இலங்கை

2022-ல் அநுர கூறியதை இப்போது நடைமுறைப்படுத்த வேண்டும்; நீதியமைச்சர் விலக வேண்டும்

சிறைச்சாலையில் இடம்பெறும் மோதல் மற்றும் பதிவாகும் உயிரிழப்புக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறிப்பிட்டார்.ஆகவே ஜனாதிபதியின் கருத்துக்கமைய தற்போதைய நீதியமைச்சர் உடன் பதவி விலக வேண்டும். நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் தோல்வியடைந்தாலும், மக்கள் மத்தியில் வெற்றிப்பெறும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில்   நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

சுங்கத்தில் இருந்து எவ்விதமான பரிசோதனைகளுமின்றி விடுவி;க்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடளித்து 1 வருடமாகியுள்ள நிலையில் இதுவரையில் எவ்வித விசாரணைகளும் இடம்பெறவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் துறைமுக விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சரான சபாநாயகர் பிமல் ரத்நாயக்க ‘ தன்மீது குற்றச்சாட்டுக்கள் ஏதும் காணப்பட்டால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தன்னை விசாரணைக்கு அழைத்திருக்கும்.ஆனால் இதுவரையில் அவ்வாறான எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை’என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வினவிய போது விசாரணைகள் முறையாக இடம்பெறுதாக அறிவிக்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட பிமல் ரத்நாயக்கவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்றுவரை விசாரணைக்கு அழைக்காமல் இருப்பது ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள்,முன்னாள் அமைச்சர்கள் விடயத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வினைத்திறனாகவும், விரைவாகவும் செயற்படுகிறது.ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கு ஆணைக்குழுவால் விசேட சலுகை வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை கண்டு ஆணைக்குழு அச்சமடைகிறதா என்று கேட்கிறோம்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரத்தில் நீதியமைச்சருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ளது.இதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

சிறைச்சாலையில் நிலவும் நெரிசலை கட்டுப்படுத்த நீதியமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.2024 முதல் 2026 வரையான காலப்பகுதியில் சிறைச்சாலையின் நெரிசல் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 85 சதவீதமானோர் விளக்கமறியலில் உள்ளவர்கள்.இவர்களில் 75 சதவீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களின் வழக்குகளை விரைவுப்படுத்துவதற்கு அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

அதேபோல் சட்டமா அதிபர் திணைக்களம், கீழ் மற்றும் மேல் நீதிமன்றங்களில் நிலவும் ஆளணி பற்றாக்குறைக்குத் தீர்வு காண்பதற்கு அமைச்சர் கவனம் செலுத்தவில்லை. ஜனாதிபதிக்கு அறிவுறுத்தவில்லை.

சிறைச்சாலையில் இடம்பெறும் மோதல் மற்றும் பதிவாகும் உயிரிழப்புக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறிப்பிட்டார்.ஆகவே ஜனாதிபதியின் கருத்துக்கமைய தற்போதைய நீதியமைச்சர் உடன் பதவி விலக வேண்டும். நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் தோல்வியடைந்தாலும், மக்கள் மத்தியில் வெற்றிப்பெறும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்துக் கொண்டு கடந்த காலங்களில் குறிப்பிட்ட கருத்துக்கள் மற்றும் வெளிப்படுத்திய எதிர்ப்புகள் அனைத்தும் இன்று அவருக்கும், அரசாங்கத்துக்கும் எதிராக திரும்பியுள்ளது.இதனையே கர்மவினை என்பார்கள் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button