இலங்கை

பொருளாதார நெருக்கடியை திசைதிருப்பவே கைதுகளும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளும்: நாமல் சாடல்!

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொருளாதாரக் கஷ்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமை ஆகியவற்றிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே, இளைஞர்களின் கைதுகளையும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளையும் அரசாங்கம் கையாண்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

கோட்டே பகுதியில் கடந்த ஜூலை 9ஆம் திகதி நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதிக்குரிய கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன. வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதுடன் முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில், சட்ட அமலாக்க நடவடிக்கைகளைப் பயன்படுத்தி அரசாங்கம் திட்டமிட்டபடி இளைய தலைமுறையினரைக் குறிவைத்து வருகிறது.

தேர்தலுக்கு முன்னர் வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட பட்டதாரிகள், அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் வேலை கேட்டுச் சென்றபோது பொலிஸாரின் அடக்குமுறைகளையே எதிர்கொண்டனர்.

வரி அதிகரிப்பு, அதிக கடன் வட்டி மற்றும் உற்பத்திச் செலவு உயர்வு ஆகியவற்றால் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறையினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல வியாபாரங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையின் பங்குச்சந்தை மீதான நம்பிக்கையை இழந்து வருகின்றனர். அத்துடன், அரசாங்கத்தின் முறையான ஆதரவின்றி சுற்றுலாத்துறையும் மேலதிக நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது.இலங்கை செய்திகள்

அண்மையில் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து அரசாங்கம் நடந்துகொண்ட விதம் வேடிக்கையானது. நாட்டின் நீதி அமைச்சர் பேஸ்புக் மூலமாகவே இந்தச் சம்பவத்தைப் பற்றித் தெரிந்துகொண்டார். சம்பவம் நடந்து பல மணித்தியாலங்கள் வரை அங்கு என்ன நடக்கிறது என்பது பற்றி அவர் அறிந்திருக்கவில்லை.

மறுபுறம் மின்சாரம், எரிபொருள் மற்றும் நீர் கட்டணங்கள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. அரசாங்கத்தின் பொருளாதார நிர்வாகச் சீர்கேட்டின் சுமை ஒட்டுமொத்தமாகப் பொதுமக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இதனால், ஆசிய பிராந்தியத்திலேயே வாழ்வதற்கு அதிக செலவுமிக்க நகரங்களில் ஒன்றாகக் கொழும்பு மாறியுள்ளது.

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இந்த அரசாங்கம் தவறிவிட்டது. எனவே, மேலும் மேலும் வரிகளை விதித்து மக்களை வதைக்காமல், தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறைக்கு உடனடி நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button