இலங்கை

அரசை விமர்சித்து சரியான பாதைக்கு திருப்புவோம்; கவிழ்க்கும் காலம் இன்னும் வரவில்லை

அரசாங்கத்தின் பயணத்தில் தவறு இருந்தால் அதனை சரி செய்யும் வகையில் அரசாங்கத்தை விமர்சித்து சரியான பாதைக்கு திருப்பும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அவ்வாறு இல்லாமல் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான காலம் இன்னும் வரவில்லை என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஜனநாயக இடதுசாரி முன்னணி கட்சி காரியாலயத்தில்  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மத்திய கிழக்கு யுத்தம் சிறிய நாடான எமது நாட்டுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. என்றாலும் தற்போது ஓரளவு சுமுகமான நிலை அங்கு ஏற்பட்டதால், எரிபொருட்களின் விலை உலக சந்தையில் குறைவடைந்தது. அதன் நன்மையை நாட்டு மக்களுக்கு வழங்கும் வகையில் அரசாங்கமும் எரிபொருட்களின் விலையை சிறியதொரு தொகையில் குறைக்க நடவடிக்கை எடுத்திருந்தது. உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்தவடைந்ததற்கு நிகராக எமது நாட்டில் விலை குறைவடையவில்லை. அவ்வாறு குறைவடைய வேண்டும் என கோருவதும் நியாயம் இல்லை. ஏனெனில் அரசாங்கத்தின் வருமானம், நிறுவனங்களின் கடன்களை அடைப்பதற்கு இந்த எரிபொருள் வருமானத்தில் ஒரு பகுதியை அரசாங்கம் பெற்றுக்கொள்கிறது.

அதேநேரம் தரம் குறைந்த நிலக்கரி இக்குமதி காரணமாக, மின் உற்பத்திக்கு எரிபொருளை பயன்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. அதனால் எரிபொருள் செலவு இரட்டிப்பாக அமைந்துள்ளது. இவ்வாறான நிலையில் அரசாங்கம் ரஷ்யாவுடன் கதைத்து, அங்கிருந்து குறைந்த விலையில் எரிபொருளை கொள்வனவு செய்ய முடியுமாக இருந்தும் அரசாங்கம் அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அரசாங்கத்தின் தவறான நடவடிக்கையாகும். இதுதொடர்பில் அரசாங்கத்துக்கு பல தடவைகள் நாங்களும் தெரிவித்திருக்கிறோம். ஆனால் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவருகிறது.

அதேநேரம் ஆளும் அரசாங்கங்களின் மக்கள் ஆதரவு தொடர்பில் வேறு நாடுகளில் காலத்துக்கு காலம் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இலங்கையிலும் அவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் அரசாங்கத்துக்கு எந்தளவு மக்களின் ஆதரவு இருப்பதை உணர்ந்துகொள்ள முடியும். அரசாங்கத்தின் வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அந்த வருமானம் மக்களின் தேவைக்காக செலவிடப்படாவிட்டால் அந்த வருமானத்தில் எந்த பயனும் இல்லை. மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்து வருகிறது. அரசாங்கம் அதற்காக நிதி செலவிடாமல் இருப்பதாலே மருந்து தட்டுப்பாட்டுக்கான காரணமாகும். அதனால் அரசாங்கம் அதிக வருமானம் ஈட்டுவதுபோல், மக்களின் தேவைக்காக செலவிடவும் வேண்டும். அதற்காக நாணய நிதியத்தின் தடைகளில் இருந்து அரசாங்கம் விலகவும் வேண்டும்.

அத்துடன் வளமான நாட்டை ஏற்படுத்துவதாகவும் அழகான வாழ்க்கையை அமைப்பதாகவும் தெரிவித்தே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. என்றாலும் அரசாங்கத்தின் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற சில காலம் செல்லும். ஏனெனில் அரசாங்கம் நாலா பக்கத்தாலும் பல்வேறு நெருக்கடிகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளதால், இதனை மேற்கொள்ள முடியாமல் இருக்கிறது. அதனால் ஆரம்பமாக வளமான நாட்டை ஏற்படுத்திய பின்னர் மக்களுக்கு அழகான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்கும். என்றாலும் மக்களின் செலவுகளை குறைந்து வளப்படுத்தாதவரை நாட்டை வளப்படுத்த முடியாது. அதனால் அரசாங்கத்தின் பயணத்தில் தவறு இருந்தால் அதனை அதனை சரி செய்யும் வகையில் அரசாங்கத்தை விமர்சித்து சரியான பாதைக்கு திருப்பும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அவ்வாறு இல்லாலமல் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான காலம் இன்னும் வரவில்லை.

அதனால் யாருடனாவது இணைந்து அரசாங்கத்தை வீழ்த்தவேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி செயற்பட்டால், கூட்டு எதிர்கட்சி நிராகரிக்கப்படும். அதேநேரம் கூட்டு எதிர்க்கட்சியிம் கொள்கை வரைபு ஒன்று இல்லை. அதனால் நாங்கள் கூட்டு எதிர்க்கட்சியில் இணையவில்லை. அதேநேரம் அரசாங்கத்துக்கு நாங்கள் காலம் வழங்க வேண்டியதில்லை. அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறதா இல்லைையா என்பதை மக்கள் தேர்தல்களின்போது அரசாங்கத்துக்கு உணர்த்தும். உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகளின் அடிப்படையில் அரசாங்கத்துக்கு மக்கள் ஆதரவு சற்று குறைவடைந்துள்ளது. அடுத்ததாக மாகாணசபை தேர்தலை நடத்தினால், மக்களின் ஆதரவு அரசாங்கத்துக்கு எந்தளவு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button