கருணா, டக்ளஸ், சுமந்திரன் உட்பட 454 பேருக்கு உடனடியாக விசேட பொலிஸ் பாதுகாப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பொலிஸ் மா அதிபர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், பல விகாரைகளின் தலைமை விகாராதிபதிகள், ஒரு ஆயர் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் ஒருவரின் (மனைவி) உட்பட 454 பேருக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவினால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில், அனுராதபுரம், கொழும்பு, கண்டி போன்ற பகுதிகளில் உள்ள விகாரைகளின் தலைமை விகாராதிபதிகள் மற்றும் கண்டியின் கத்தோலிக்க ஆயர் ஆகியோருக்கும் இவ்வாறு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவியான முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஹேமா பிரேமதாச, முன்னாள் பொலிஸ் மா அதிபர்களான பூஜித் ஜயசுந்தர, தேசபந்து தென்னகோன், என். கே. இலங்ககோன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), டக்ளஸ் தேவானந்தா, சரத் பொன்சேகா, எம். ஏ. சுமந்திரன் ஆகியோருக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆவணம் வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன், சென்ட்ரல் பினான்ஸ் (Central Finance) நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் உறுப்பினர் ஒருவருக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும்கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களான ருவன் விஜேவீர, டபிள்யூ. எச். எம். தர்மசேன, அஜித் சாந்த பிரியதர்ஷன, எரங்க சுபாசிங்க, சரத் குமார ஆகியோருடன், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை அமைச்சர்கள், மகா நாயக்க தேரர்கள், இராஜதந்திரிகள், உயர் நீதிமன்ற, மேல் நீதிமன்ற மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், நீதவான்கள் மற்றும் சில ஓய்வுபெற்ற நீதித்துறை அதிகாரிகளுக்கு மேலதிகமாகவே இவர்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அச்சுறுத்தல் மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே இந்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
![]()