சிறைச்சாலை வன்முறைகளைத் தடுத்திருக்க முடியும் ; அரசாங்கத்தின் நிர்வாகக் கோளாறே பேரழிவுக்குக் காரணம் – ராஜித சேனாரத்ன

இலங்கை சிறைச்சாலைகளில் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் திட்டமிடப்படாத மற்றும் அலட்சியப் போக்கான நிர்வாகமே அண்மைய சிறைச்சாலை வன்முறைகள் இவ்வளவு பெரிய பேரழிவாக மாறுவதற்குக் காரணமாகும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வரலாறு முழுவதும் இது போன்ற பல சம்பவங்கள் சிறைச்சாலைகளில் நடந்துள்ளன. ஆனால், இம்முறை நடந்த சம்பவத்தின் முதல் நாளில் இரண்டு பேர் மட்டுமே கொல்லப்பட்டனர்.
வன்முறையில் ஈடுபட்ட இரு தரப்பினரில் ஒரு தரப்பை அதிகாரிகள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தியிருந்தால், அடுத்த நாள் மீண்டும் ஒரு கலவரம் வெடித்திருக்காது.
அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் உரிய நேரத்தில் புத்திமதி எட்டாததால், மோதிக்கொண்ட இரு தரப்பையும் ஒரே இடத்தில் அப்படியே விட்டுவைத்ததன் விளைவாகவே இரண்டாவது நாளில் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டது.Government
கலவரத்தின் போது அங்குள்ள அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்படுத்த அமைச்சரிடம் ஆலோசனைகளைக் கேட்க தங்களால் இயன்றவரை முயன்றனர்.
ஆனால், அமைச்சரைத் தொடர்பு கொள்ளவே முடியாமல் போயுள்ளது. அதைவிடக் கொடுமை என்னவென்றால், கடந்த 14 மாதங்களாக நாட்டுக்கு ஒரு சிறைச்சாலைகள் ஆணையாளர் நியமிக்கப்படவில்லை. ஒரு அடிப்படைத் தீர்மானத்தை எடுப்பதற்குக் கூட அங்கு தகுதியான அதிகாரி இல்லை.
இப்படியான பலவீனங்களின் காரணமாகவே இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. குதிரை ஓடிப் போன பிறகு லாயத்தைப் பூட்டுவதைப் போல, எப்போதும் ஒரு பேரழிவு நடந்த பிறகுதான் இந்த அரசாங்கம் விசாரணைக் குழுக்களை நியமிக்கிறது. சிறைச்சாலையின் மதில் சுவரில் ‘சிறைக்கைதிகளும் மனிதர்களே’ என்று எழுதப்பட்டுள்ளது.
அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருக்கலாம், ஆனால் அவர்களும் மனிதர்கள், நாட்டின் குடிமக்கள். அவர்கள் சிறைக்குள் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்ற செய்தி சர்வதேச அளவில் நாட்டிற்குப் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தும்.
இந்த மனித உரிமை மீறல் சம்பவங்கள் காரணமாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இலங்கைக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும். இது எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளுடனும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
இன்று பிரதான எதிர்க்கட்சியின் மௌனம் காரணமாகவே பல பிரச்சினைகள் தொடர்கின்றன. எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது கூட்டு வேலைத்திட்டமொன்றுக்கு உடன்பட்டுள்ளனர்.
இதற்கான திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும். நாமும், பொதுஜன பெரமுனவின் குறிப்பிட்ட தரப்பினரும், ஏனையோரும் இணைந்து ஒரு கூட்டு வேலைத்திட்டத்தை அமைத்தால், மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் ஒரு பெரும் மக்கள் சக்தி எமக்கு பின்னால் அணிதிரளும்.
ஆளும்கட்சியின் அமைச்சர்களும் பிரதேச சபை உறுப்பினர்களும் இன்று வீதிக்கு இறங்கினால் மக்கள் முகத்திற்கு நேராகவே திட்டுகிறார்கள், அடிக்கப் பாய்கிறார்கள். மக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
ஆனால், அரசாங்கத்துக்கு எதிராக மாறும் இந்த மக்களுக்குச் சென்று நிற்பதற்கு இன்னும் ஒரு சரியான தளம் அமையவில்லை. அந்த இடத்தை நாம் சரியாக அமைத்துக் கொடுத்தால் நாட்டின் அரசியல் சமன்பாடு மாறிவிடும். அதற்குத் தேர்தல் நடக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை; அரசாங்கங்கள் மாறுவதற்குத் தேர்தல்கள் மட்டுமே அவசியமில்லை என்றார்.
![]()