இலங்கை

கோட்டாபய ராஜபக்ச சிக்கப்போகும் மாத்தளை மனிதப் புதைக்குழி விவகாரம்!

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம் திகதி முதல் 1990 ஜனவரி வரை மாத்தளை மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாகக் கடமையாற்றியவர் லெப்டினன்ட் கேர்ணல் கோட்டாபய ராஜபக்ச.

இவர் கஜபா படையணியின் முதலாவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகக் கடமையாற்றியுள்ளார். அந்த காலத்தில் பாதுகாப்பு சம்பந்தமான அனைத்து பொறுப்புக்களும் இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரிக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த மனித புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் தான் அன்று இராணுவ முகாம் இருந்துள்ளதாக நீதிமன்றத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் கோட்டாபய ராஜபக்ச சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகம் வலுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க அன்று முன்னிலையில் செயற்பட்டவராவார்.

2012 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புதைக்குழி

2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாத்தளை மாவட்டத்தில் (Bio Gas) நிலையம் ஒன்றை அமைப்பதற்காக நிலத்தை தோண்டியபோதே இந்த மனித புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின்னர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் அஜித் ஜயசேன ஆகியோர் விசாரணை நடத்தி ஒரு சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அதன் பின்னர் அன்றைய ராஜபக்ச அரசாங்கம் இதுகுறித்து ஒரு ஆணைக்குழுவை நியமித்தது. அந்த ஆணைக்குழுவின் அறிக்கையில், இந்த எச்சங்கள் 1950-க்கு முந்தியவை என்று கூறப்பட்டது.

ஆனால் பேராசிரியர் ராஜ் சோமதேவவும் வைத்தியர் அஜித் ஜயசேனவும் தெளிவாக, இவை 1986 முதல் 1990 வரையிலான காலப்பகுதியில் நிகழ்ந்த கொலைகளுடன் தொடர்புடையவை எனக் குறிப்பிட்டனர்.

இந்த உடல்களில் பலவற்றில் சித்திரவதைக்கான தெளிவான அடையாளங்கள் காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். உடலின் பல பகுதிகளில் கூர்மையான பொருட்களால் குத்தப்பட்ட அடையாளங்கள் இருந்தன.

கோட்டாபய ராஜபக்ச சிக்கப்போகும் மாத்தளை மனிதப் புதைக்குழி விவகாரம்! | The Matale Mass Grave Issue Gotabaya Rajapaksa

கழுத்தில் கயிறு போடப்பட்டதைக் காட்டும் தடயங்களும் இருந்தன. பல்வேறு வகையான சித்திரவதைகள் செய்யப்பட்டதற்கான தெளிவான சான்றுகள் காணப்பட்டன.

இந்த விவகாரம் குறித்து இன்று நீதிமன்றம் ஒரு உத்தரவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கமால் குணரத்ன மற்றும் ஷவேந்திர சில்வா போன்ற இராணுவ அதிகாரிகளும் சில காலங்களில் அந்தப் பகுதிகளை பொறுப்பேற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த விவகாரம் மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.

1988–89 காலப்பகுதியில் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அரசாங்கம் நாடு முழுவதும் உத்தியோகப்பூர்வமாக அல்லது உத்தியோகப்பூர்வமற்ற வகையில் கொலைக் குழுக்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் ஆறுகள், ஏரிகள் போன்ற இடங்களில் மறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் காலப்போக்கில் சில ஆதாரங்கள் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. மாத்தளை கூட்டுப் புதைகுழி அவற்றில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், காணாமல் போனவர்களின் உறவினர்கள் பல ஆண்டுகளாக நீதிக்காக மாத்தளை நீதிமன்றத்திற்கும் பல்வேறு அதிகாரிகளிடமும் முறையிட்டு வருகின்றனர். இருப்பினும் இதுவரை அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

கிடைக்காத நீதி

அண்மையில் சட்டத்தரணி ஹிமாலி குலரத்ன, மாத்தளை மனித புதைகுழி தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், சுமார் 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மேலும், மீட்கப்பட்ட எச்சங்களுக்கு DNA பரிசோதனை நடத்தவும்,

இந்த வழக்கில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க தேவையான உத்தரவுகளை வழங்கவும் அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச சிக்கப்போகும் மாத்தளை மனிதப் புதைக்குழி விவகாரம்! | The Matale Mass Grave Issue Gotabaya Rajapaksa

இந்த மனுவை பரிசீலித்த மாத்தளை நீதிவான், இது நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்கு என்றும், பல விடயங்களை ஆய்வு செய்ய வேண்டியிருப்பதால் உடனடியாக உத்தரவு வழங்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இதற்காக மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் ஜூலை 16 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது. அதனுடன் இந்த விவகாரம் மீண்டும் பொதுமக்களின் கவனத்திற்கு வந்துள்ளது.

அறிக்கைகளின்படி, அந்த கூட்டுப் புதைகுழியில் இருந்து மொத்தம் 154 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button