இலங்கை

நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி தமிழருக்குக்கு எதிரான செயல்கள்;  தொல்லியல் திணைக்கள பணிப்பாளரிடம் தமிழரசுக் கட்சி

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு நியாயமானதும் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளதுடன் நீதிமன்ற உத்தரவுகளை மீறிய வகையில் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பாக நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

தொல்லியல் திணைக்களம் இன, மத பாகுபாடின்றி செயற்படுகிறது என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடையே ஏற்பட வேண்டுமெனில், திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய வளாகத்தில் உள்ள 54 கடைகள் அகற்றப்பட வேண்டும் என்றும், போரதீவுப்பற்று பிரதேச சபை மற்றும் வாழைச்சேனை பிரதேச சபைகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற வழக்குகள் மீளப் பெறப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தினார்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நேரடியாக விஜயம் செய்து, தாந்தாமலை முருகன் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காணப்படும் தொல்லியல் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும், தொல்லியல் திணைக்களத்தின் இலச்சினையில் ஒரு மதத்தை மட்டுமே பிரதிபலிக்கும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளதுடன், ஏனைய மதங்கள் மற்றும் இனங்களின் அடையாளங்கள் பிரதிபலிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே, அனைத்து இனங்களையும் மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அந்த இலச்சினையை மாற்றியமைக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தினார்.
அதேவேளை, குச்சவெளி பிரதேசத்தில் 37 கிலோ மீற்றர் தூரப் பகுதியில் 42 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளமை குறித்தும், அவற்றுக்கும் தொல்லியல் திணைக்களத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதனுடன், திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் நீண்டகாலமாக முன்னெடுக்கப்படாமல் உள்ள மணிக் கோபுரத் தூண் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளுக்கான அனுமதிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

மேலும், குருந்தூர்மலை, வெடுக்குநாறி மலை உள்ளிட்ட இடங்களில் தமிழ் மக்கள் தங்களது வழிபாட்டு உரிமையை சுதந்திரமாகப் பயன்படுத்துவதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை, நீதிமன்ற உத்தரவுகள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தீர்ப்புகள் முறையாக அமுல்படுத்தப்பட்டால் வழிபாட்டு உரிமைகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது என்றும், ஆனால் நடைமுறையில் நீதிமன்ற உத்தரவுகளை மீறிய வகையில் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன என்றும் சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button