ஈழத்து இலக்கிய வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமை எஸ்.பொன்னுத்துரை(எஸ்.பொ)…. சம்பர்தாசன் கனகசூரியம் யோகானந்தன்


வட புலம் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். பல்துறை ஆற்றல் கொண்ட இவர் சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு,நாடகம் என சகலவற்றிலும் தனி முத்திரை பதித்தார். சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் போன்றவற்றில் பட்டப்படிப்பு மேற் கொண்டவர். பன்மொழிப்புலமை கொண்டவராக விளங்கியதோடு, மட்டக்களப்பு, நைஜீரியா போன்ற இடங்களில் ஆங்கில ஆசிரியராகத் தொழில் புரிந்தவர். நெஞ்சுரம், துணிச்சல் ஆளுமை கொண்டவர். இலக்கிய உலகில் கேலியாக ‘கலகக்காரர்” என்று அழைக்கப்பட்டார்.
“சடங்கு ” தீ” போன்ற நாவல்களை இலக்கிய உலகிற்குத் தந்தவர்.தமிழ்நாட்டில் வாழ்ந்த காலத்தில் “மித்திர”பதிப்பகத்தால் தொடங்கி, ஏராளமான நூல்களை வெளியிட்டார். “வரலாற்றில் வாழ்தல்” என்னும் 2000 பக்கங்கள் கொண்ட சுயசரிதையை எழுதி, இலக்கிய உலகில் புதிய பதிவினை மேற்கொண்டவர். மகாவம்சத்தைத் தமிழில் மோழிபெயர்த்த பெருமை இவரையே சாரும். இடதுசாரியச் சிந்தனையோடு, மூத்த எழுத்தாளர் தளையசிங்கம் அவர்களுடன இணைந்து பணியாற்றினார். இவர் தனது எழுத்துக்கள் மூலம் எல்லோராலும் நன்கு அறியப்பட்டதோடு, ஈழத்து ஜெயகாந்தன் எனவும் மதிக்கப்பட்டார்.
இவரின் “வீ” என்ற சிறுகதைத் தொகுப்பில் இருந்து “தேர்” என்ற சிறுகதை ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. இக்கதையானது சமூகவமைப்பினையும், குடும்ப உறவினரும் படம் பிடித்துக் காட்டுகிறது. கடந்தகால வாழ்க்கை, பிள்ளைகள் பற்றிய குடும்ப விடயங்கள், கொண்டமைவதோடு, பிரதான பாத்திரத்தின் மனவோட்டம் கதையில வந்துபோகும் முன்னோட்டம், பின்னோட்டம் தெளிவு படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.
மனித வாழ்வின் தொடக்கத்திலே கூட்டு வாழ்வின் தேவை உணரப்பட்டது. மனிதன் சமுதாய விலங்கு என்றவகையில், அவனுடைய அடிப்படைச் செயல்களான உணவுண்ணுதல், மூச்சுவிடல், இறங்குதல் முதலிய செயற்பாடுகள் சிலவற்றை மாத்திரமே அவனால் தனிமனிதனாக நின்று செயலாற்ற முடிந்தது. ஏனைய செயல்களைச் செய்வதற்காக ஒருவர் மற்றவரோடும் சேர்ந்தும் கூட்டாகச் செயல்பட வேண்டியுள்ளது. சேர்ந்து வாழ்தல் என்பது கட்டாயமானது.என அனைவராலும் உணரப்பட்டது. உலகம் முழுவதும் பரவிவாழ முற்பட்ட மனிதர்களிடத்தே திருமணம், குடும்பம், உறவுமுறை, சமூக ஒழுங்கு போன்றவற்றில் இன்றுவரை ஒத்த தன்மை ஏற்படவில்லை. சிக்கலான சமூக உறவுத் தொடர்புகளையே சமூகம் என்கின்றனர். குடும்பம் என்பது எல்லாச் சமூகங்களிலும் உள்ள அடிப்படை அமைப்பு. அதிலிருந்துதான் உறவு தோன்றுகிறது. சமுதாயம் என்பது, உறவு முறைகளால் பின்னப்பட்ட வலைபோலுள்ளது. இக்கதையில் குடும்பத் “தேர்” ஓடுவதற்கு அச்சாணி தேவையாக உள்ளது. இதைத்தான் “அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது. என்பர். இதனுடைய மையக் கருவாகப் புது வருடத்தில் யாழ்ப்பாண வீட்டில் ஒன்றுகூடும் குடும்பத்தைப் பற்றியது. இக்கதையில் பாத்திரங்கள் ஏராளமாக அமைந்திருந்தாலும் கதைப் பின்னல் சிறப்பாக அமைந்துள்ளது.பி ரதான பாத்திரம் முகத்தார் (ஆறுமுகம்). இவரின் மனைவி பார்வதிப்பிள்ளை இறந்துவிட்டார்.
முகத்தாரின் பிள்ளைகள் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் வாழுகிறார்கள். சித்திரைப் புதுவருடத்தைக் கழிப்பதற்காக, தந்தையின் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். கதையாசிரியரே கதை சொல்லியாக மாறிவிடுவதைக் காணலாம். “தேர்” என்பது குறியீட்டு வடிவமாக குடும்பத்தைக் குறிக்கிறது.இதுவே குடும்பத்தின் இயக்க சக்தியாகப் பார்க்கப்படுகிறது. இக்கதையின் மூலமாக எஸ்.பொ சமுதாயச் சிக்கல்கள் தனிமனித நடவடிக்கைகளால் ஏற்படுத்தப்படும் வேண்டத்தகாத செயல்கள் போன்ற வற்றைக் கூறுவதோடு, சிலவேளைகளில் ஏற்றுக் கொள்ளப்படுவதையும் தீர்வுகளாக காட்டுகிறார்.குடும்பத்தேர் இயங்குவதற்கு அச்சாணி தேவைதான் என்பதனையும் மறைமுகமான அச்சாணியாக முகத்தார் காட்டப்படுகின்றார். இவரே தேரை இழுத்துச் செல்கிறார்.
கதையானது மனவோட்டத்திற்கேற்ற வகையில் நகர்ந்து செல்வதைக் காணலாம். முகத்தாரின் கடந்தகால வாழ்க்கை குடும்ப விடயங்கள் விரிந்து செல்வதைக் காணலாம். இவருடைய பிள்ளைகளாக, மூவர் ஆண்களும் மூவர் பெண்களுமாக, அறுவர் காட்டப்படுகின்றனர். மூத்தவன் சுப்பிரமணியம் கொழும்பில் வாழ்கிறான். இரண்டாவது மகன் குமாரசாமி கிறித்தவ பெண்ணை மணமுடித்து, கொழும்பில் வாழ்கிறான். புதுவருடத்திற்காகாகக் குடும்பத்தோடு யாழ்ப்பாணம் வந்திருக்கிறான். திருமண வயதில் தங்கை இருப்பதையும் மறந்தது காதல் மணம் புரிந்துள்ளமையானது முகத்தாருக்கு இவன்மீது வெறுப்பை ஏற்படுத்திய இருந்தாலும் மனதைக் கட்டுப்படுத்திச் சமாளித்துக் கொள்கிறார். கடைசி மகன் மனோகரன் கொழும்பிலுள்ள தனியார் நிறுவனம்மொன்றில் வேலை செய்கிறான். தனது சகோதரியின் மகளைத் திருமணம் செய்துவைக்க முகத்தார் ஆசையோடு காத்திருக்கிறார்.
மூத்த மகளாகிய செளந்தரம் புதுவருடத்திற்குக் கணவனின் உறவுகளின் வருகைக்காகக் காத்திருந்த போதும்கூட, அவர்கள் தனது மகளை மாத்திரம் அனுப்பி வைத்துள்ளனர். குடும்பத்திலே அன்பு நிறைந்த பாத்திரமாகவும், பொறுப்பு நிறைந்த பாத்திரம்மாகவும் விளங்குகிறாள் சௌந்தரம். தனது பிள்ளைகளை முகத்தார் அன்புடன் வரவேற்பதும், மகிழ்ச்சி அடைவதும் அவர்களுக்காகக் காய், கற வாங்கி வருவதும் தமிழர் பண்பாட்டின் அம்சமாகத் தனது கையினால் “கை விஷேசம்” கொடுப்பதையும் கதையாசிரியர் அழகாகச் சித்திரித்துக் காட்டுகிறார். இந்த வேளையில் இறந்து போன தனது மனைவியையும் அவளுடைய அன்பையும் மனவோட்டம் மூலமாக நினைவு படுத்திக் கொள்வது சற்று நெகிழ்ச்சியை வாசகர் மனதில் ஏற்படுத்தத்தான் செய்கிறது. பெருநாளை யாழ்ப்பாண மக்கள் வரவேற்பதும், அதனை உறவுகளோடு சேர்ந்து கொண்டாடி மகிழ்வதையும் கதையாசிரியர் மனக் கண்முன்னே படம் பிடித்துக் காட்டுகிறார்.
வருடப் பிறப்பு நாளில் முகத்தாரின் நண்பரான ஐயம்பிள்ளை கொடுத்த சாராயத்தை நண்பர்களோடு சேர்ந்து குடிப்பதில் ஆனந்தம் அடைகிறார். இக்கதையில் வரும் மொழிக் கையாளுகை அதுவும யாழ்ப்பாணத் தமிழில் குறிப்பாகப் பேச்சுத் தமிழில் வருவது, அலாதியானது. பாத்திரங்களை இயல்பாகவே வார்த்தெடுத்த ஆசிரியர் கதையை நகர்த்திச் செல்வது சிறப்பு எனலாம். கதைத் தலைப்புக்குப் பொருத்தமான வகையில் ஏனைய பாத்திரங்கள் பிரதான பாத்திரத்தோடு இணைந்துசெல்லும் போக்கையும் காணலாம். ஆரம்பத்தில் வர்ணனைகளோடு, கதை நகர்ந்து செல்வதைக் காணலாம்.கதையின் பிரதான பாத்திரத்திரமான முகத்தார் வாசகர்களை உடன் அழைத்துக் கொண்டு பயணிக்கிறார்.
நித்திரை விட்டு எழுந்திருப்பதோடு, கதை ஆரம்பமாகிறது. மகன் வாங்கி வந்த இஞ்சி பிஸ்கட்டினை மெல்ல மெல்ல மென்று சாப்பிடுகிறார். யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ் மக்களின் வாழ்வியலின் வெட்டு முகம் போன்றவை, வாசகர்களை யாழ்ப்பாணம் நோக்கி நகர்த்திச் செல்ல முற்படுவதைக் காணலாம்
கதையாசிரியர் எஸ்.பொ அவர்கள் எங்கெங்கெல்லாமோ தொழில் நிமித்தம் சென்று வந்திருந்தாலும் யாழ்ப்பாணத்தின் மீது கொண்டிருந்த ஈடுபாட்டினை முழுமையாகக் காண முடிகிறது. ஈழத்திலும்சரி தமிழகத்திலும்சரி புனைகதை இலக்கியம் ‘என்றவடிவம் தோற்றம் பெற்ற போதும், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தின் அபிலாசைகளின் வெளிப் பாடுகளின் சாதனமாகவே தொழில் பட்டது எனலாம்.
![]()
இலக்கியம் என்பது படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் மனநிறைவு தருவதாக அமைந்திருந்தது. படைப்பாளன் தான் பெற்று அனுபவித்த இன்ப-துன்பங்களை அப்படியே வாசகனுக்குக் கொடுக்கும் போது மனநிறைவடைகிறான் . சிறுகதையானது, வாசகனுக்குச் சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்டு சேர்ப்பதோடு எழுத்தாளனைப் பற்றிய உன்னத உணர்வினை ஏற்படுத்தி விடுகிறது.”தேர்”என்ற சிறுகதை யானது குடும்பத்தையும், அதில் வருகின்ற சிக்கல் நிறைந்த பலவித முடிச்சுக்களையும் அப்படியே அவிழ்த்து விடுகிறது.
சிறுகதைகள் பாமர மக்கள் படிப்பதற்காகவும் ஒருவர் படித்துச் சொல்ல மற்றவர்கள் அதனைக் கேட்டு இரசிப்பதற்குமான கருவியாக அமைவதைக் காணலாம். சிறுகதைகள் நாவல்களை முந்திக்கொண்டு விரைவாகவும் வேகமாகவும் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ளன. இந்திய பத்திரிகைகளில் எழுதி வந்த ஈழத்து எழுத்தாளர்கள் “ஈழகேசரி” பத்திரிகை வந்தது முதலாகத் தமது படைப்புக்களை ஈழகேசரியில்படைக்கத் தொடங்கினார்கள். இடதுசாரிச் சிந்தனை கொண்ட எஸ்.பொ முற்போக்கு எழுத்தாளர்களுக்கு எதிரான போக்கினைக் கொண்டு செயற்பட்டார். நற்போக்கான எழுத்தாளராகத் தன்னை மாற்றிக் கொண்டார்.
தேர் என்னும் சிறுகதை மூலமாக ஒரு தந்தையின் பக்கங்களையும், வேதனைகளையும், கவலையினையும் கண்டு கொள்ளலாம். திருமணமாகாத பெண் பிள்ளைகளின் திருமணத்தின்பின்னர்தான் ஆண் சகோதரர்கள் தாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும். என்பது தமிழர்களின் எழுதப்படாத விதியாகும். இது மாறுபடும் போது குடும்பங்களில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்பட்டு விடுவதுண்டு.
எஸ்.பொ அவர்கள் தனது எழுத்துக்களை வெளிப்படையாகக் கையாளும் தன்மை கொண்டவர். யார் எதைப்பற்றிச் சொன்னாலும் அதைப் பற்றி அவர் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அவருடைய பாத்திரங்கள் எப்போதும் சமூகத்தில் உறவாடியும், நடமாடியும் செல்வதைக் காணலாம். முகத்தார் “எல்லாம் அளித்தபடி தான் நடக்கும்” என மகன் வேதக்காரப் பெண்ணை திருமணம் செய்தமை சங்கடத்தை ஏற்படுத்தி இருந்தாலும் தனக்குள்ளே”வேதக்காரி என்றால் என்ன”ஊழ்ப்பானையில் விழுந்தவர்கள் ஏராளம்”என ஆறுதல் பட்டுக் கொள்கிறார். கதை முழுமையாகக் குடும்பப் பாங்கானதாகஅமைந்து செல்வதைக் காணலாம். அவருடைய எழுத்துக்கள் அவரைக் கடைசிவரைத் தமிழ் உலகின் மாபெரும் இலக்கிய ஆளுமையாகவே காட்டிச் செல்கிறது.

“தேர்’ சிறுகதையின் பொருளைப் போலவே, வடிவமும் கனகச்சிதமாக எஸ்.பொ அமைத்திருப்பார். எந்தச் சிறுகதையாக இருந்தாலும் ஆரம்பம் நடு-முடிவு என மூன்று கட்டங்களாக அமைந்திருப்பது கதைக்குச் சிறப்பாக அமைதல் வேண்டும். இது பற்றிய கருத்து முரண்பாடுகள் இலக்கிய உலகில் இல்லாமலில்லை. கிராமிய வாழ்க்கை முறை எழுத்தாளனின் அடிமனதின் ஆழத்தில் நிறைந்து காணப்படுகிறது. இவருடைய”சடங்கு ” நாவலானது , யாழ்ப்பாணச் சமுக அமைப்பை, வாழ்க்கைத் தவிப்பை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது. அவருடைய எழுத்துக்களில் புதுமைப்பித்தன் பல பரிசோதனைகளைச் செய்தது போல இவரும் பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளதைக் காணமுடிகிறது. தனது எழுத்துக்களை நேசித்த அவரை கர்வம்மிக்க ,எழுத்தாளுமை கொண்டவராகவே விளங்கினார். இளம்பிறை ரகுமானோடு, இறுதிவரை நட்பால் இணைந்திருந்தார். ஈழத்துப் பேராசிரியர்கள் சிலரோடு கடைசிவரை முரண்பட்ட போக்கினைக் கொண்டிருந்தார்.

இவருடைய இலக்கியப் படைப்புக்களில் அடக்குமுறையைத் தகர்த்தெறிந்து வெளி வருவதைக் காட்டியிருப்பார். தமிழக எழுத்தாளர்களாலும் வாசகர்களாலும் எஸ்.பொ நன்கு அறியப்பட்டவராக விளங்கினா அவருடைய “மாயினி” என்னும் நாவல் அரசியலையும் புனைவுகளையும் இணைத்துச் செல்வதாகவே அமைந்திருந்தது. “அடையமுடியாத இலட்சியக் கனவுகளின் பெருமூச்சுக்களே சிறுகதைகள்”என்ற கு.ப.ராவின் கூற்றுக்களை மெய்ப்பிக்கும் வகையில் ஈழத்துச் சிறுகதைகள்அமைந்திருப்பதைக் காணலாம். எஸ்.பொ கடினமான விடயங்களை மெதுவாகவே சொல்லிச் செல்லும் பாங்கு கொண்டவராக விளங்குகிறார் அவருடைய இறுதிக்காலமானது அவுஸ்ரேலியாவில் கழிந்து போனது.
அவுஸ்ரேலியாவில் வாழ்ந்த போதும் தனது எழுத்து முயற்சிகளில் ஆர்வம் காட்டியே வந்தார். 2014 வரை, தமிழ் கூறும் நல்லுலகில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளராக வாழ்ந்து தனது 82 ஆவது வயதில் இவ்வுலகிற்கு விடை கொடுத்துச் சென்றார். அவர் மறைந்து போனாலும் இவருடைய எழுத்துக்கள் சாகாவரம் பெற்றவையாக விளங்கிவருவதைக் காணலாம்.
![]()