எதிர்க்கட்சித் தலைவருக்கு சஜித் தகுதியற்றவர்; அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச இருபதையிட்டு அரசாங்கம் என்ற அடிப்படையில் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் அக்கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற பணம் தூய்தாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம்,நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம், நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடல் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தச் சட்டமூலம் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை.இது நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகல்ல,
சட்டமூலம் தொடர்பான விடயங்கள் பற்றி பேசுவதை விடுத்து தயாசிறி ஜயசேகர கைது செய்யப்படுவதை பற்றி பேசுகிறார். பணத்தூயதாக்கல் சட்டம் இயற்றப்பட்டவுடன் தயாசிறி ஜயசேகர கைது செய்யப்படுவார் என்று எதிர்க்கட்சித் தலைவர் கருதுகிறாரா?
சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதையிட்டு அரசாங்கம் என்ற அடிப்படையில் மகிழ்ச்சியடைகிறோம்.ஆகவே அவரிடமுள்ள குறைகளை கட்சியின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்ட வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சிறந்தவர்கள் பலர் உள்ளார்கள். அக்கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்.
பாதாள குழுக்களுடன் தொடர்புடைய கட்சியின் உறுப்பினர்களின் பெயர்களை குறிப்பிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் கேட்கின்றார் .சரித் அபேசிங்க ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அவர் பாதாளக் குழுவின் உறுப்பினர்களிடம் இலஞ்சம் பெற்றது நீதிமன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் எங்களிடம் யார் என்று கேள்வி கேட்கிறார் என்றார்.
![]()