பலதும் பத்தும்

நீர்கொழும்புச் சிறைக்கு விரைவில் மூடுவிழா!; அது குற்றக் களமாக அறிவிப்பு

சிறைக் கைதிகளிடையே அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது சேதமடைந்த நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகம், கைதிகளைத் தடுத்து வைப்பதற்கு இனிப் பொருத்தமானதல்ல என சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

2026 ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையைத் தொடர்ந்து, சிறைச்சாலை கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், அது உத்தியோகபூர்வமாகக் குற்றக் களமாக (Crime Scene) வகைப்படுத்தப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

“இதன் காரணமாக, விசாரணையாளர்கள் சம்பவ இடத்தில் எவ்வித இடையூறுகளுமின்றி விசாரணைகளை மேற்கொள்வதற்கு வழிவகை செய்யும் அதேவேளையில், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெரும்பாலான கைதிகள் தற்காலிகமாக பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்” என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, மூடப்பட்ட காலி மஹாமோதர வைத்தியசாலை மற்றும் பழைய போகம்பறை சிறைச்சாலை வளாகம் ஆகியவற்றை தற்காலிக சிறைச்சாலைகளாக பிரகடனப்படுத்தி இரண்டு அதிவிசேட வர்த்தமானிகள் வெளியிடப்பட்டிருந்தன.

வன்முறை காரணமாகக் கடுமையாக சேதமடைந்த நீர்கொழும்பு சிறைச்சாலையின் பரந்தளவிலான புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை, மஹாமோதர மற்றும் பழைய போகம்பறை வளாகங்கள் தற்காலிக சிறைச்சாலைகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அவசர இடமாற்றங்கள் காரணமாக நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசல் மேலும் அதிகரித்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு அதிகரித்துள்ள கைதிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், அவர்களின் நலனை உறுதிப்படுத்தவும் மேலதிக தற்காலிக தங்குமிட வசதிகளின் அவசியத்தை அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button