இலங்கை

புதிய தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் இணைவு எதிர்க்கட்சித் தலைவரின் பிரச்சினை ; அமைச்சர் நளிந்த சாடல்

நாட்டில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட 6 பிரதான அரசியல் கட்சிகள் உடன்பாடுகளை எட்டியுள்ளமை மற்றும் எதிர்க்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகள் என்பன அரசாங்கத்தின் பலவீனத்தால் உருவானவை அல்ல. எதிர்க்கட்சியினரை ஒன்றிணைத்து வழிநடத்துவது எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பாகும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்த ஒன்றிணைவின் பின்னணியில் அரசாங்கம் இருப்பதாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நாம் முழுமையாக நிராகரிக்கிறோம். எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் ஒன்றிணைந்து பயணிக்க முடியாமல், வௌ;வேறு பெயர்களில் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்துவது குறித்து எங்களிடம் கேள்வி எழுப்புவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஆளுங் கட்சியிலோ அல்லது எமது தரப்பிலோ ஏதேனும் பிளவுகள் ஏற்பட்டிருந்தால் அது குறித்து எங்களிடம் கேள்வி எழுப்புவது நியாயமானது.

பாராளுமன்றத்தில் எமக்கு 159 உறுப்பினர்களுடன் கூடிய பலமான பெரும்பான்மை பலம் உள்ளது. அதனைக் கொண்டு நாம் எமது பணிகளைச் சரியாக முன்னெடுத்து வருகிறோம். ஆனால், எதிர்க்கட்சியில் உள்ளவர்களை ஒன்றாகத் தக்கவைத்துக்கொண்டு, அவர்களை வழிநடத்துவது எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பாகும். அவரோடு இணைந்து செயற்பட முடியாமல்தான் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு மேலும் மேலும் பிரிந்து செல்கிறார்களா என்பது எங்களுக்குத் தெரியாது. அது அவர்களின் உள்வீட்டுப் பிரச்சினையாகும்.

தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வு வழங்காது என்றோ, அல்லது அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் எதிர்ப்பு அலை உருவாகியதன் காரணமாகவே எதிர்க்கட்சிகள் இவ்வாறு ஒன்றிணைகிறார்கள் என்றோ கூறுவது முற்றிலும் தவறான கருத்தாகும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button