முச்சந்தி

இலங்கையை மீளக்கட்டியெழுப்ப இந்திய அரசின் நிதி பெறப்படும்

டித்வா புயல் அனர்த்தத்தின் பின்னர் இலங்கையை மீளக்கட்டியெழுப்புதல் மற்றும் புனரமைப்பு வேலைத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான மூலதனத்திற்கு இந்திய அரசின் நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான இருதரப்பினர்களுக்கிடையே ஏற்புடைய ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2025 நவம்பர் மாதம் இலங்கை எதிர்கொண்ட டித்வா புயல் அனர்த்தத்தின் பாதிப்புக்களால் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பௌதீகச் சேதங்கள் மற்றும் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பொருளாதாரச் சேதங்களுக்கான 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மீள்கட்டமைப்புக்குத் தேவையெனக் கண்டறியப்பட்டுள்ளது.

இவ் அனர்த்தத்தின் போது இந்திய அரசால் ‘சாகர்பந்து’ நடவடிக்கையின் கீழ் அனர்த்த நிவாரணங்கள் மற்றும் அவசர பதிலளிப்புக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கியுள்ளது. 2025.12.22 அன்று இந்தியாவின் வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான விஜயத்தின் போது இடம்பெற்ற கலந்துரையாடலில் ‘சாகர்பந்து நடவடிக்கையின்’ கீழ் இலங்கைக்கு அனர்த்த நிவாரண பக்கேஜ் ஒன்றை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்கீழ், 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாகவும் மற்றும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடையாகவும் மொத்தம் 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்திய அரசால் முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதியில், 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நீண்டகாலக் கடனாகவும் மற்றும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் குறுகியகால கடன் தொகையாக வழங்குவதற்கும், 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடையாக உட்கட்டமைப்பு வசதிகள், தொடர்பாடல், சுகாதாரம், கல்வி, வீடமைப்பு, நீர் வழங்கல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் போன்ற துறைகளை உள்ளடக்கியவாறு வழங்குவதற்கும் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கடன் வசதிகள் மற்றும் கொடையைப் பெற்றுக் கொள்வதற்கான இருதரப்பினர்களுக்கிடையே ஏற்புடைய ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button