உடைந்து போகின்றன.இதன் நன்மைகள் அரசாங்கத்திற்கே கிடைக்கும். எதிர்க்கட்சியின் பலவீனத்தால் அரசாங்கத்திற்கு நினைத்ததை செய்ய முடியுமாக இருக்கும். இப்போது எதிர்க்கட்சி ஒன்றிணைய வேண்டும். ஆனால் எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் மிகவும் மந்தமான போக்கிலேயே இருக்கின்றது. இந்த நிலைமை தொடர்ந்தால் சஜித் மட்டுமல்ல எதிர்க்கட்சியில் எவரும் இருக்கமாட்டார்கள்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பக்கத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கே அதிக பெரும்பான்மை உள்ளது. இதனால் எதிர்க்கட்சியில் பெரும்பான்மையினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு அழைப்பு விடுத்தால் மட்டுமே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கலாம். ஆனால் நாமல் ராஜபக்‌ஷ ஏற்கனவே எதிர்க்கட்சியின் பணிகளை உத்தியோகபூர்வமற்ற முறையில் முன்னெடுக்கின்றார். அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் முதுகெலும்புடன் கதைப்பதில்லை. நாமல் ராஜபக்‌ஷ மட்டுமே அவ்வாறு கதைக்கின்றார். நழுவல் போக்கிலேயே தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் செயற்படுகின்றார். இதனால் எவ்வேளையிலும் எதிர்க்கட்சிக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு பொதுஜன பெரமுன தயாராக இருக்கின்றது என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button