இலக்கியச்சோலை

சரோஜாதேவி காலத்துத் தையல்காரன்: முடிவுகளால் சிதைந்த வாழ்க்கையை எழுதுதல்… முத்தழகு கவியரசன்- திருநெல்வேலி

முன்னுரை
கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளரென பன்முகத் தன்மை கொண்ட அம்பிகா குமரன் அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு “சரோஜாதேவி காலத்துத் தையல்காரன்”. இதில் இடம்பெற்ற ஒன்பது கதைகளில், நமக்கு அறிமுகமாகும் மனிதர்கள் வெறும் சம்பவங்களுக்கு பலியானவர்கள் இல்லை. ஒவ்வொருவரின் உள்ளுக்குள்ளும் ஒரு ஆழமான மௌனப் போராட்டம் சூறாவளியாக சுழன்று அடித்துக் கொண்டே இருக்கிறது. அவற்றுக்குள் சிக்குண்டு போகும் வலிநிறைந்த சுமைகளை, அபத்தங்களை முன்னெடுத்து வைக்கிறார். உறவுகளின் நம்பிக்கை துரோகம், போட்டி பொறாமை, ஆதிக்க செயல்பாடுகள், ஆண்கள் ஒருதலைப்பட்சமான அதிகார நிலைநிறுத்தம், அதனால் பாதிக்கப்படும் பெண்களின் அகப் போராட்டமென்று அவற்றைக் கதைக்குள் பல அடுக்குகளாக அடுக்கித் தந்திருக்கிறார். பாத்திரங்களுக்கு இடையேயான முரண்களையும், ஆய்வு தளத்திற்கு வழிவகை செய்யும் வாய்ப்பும் நிறைந்திருக்கிறது.

முரண்களால் கட்டப்பட்ட வாழ்க்கை

இத்தொகுப்பை வாசித்து முடிக்கும் போது ஒன்று மட்டும் மனதில் நெருடி விடுகிறது. கதைகளின் நகர்வே முரண்களின் மேல்தான். சரி, தவறு, நியாயம், அநியாயம் என்று எதுவுமே ஒரே நேர்கோட்டில் பயணப்பட்டு போவதில்லை. எல்லாமே வளைந்து நெளிந்து, இறுக்கமான முடிச்சுப் போட்டு முகத்திற்கு நேராகவே கேள்வியைக் கேட்டு விடுகிறது. கணவன் – மனைவி, அண்ணன் – தங்கை, தாய் – மகள், அப்பா – மகளென இது போன்ற உறவுகளில் அன்பு என்ற பெயரில் செலுத்தப்படும் கட்டுப்பாடு எதை வலியுறுத்திப் பேசுகிறது. முரண் என்றால் எதிரெதிர் நிலை இல்லை. தன் அதிகாரத்தை மட்டுமே செயல்படுத்த வேண்டும் எனும் நிலை உருவாகும் போது அங்கே மாறுபடும் தன்மை உண்டாகும். அத்தன்மை சரியான, பொருத்தமான செயல்பாடு உண்டாகுமானால் பிரச்சனை இல்லை. வேறுபட்டால் அங்கே பிரளயம் வெடித்துவிடும். இப்பிரயளத்தைக் குறிப்பிட்ட சில கதைகளை உதாரணங்களாக அறிமுகப்படுத்தி எடுத்துக் கூறலாம். அந்த வகையில்,

ராசுக்குட்டி கதையில், மரணம் பலருக்கும் வேதனையை தரும். இங்கேயும் ஒரு மரணம் சிலருக்கு மறக்க முடியாத எண்ண அலைகளை கொடுத்துவிட்டு சென்றிருக்கிறது. தொடக்கமும், முடிவும் இறப்பின் செய்திகளாக கதை சொல்லல் முறை அமைந்து இருந்தாலும், இதற்கு இடைப்பட்ட கடந்த காலத்தில் தான் ஒரு பெண்ணின் வாழ்வு எப்படியெல்லாம் அலைச்சலுக்கு உள்ளாகிறது என்பதை வலி நிறைந்த கனங்களாகவே சென்றிருக்கிறது.

எல்லோருக்கும் வாழ்க்கையைத் தொலைத்துப் போதல் என்கிற கேள்வி மனதில் எழுவதுண்டு. இக்கேள்வி துயரங்களிலிருந்துதான் ஊற்றெடுக்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்து முதிர் கன்னியாகவே தன் விருப்ப எண்ணங்களை விட்டெறிந்து உறவுக்காக வாழ்க்கை இழந்தவனின் கதையாக வெறிச்சோடிப் போய் இருக்கிறது. இந்தக் கதையை மூன்றடுக்குகளாகப் பிரித்துப் பார்க்கலாம். சிறுவயதில் தன் அப்பாவோடு கோவிலில் பழகிய நாதஸ்வர வாசிப்பின் தொடக்கம், அவர் இறந்தப் பின்பு குடும்பத்தின் பிற காலத்தைத் தனதாக்கிக் கொண்டு வாழ்கிறாள்.
இரண்டாவதாக, நாகராசுவின் செயல்பாடுகளால் ஊரார்முன் அவமானப்பட்டு, தன் தம்பியோடு வேறொரு ஊருக்கு பயணம் செய்கிறாள். மூன்றாவதாக நமச்சிவாயம் தோட்டத்தில் மீதமுள்ள காலத்தைக் கழிக்கிறாள். அப்போதும் கூட தம்பியின் மீதான அன்பும், அக்கறையுமே அவளின் மனதில் ஆழமாக இருக்கிறது. திருப்புமுனை என்று வருகிறபோது முத்துவேலுவின் நிலையை சற்று உன்னிப்பாகக் கவனிக்கும் படி வைக்கிறது.

ஒரு பாத்திரக் கடைக்காரரின் மகளுக்கு வீட்டோடு மாப்பிள்ளையாகப் போனாலும், ராசுக்குட்டியை சரியாக கவனிக்காமல் போனது, மாமனாரின் காலில் விழுந்து அக்காவின் வீட்டின் ஒதுக்குப்புறமான இருப்பிடத்திற்கு வழிவகை செய்தாலும், மனைவி பானுவின் செயல்பாடு வருத்தமளிக்க வைக்கிறது. அப்பாவித் தனமான, பிறரின் மீது அதீதமான அன்பினால், இது ஒருபுறமிருந்தாலும் – கதைக்குள் மற்றொரு உளவியல் தாக்கத்தையும் பதிவு செய்கிறது. ஊர்விட்டு அகதியாக நமச்சிவாயம் இருக்கும் சிவன்மலைக்கு வந்தாலும், இருவருக்கும் காதல் உணர்வு வெளிப்பட்டாலும், அவளால் அவ்வுணர்வு எல்லை மீறப்படாமல் செல்கிறது. தன் தோட்டத்தில் தங்குவதற்கான இருப்பிடத்தை அவர் ஏற்படுத்திக் கொடுத்தாலும், தொடக்கத்தில் ஊர் மக்களின் எண்ணங்கள் அவள் மீதான தவறான புரிதலோடு உள்வாங்கிப் பின், அம்மக்களே அவ்வெண்ணத்திலிருந்து விடுபடும் அளவிற்கு, ராசுக்குட்டியின் மனதிலிருக்கும் தெய்வமான அங்காளபரமேஸ்வரியே அப்பேச்சின் கலங்கத்திலிருந்து மீட்டு வந்திருக்கிறது. ஒரு பெண்ணின் பேசிமுடிக்கப்படாத வாழ்வாகவே மரணித்துப் போயிருக்கிறது. முத்துவேலு இம்மரணத்தை வெறும் மரணமாக எடுத்துக்கொள்ள மாட்டான் என்பதே உண்மை. அவர்களைப் பொறுத்த வரையில் அவள் தெய்வத்தின் சாட்சியாக வரலாற்றில் இடம்பிடித்துச் சென்றாள் என்பதே நிதர்சனம்.

அங்கப்பன் டீ ஸ்டால் கதையில், வடிவுக்கரசியின் வாழ்வை துயரங்களோடு, மன சிதைவுகளோடு, குடும்பத்தைக் கட்டிக்காத்து அடுத்த நகர்வுக்கு எப்படி கொண்டு போகிறாள் என்பதை தெளிவாக சொன்னக் கதை. உளவியல் சார்ந்த சிக்கல்கள் தென்படுகிறது. கதாபாத்திரங்களின் முரண்கள், முக்கியமாக தினேஷ், கணவனாக வரும் அங்கப்பன் என்று மனைவி மீது சந்தேகப்படும் சூழல் மிகவும் கொடுமையான தருணங்களாக வடிவுக்கு அமைந்து விடுகிறது.

ரைஸ்மில்காரனை தன் அழகில் மயக்கித்தான் டீக்கடை ஆரம்பித்தாள் என்று ஊர் மக்களின் வாயில் அவளின் வாழ்க்கை விழ, அதுவே பூதமாக பெருக்கெடுத்து, சண்டைச் சச்சரவாக தொடர்கிறது. இதொரு மனப் போர்க்களம். இப்போர்களத்தில் அவளே மீள முடியாமல் பாதிப்படைகிறாள். அப்பாதிப்பு ஆழமாக தன் இரண்டாவது குழந்தையே என் குழந்தை இல்லையென்று கணவன் வாதிடும் போது, ஒரு பெண்ணின் மனநிலை என்னவாக இருக்கும். நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இப்படியொரு நாள் நடக்கும் சண்டையில்தான் உடலில் பக்கவாதம் வந்து, வீட்டிற்குள் முடங்கி விடுகிறார், அங்கப்பன். இரண்டு பெண் குழந்தைகளை வைத்து, ஒற்றையாளாக டீக்கடை வைத்துப் பிழைப்பிற்கு ஒரு வழியினைத் தேடிக் கண்டடைகிறாள்.

இந்தக் கதையிலும் மூன்று பிரிவுகளை நாம் வாசிக்கும் போது அடையாளம் கண்டு கொள்ளலாம். ஒன்று ஊர்க்காரர்களின் மனநிலை. அதன் வழியாக சந்தேகம் அடையும் கணவர் அங்கப்பன். மூன்றாவதாக வரும் தினேஷ் எனும் கதாபாத்திரம். இம்மூன்று அடுக்குகளிலும் பாதிக்கப்படுவது என்னவோ வடிவுதான். அம்மாவிற்கு ஒத்தாசையாக இரு பெண்களும் இருக்கிறார்கள். இருவருமே அம்மாவைப் போல் அழகுதான். வடிக்கையாளராக வரும் ஆண்களின் கண் பார்வைகளின் ஈர்ப்பிலிருந்து மகள்களைக் காப்பாற்றும் சூட்சமம் ரசிக்கும் படியாகவே இருக்கிறது. ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி வேலையாக பிரித்து அக்கடையை வழிநடத்துகிறார்கள்.

இங்கேதான் ஒரு மாற்றம் கதைக்குள் வருகிறது. திரையரங்கில் அருகிலிருக்கும் டீக்கடை என்பதால் அதற்கென்று தனி மவுசு. வியாபாரம் நன்றாகப் போகும். அதன்படி சென்றாலும், பொங்கல் விடுமுறையில் கபடி விளையாட்டு பல ஊர்களிலிருந்தும், இங்கு வந்து விளையாடுவது வழக்கமான ஒரு செய்தியாக கதைக்குள் காட்டப்படுகிறது. அம்மாவின் வாழ்க்கை உப்புக்காரமில்லாமல் கசப்பாகிப் போக, மகளின் வாழ்க்கை காதலோடு – திருமணம் நோக்கி செல்வதாக கதை இன்பவியலை நோக்கி முடிந்திருக்கிறது. ஆனால், இதற்குள் பெரிய மனபோராட்டத்தை அவர்களுக்கு ஏற்படுத்த நினைக்கும் தினேஷின் மனநிலை மோசமான எண்ணம் கொண்டவனாக படைக்கப் பட்டிருக்கிறான்.

கபடி விளையாட வரும் வீரனோடு காதல் வயப்பட்டாலும், மகளின் அம்மாவோடு அவ்வீரர் திருமண பந்தத்திற்கு அனுமதி வேண்டி முறைப்படி பேசும் விதமும், காலப் போக்கில், தன் உறவுக்காரனான தன் மகளுக்கு அண்ணனாக இருக்கும் தினேஷின் மூலமாக விசாரிக்க அனுப்புகிறாள். இங்கே தான் முரண் வருகிறது. அதாவது விசாரிக்கச் சென்றவன் அவர்கள் பணக்காரர்கள் என்று தெரிந்ததும், எங்கே இவர்கள் தங்களை விட வசதி வாய்ப்புகளோடு பெரியவர்களாகி விடுவார்களோ என்னும் மன புழுக்கத்தில், வடிவுக் கரசியிடம் அவர்கள் தவறானர்கள் என்றும், இவர்களைப் பற்றி அவர்களிடத்தில் ரைஸ் மில்காரனைக் கைக்குள் வைத்துத்தான் எல்லா வேலைகளையும் செய்கிறார்கள், நடத்தைக் கெட்டவர்கள் என்றும் மாற்றிப் பேசும் பொறாமை மனம் கொண்டவனாக இருக்கிறான்.

இப்படியாக, இக்கதையில் பல கூர்முனை சொற்களால், துரோகங்களுக்கு மத்தியில் பெண்களின் வாழ்வு எப்படிக் கரைசேர்வதற்கான பாதைகளை வகுத்துக் கொள்கிறார்கள் என்பதை வலி நிறைந்த சொற்கள், வாக்கியங்களால் முடிவடைந்து இருந்தாலும், கடைசி வரையில் அந்தப் பழிசொல் வடிவுக்கரசியிடமிருந்து விட்டுவிலக வில்லை என்பது வருத்தமான விசயம் தான்.
கூலி எனும் கதையில், ஏமாற்றப்பட்டிருக்கிறது. ஓர் எழுத்தாளனை நம்ப வைத்து ஏமாற்றும் பழக்கம் எல்லா காலகட்டத்திலும் இருந்திருக்கிறது – இருக்கிறது. படித்தப் படிப்பிற்கும், வேலைக்கும் தொடர்பில்லாத வாழ்க்கைப் போக்கு. வெறும் எழுத்து மட்டுமே எல்லாவற்றையும் நிர்ணயம் செய்துவிடுவதில்லை. மனிதர்களின் நம்பகத்தை இங்கே கேள்வியாக கேட்கப்பட்டிருக்கிறது. சரியான வேலை அமையாத போது, குடும்பத்தின் வருமான பிரச்சனை தலைவிரித்தாடும். இக்கதையிலும் அப்படியான சிக்கல் நிலவுகிறது.

இந்தச் சிக்கலுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக வேலுசாமி ஒருவரை அறிமுகப் படுத்தி அவரைப் பார்க்க சொல்லி, ஒரு கட்டத்தில் சரி என்றே முடிவு செய்து செல்கிறார். நினைத்து எல்லாம் சரியாகவே நடக்கிறது. பாண்டிமுத்து எனும் கதாபாத்திரம் இங்கே அறிமுகமாகிறது. அவர் ஒரு அரசியல்வாதி. ஆனால், பேசத் தெரியாத அரசியல்வாதி. இவரின் ஆரம்பக்கட்ட வரலாறு என்பது குற்றம் நிறைந்த பாதரசமில்லா கண்ணாடி யாகவே எழுதப் பட்டிருக்கிறது.

கள்ளச்சாராயம் விற்று கொண்டிருந்தவன், படிப்படியாக பல வரைமுறையற்ற தவறுகளை செய்து, தற்போது அரசியல் எம்.எல்.ஏவாக உருவெடுத்திருக்கிறார். ஆனால், அரசியல் வாதியின் மனநிலை ஒரே தன்மையில், கருத்தில் எப்போதும் இருந்ததில்லை. தனக்காகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனவும், அதற்கான கூலி தொகைப் பேசப்பட்டிருக்கிறது. இருப்பினும் அவையெல்லாம் வெற்று உறுதி மொழியாகவே இருக்கிறதே தவிர செயல்பாட்டிற்கு வரவில்லை.

வெற்றி பெற்ற அரசியல்வாதி தனக்காக பங்களித்த அந்த எழுத்தாளனை மறந்து விடுகிறார். பிரச்சார கூலிக்காக அலைந்து திரிந்த அவ்வெழுத்தாளரின் கால்கள் வலி நிறைந்த வலியாகவே, பேசிய பிரச்சாரத்தின் சொற்கள் இறந்தன என்பதே உண்மை. இது ஒருவிதமான அவமானப்படுதல்.

சரோஜாதேவி காலத்து தையல்காரன் கதையில், ஒரு மனிதனின் வாழ்க்கையில் பல படிநிலைகள் வாழ்வு காலத்திற்கு ஏற்றமாதிரி மாறிக்கொண்டே வரும் – போகும். அதற்குள் துன்பம், மகிழ்ச்சி, நிறா ஆசைகள், கைநழுவிப்போன எண்ணங்கள், கைக்குள் அடங்கிய விசயங்கள் என்று நிறைந்து கிடக்கும். அவையெல்லாம் எதிர்பார்த்து நடப்பவைகள் என முடிவு செய்ய இயலாது. நடப்பது நடந்தே தீரும். இக்கதை ஒரு துயரம் நிறைந்த இழப்புகளைப் பதிவு செய்திருக்கிறது. இரு நண்பர்களின் வாழ்வில் ஏற்படும் இன்னல்களை, சுயநல உறவுகளின் மனதையும் காட்சிக்குள் கொண்டு வரும் போது, அறம் என்கிற சொல் அங்கே அறந்து விடுகிறது.

அய்யனார் எனும் வயதான மனிதரின் கடந்தகால வாழ்வில், அவருக்கு ஏற்பட்ட சம்பவங்களே கதையின் மூலமாக அமைந்திருக்கிறது. நண்பனாக வரும் மயில்சாமி தொடக்கத்தில், பணத்தைச் சம்பாதித்ததும், ஒருவரின் நடவடிக்கை எப்படி மாறுகிறது என்பதைக் கதைக்குள் வாசிக்கும் போது, மனம் – எண்ணங்கள் – இவற்றைக் காட்சிப் படுத்துவது கடினமாகவே போய்விடுகிறது. ஏன் இப்படி என்று மயில்சாமியைப் பார்த்து கேட்க வைக்கிறது.

தொடக்கம் – நடுபகுதி – முடிவு என கதையின் மூன்று வரைபடத்தில் நடுபகுதியும், முடிவான உச்சமும் கதையை வலு சேர்த்திருப்பது மட்டுமில்லாமல், எல்லாம் அவை குறைகளுக்கான காட்சியாகவே மனதில் படுகிறது. அய்யனாரும், மயில்சாமியும் நண்பர்கள். புகையிலை குடோனில் வேலை – முதலாளி இறந்ததும், அவரின் மனைவி விற்று விடுகிறாள். தோட்டமும் வேறொரு ஆளிடம் கைமாற, இறுதியில் சாகிப் எனும் தாத்தாவின் தையல் கடையில் காஜா வேலை. இவ்வேலையில் இருவருமே நன்று கற்று தேறி, தனியாக கடை ஆரம்பித்து பணத்தைச் சம்பாதிக்கிறார் மயில்சாமி. ராசாத்தி என்பவளைத் திருமணம் செய்து கொள்கிறார். ஆனால், அய்யனார் அதே கடையில் நிலையாக வேலை பார்க்கிறார். சாகிப் தாத்தாவை விசம் வைத்து கொன்றுதான் கடையை தன் வசப்படுத்தினான் என்று மயில்சாமி மனதில் கோவம் இருக்கிறது. அதற்கு மாறாக கஷ்டப்படும் போது துணை இருக்காமல், வாடிக்கையாளராக வந்த அவளைக் காதலித்து திருமணம் செய்து தனியாக சென்றுவிட்டு பல நாள் பழக்கத்தை மறந்தவன், பணம் அதிகமாக சம்பாதித்து திமிர் பேச்சு பேசுகிறார்.

அதுமட்டுமில்லாமல் குடி, போதைக்கு அடிமையாகிப் போகிறார், மயில்சாமி. இதனால் பணம், சொத்து எல்லாம் விரயம் ஆகிறது. சரியாக குடும்பத்தை நடத்த முடியாமல், மயில்சாமியின் மகன் காணாமல் போகிறான். இதே காலகட்டத்தில் அய்யனாரின் இரு மகன்களும் தன் அப்பாவின் கடின உழைப்பால் சேர்த்த சொத்தைத் தங்களின் பெயரில் எழுதி வாங்கிக்கொண்டு திருப்பூருக்கு சென்று விடுகிறார்கள். இந்த இரண்டு சம்பவங்களும் நடந்த ஒரே சமயத்தில் இருவரின் மனைவிகளும் துக்கம் தாழாமல் இறக்கின்றனர். சிறிது காலத்திற்குப்பின் மயில்சாமி இறந்ததும், அவரின் பேத்தி தீபாவிற்கு தையல் கற்றுக் கொடுக்கிறார், அய்யனார். அப்போதும் அவர் கடின உழைப்பாளி யாகவும், ஏமாற்றப்பட்டவராகவும் தனிமையில் வாடுகிறார். ஒரு தையல் காரரின் வாழ்வு கூர்முனை நொடிந்த ஊசியாக இறுதிகாலம் அவருக்கு கரும் புகையாக செல்கிறது.
இவ்வாறாக, ராசுகுட்டி, வடிவுக்கரசி, நாராயணன், அய்யனார் என்று இவர்கள் ஒரு அப்பாவித்தனமான உணர்வுகளுக்குள் அகப்பட்டு கிடக்கிறார்கள். தன் வாழ்வை இழந்து பிறருக்காக நினைத்து மடிந்து போதல், ஊரார் வாய்களுக்கு அகபட்டு அதிலிலிருந்து குடும்பத்தை காப்பாற்றி கரை சேர்த்தல், சமூகம் பாதிக்கப் பட்டவளையே குற்றவாளி ஆக்குகிற விசித்திரம் அப்பட்டமான உண்மையாகவே தெரிந்திருக்கிறது. நேர்மையாக உழைக்கிறவன் மேலேற முடியாது. அரசியல் வாதியின் குற்றப்பின்னனி, தன் முன்னேற்றத்திற்கு எழுத்தாளனின் உழைப்பும் வார்த்தையும் அதிகாரத்தில் அவமானப்பட்டு கிடக்கிறது. கடின உழைப்பால் சொத்துகளை சேர்த்தாலும் உறவுகள் உழைப்பிற்கு மதிப்பு கொடுக்கவில்லை. பணத்திற்கு மட்டுமே தலையசைந்திருக்கிறது. அங்கப்பன், தினேஷ், பாண்டிமுத்து, மயில்சாமியென எதிர்முரண் பாத்திரங்களையும் ஒப்பிட்டு எழுதும் வகையில் சமதளத்தில் வைத்து எதையும் மறைமுகமாக காட்டாமல், வெளிப்படையாக எடை போட்டு காட்டியிருக்கிறார்.

முடிவுகளால் சிதைந்த வாழ்வு

வாழ்வுக்கான நிர்ணயம் என்பது சரியான கட்டத்தில் எதிர்காலத்தை நினைத்து எடுக்கக்கூடிய ஒவ்வொரு முடிவும் முக்கியமானது. அதுதான் நாம் யார் என்கிற உண்மையை வெளிப்படுத்தும். கொஞ்சம் அது பிசகினாலும், அந்நிலையை பிறரின் கண் பார்வைக்கு முகம் சுழிக்கும் படியான சூழ்நிலைக்கு நம்மை அதளபாதாளத்தில் புதைத்துவிடும். அப்படி புதைந்தும், புதையாமலும் வாழ்க்கையையே வெறுத்துத் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கும் உடலின் தடுமாற்றம் உணர்வு – உணர்ச்சிகளின் கடைசி நிமிட துடிப்புபோல் துடித்துக்கொள்ளும் கதாபாத்திரங்களைக் காணும் போது இச்சிந்தனையை உணர வைக்கிறது. வித்யா, அபி, சிவா என்று இப்படியாக சில உயிர்கள் இதற்கு உதாரணங்களாக படைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களைச் சுருக்கமாக கதைக்குள் ஆராயும் போது,

ஏ.டி.எம் கதையில், வித்யாவின் வாழ்வு துவக்கம் பெறாமலேயே நிறைவுப் பகுதிக்கு வந்திருக்கிறது. இங்கே முடிவுகள் யாரால் எடுக்கப்படுகிறது. எதற்காக – ஏன்? என்கிற கேள்விகளுக்குள் திக்கு முக்காடி திணறும் தருணத்தையே இப்பாத்திரத்திற்கு நடந்திருக்கிறது. படிக்க விருப்பம் இருக்கக்கூடிய ஒருவளுக்கு திருமணம் எனும் பேரிடியை பரிசாகக் கொடுத்துவிட்டு குடும்பம் நழுவிக் கொள்கிறது. அந்த வருடத்தில் அவளுக்கு ஏற்படும் இன்னல்கள் சகித்துக்கொள்ள முடியாதவையாக இருக்கிறது. கறுப்பாக – கலைத் தன்மையோடு இருக்கும் அவளுக்கு வாய்த்த மாப்பிள்ளை கேசவன்.

உறவுக்காரனாக இருந்தாலும், அவனின் நடத்தை மோசமாகவே இருக்கிறது. தாம்பத்திய உறவு அங்கு அற்று போய்விடுகிறது. இரவில் குடித்துவிட்டு கணவனுக்கு உண்டான மதிப்பீடுகள் அற்று அவளைக் கவனிக்காமல் போகிறான். இதொரு புறமிருக்க, திருமணமாகி நான்கு வருடங்கள் கடந்தும், குழந்தைக்கான கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல், மாமியாரின் சாப சொற்களுக்குள் அடிமையாகிப் போகிறாள்.

குடும்ப அமைப்பில் பெண்களுக்கென்ற சுய முடிவுகள் எட்டாமல் தடுக்கப்படும் போது, அவ்விடத்தில் மன பாதிப்புகள் வரத்தான் செய்யும். வித்யாவின் அப்பா தன் மகளை பலிகிடாவாக்கி விட்டார். கணவன் சரியில்லை. ஒரு கால் இல்லாதவன். மகிழ்ச்சியாக உடலாலும், மனதாலும் வைத்திருக்க முடியாதவன்.

சில பிரிவுகள் வாசிக்கும் போது தட்டுபடுகிறது. அப்பாவின் மோசமான தன்நிலை முடிவு – கணவனின் மாறுபட்ட மனம் – மாமியாரின் கொடுஞ்சொற்கள் என்று வேதனையின் ஆழத்திற்குச் சென்று விடுகிறாள் வித்யா. வாழ்க்கை இப்படியாக செல்ல, கதைக்குள் ரமேஷ் கதாபாத்திரம் அறிமுகமாகிறது. கணவனின் நண்பனாக தன்னுடைய சுய லாபத்துக்காக மோசமான மனதை மறைத்து நல்லவன் போல் தன் தேவைக்கு வித்யாவை பயன்படுத்திக் கொள்கிறான். அன்பெனும் பொய்யான வலையில் தன் கட்டுப்பாட்டுக்குள் மயக்கி விடுகிறான்.
உடல் யாருக்கும் கட்டுபடாது. அதன் நேரம் வரும்போது எல்லையைத் தாண்டி விடும். அப்படித்தான் ரமேசுடன் நெருக்கமாகி, விசயம் வெளியில் தெரிந்ததும், விவாகரத்தில் விடுதலைக் கிடைக்கிறது. அவ்விடுதலை சரியான பாதையை அமைக்க வில்லை. துரோகத்தின் குழியில் விழுகிறாள். எதற்குத் திருமணம் முடித்தோம்?. எதற்கு எல்லோரின் முன்பும் அவமானப் பட்டோம்?. இந்த வாழ்வு நமக்கு எதை சொல்ல வருகிறது. இது நமக்கானது இல்லையா? எனப் பல கேள்விகள் அவளுக்குள் இருந்திருக்கும். சென்னைக்கு வேலை வாங்கித் தருவதாக ரமேஷ் அழைத்துச் செல்கிறான். தனியாக வீடெடுத்து உடலால் அவளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறான். கிடைக்காத அனுபவங்கள் கிடைக்கும் போது மயங்கி விடுகிறாள். ஆனால் காலம் எதையும் மறைத்து வைப்பதில்லை.
பொய்யான மனிதர்களை அடையாளப்படுத்தி விடும். அப்பாவின் இறப்பிற்கு சென்று வந்தவள் சென்னையில் அவன் வேறொரு பெண்ணோடு வீட்டில் இருப்பது தெரிந்ததும், ஒரு கனம் அதிர்ந்துவிடுகிறாள். வேதனையில் உச்சத்திற்கே சென்று விடுகிறாள். முடிவு – ஏமாற்றம் – சிதைவடைந்த வாழ்க்கை – நிம்மதியைத் தொலைத்தல் என்று பல கோணத்தில் பரிதவித்து, அடுத்த என்ன என்கிற விடைதெரியா கேள்விக்கு பதில் எழுதுவது கடினமாகிப் போயிவிடுகிறது.
டிசம்பர் பூ கதையில், நாயகி அபி. தண்ணீருக்கு கஷ்டப்படும் கிராமத்தில் பிறந்த அவளின் வாழ்வு எதற்குப் பிறந்தோம் – வாழ்ந்தோம் என்ற கேள்விக்கு பதில் தெரிந்தும், தெரியாமலேயே முடிவுக்கு வந்திருக்கிறது. பெண்ணாக பிறந்தது மட்டும்தான் அவள் செய்த குற்றம் என்றே நினைக்க வைக்கிறது. எவ்வளவு ஏமாற்றங்கள். எதற்கு இப்படியே மனம் கனக்கிறது. சரியான கல்வி அறிவு இல்லை. சிறு வயதிலேயே திருமணம். அன்றைய காலகட்டத்தில் அப்படியான சூழல் இருந்திருக்கிறது வருத்தமே.

விருப்பமில்லாத திருமணத்திற்கு, தன் வீட்டின் முடிவால் வாழ்க்கை திசைமாறி போயிருக்கிறது. தெய்வத்தின் முடிவை நினைத்து இறுதியில் அவள் படும் வருத்தம், நமக்கு கோபத்தையே கொடுக்கிறது. பெண்ணின் சம்மதம் கேட்காமல், திருமணத்திற்காக பூ போட்டு எடுக்கிறார்கள். அதிலும் பித்தலாட்டம் செய்கிறார்கள். அதன்பின்பு அனைத்தும் வேறு பாதையில் சென்றிருக்கிறது. இங்கும் மூன்று விதமான பிரச்சனைகள் மேலிடுகிறது. கணவனின் இயலாமை. தாம்பத்திய உறவில் அபிக்கு நிம்மதியைக் கொடுக்க முடியாமல், அந்தக் குற்றவுணர்ச்சியில் எங்கோ யாருக்கும் சொல்லாமல் ஓடி விடுகிறான். தொடக்கத்தில் அவனுக்கு சரியான வேலையில்லை. வீட்டிற்கு எந்நேரமும் அவனின் நண்பர்கள் வருகிறார்கள். அதில் ஒருவன் அவளின் மனதை மாற்றுகிறான். உடல் என்று வரும்போது அதற்கான ஆதரவு கிடைக்கும் போது, மனம் மாறாமல் போனாலும், உடல் சம்மதம் சொல்லிவிடும். இந்த விசயம் வெளியே தெரியவர, கணவன் முகவரி தெரியாமல் மாயமாகிறான்.

மகன் காணாமல் போனதற்கு இவள்தான் காரணம் என்று மாமியார் பேச்சும் வன்மையாகவே இருக்கிறது. மருமகள் வேறொருவனோடு சென்றாலும், பெரிதளவு கவலை இல்லை. ஏனென்றால் அவன் பணக்காரன். அவனிடத்தில் மாமியார் கடன் வாங்கி இருந்ததால், மௌனம் சாதிக்கிறாள். ஆனால், எல்லாம் நேர் பாதையில் செல்வதில்லை. அவனும் ஒரு கட்டத்தில் இறக்கிறான். சொத்தில் அவளுக்கு பங்கு கொடுக்க வேண்டும் என நியதி வந்ததும், அடித்து விரட்டப் படுகிறாள். புகுந்த வீடும், வேறொரு வீடும் வாழ்வை அலைக்கழிக்க, மூன்றாவதாக ஒருவன் தனி வீடொன்றும், ஐம்பது ரூபாய் பணத்தையும் கொடுத்து, தன் உடல் தாகத்தை நிறைவேற்றிக் கொள்கிறான். இது பலருக்கும் தெரியவர, அவளின் பெயர் சமூகத்தில் வேறொரு அடையாளத்தைக் கொடுத்து விடுகிறது.

இந்தச் சமூகம் அப்பாவியான பெண்களை குடும்ப அமைப்பு எடுக்கும் சில தவறான முடிவுகளால், வாழ்விழந்து – அவஸ்த்தைப்பட்டு, கையறு நிலையாக சிதைந்து போயிருக்கிறார்கள். காலம் அனைத்தையும் அப்படியே நிலைத்து நிறுத்தாது. வயது ஏற ஏற தோல்களின் மென்மை அறுபட்டு விடும். உடல் பலவீனத்தால் கடைசி காலத்தில் அபியின் நிலைமை உணவிற்காக அலைகிறாள். அலைதலின் பரிசாக கல்லடி அவள்மேல் விழுகிறது. இக்கதையில் வரும் ஆண்கள் ஏதோ ஒரு ஆதிக்கத்தை பெண் மீது செலுத்துவதாகவே அமைந்திருக்கிறது. அது தவறானது. அபியின் சுதந்திரம் அங்கு பேசுபொருளாகக்கூட இல்லை என்பது கவலை அளிக்கிறது.

எஞ்சாமி கதை மேற்கண்ட கதைகளைப் போல அல்லாமல், திருட்டுப் பட்டத்தால் ஒரு இளைஞனின் வாழ்வு சிதை கோலத்திற்கு சென்றிருக்கிறது. சிவா முதன்மை பாத்திரமாக வருகிறான். சிறுவயதில் சேட்டைக்காரன் என்பதால் படிப்பும், காதலும் கைகூடவில்லை. எப்போதுமே ஒரு முன்னேற்றம் வர வேண்டுமென்றால், சிலவற்றை இழக்க நேரிடும். பெற்றோரைவிட்டு பெரியப்பாவின் வீட்டு மாடியிலிருக்கும் அலுவலகத்தில் வேலைக்குச் செல்கிறான். படிப்படியாகப் பலவற்றை கற்றுத் தேறுகிறான். சில ஆலோசனைகள், மேலும் பணம் சம்பாதிக்க வழிவகைகள் கேட்கும் போது, பெரியம்மாவின் தலையீடு அவனின் வாழ்வைப் புரட்டிப் போடுகிறது. இவ்விடத்தில்தான் கதைக்கான முடிவும், உளவியலும் தென்படுகிறது.

தாங்கள் இவ்வளவு வருடம் கஷ்டப்பட்டு வந்தோம். இன்று உடனே சிவா மேலேறி வருவதென்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. உடனே திருட்டுப் பட்டம் கட்டப் படுகிறது. இதைத் தாங்க முடியாதவன் குடிக்கு பழக்கமாகிறான். அன்றிரவே அவளிடம் சண்டையிட்டு வேலையை நிராகரித்து சொந்த ஊருக்கே திரும்ப வருகிறான். இப்பட்டம் அவனின் வாழ்வில் பெரும் பாதிப்பையே ஏற்பட வைத்திருக்கிறது. கடினமான சூழ்நிலை வரும் சமயத்தில் ஏன் குடியைத் தேர்வு செய்கிறார்கள் என்பதே கேள்வியாக இருக்கிறது. ஒருவேளை மாற்று பாதைக்கான வழிகள் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கான பதிலும் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பின் அதிலிருந்து மீண்டு வந்தாலும், அம்மாவின் உடல்நிலை பாதிப்பு, சொந்த வீட்டை அடமானம் வைத்துத் திருப்ப முடியாமல் சிறிய வாடகை வீட்டிற்கு குடிபெயர்தல்., மீண்டும் வேலை – பணம் – குடி என்று இருள் மங்கிய வாழ்க்கையாகவே மழுங்கியிருக்கிறது.

எல்லாக் கதைகளிலும் தனிமனித ஆளுமை ஆதிக்கம் பெருக்கெடுத்து நிற்கிறது. அதன் வழியாக வாழ்க்கையை இழந்த பாதிப்பும், எந்தச் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று சுயசிந்தனை, எதிர்கால சிந்தனை இல்லாமல் போனதின் விளைவே அவர்களுக்கான பதிலைக் கொடுத்திருக்கிறது. சிவாவின் இறுதிகால உடல்நிலை மிகவும் மோசமாகப் போக, திருட்டு பட்டம் கட்டிய பெரியம்மா வந்து பார்த்து நலம் விசாரிக்கும் செய்தி இடம்பெறுகிறது. அப்போது அவர் கையில் காணாமல் போன மோதிரம் விரலில் தென்படுகிறது. இவ்விடம்தான் நமக்கு சந்தேகப்படும் உணர்வைக் கொடுக்கிறது. உண்மை யிலேயே மோதிரம் காணாமல் போனதா? என்று.

ஆகமொத்தத்தில் இக்கதாபாத்திரங்களுக்கு வெளிப்புற எதிரிகளென்று யாருமில்லை. அவர்களின் வாழ்வை சிதைப்பது உறவுகளும், தனக்கான முடிவுகளை எடுக்கவிடாமல் தடுக்கும் சமூக அமைப்பும் தான் என்று நேரடியாகவே விவதாக பொருளுக்கு அடித்தளம் இடுகிறார்.

முடிவுரை

எழுத்தாளர் அம்பிகாகுமரன் அவர்களின் மொழி நேரடியானது. ஆடம்பரமில்லை. அந்த எளிமையில்தான் வலி ஊடுருவுகிறது. ஒவ்வொரு கதையும் சில பிரிவின் அடுக்குகளால் எழுதப்பெற்று மையத்தின் சிக்கலை ஒப்பிடுவது மட்டுமில்லாமல் முடியும் போது வாசகனின் மனதில் ஒரு கேள்வி எஞ்சி நிற்கும். எதற்காக இப்படி வாழ்கிறோம் என்று. இந்தத் தொகுப்பு வாசித்து முடித்தவுடன் மூடி வைக்கும் புத்தகமல்ல. அது உங்களோடு பேசிக்கொண்டே இருக்கும். மனசாட்சியை உலுக்கும். சமூகத்தை மறுபடியும் கேள்வி கேட்க வைக்கும் எண்ணத்தைக் கொடுக்கும். சமூகத்தின் ஓரத்தில் தனியாக நின்று பேச முடியாமல் தவிக்கும் மனிதர்களின் குரலை, கதறலைப் பதிவு செய்யும் முயற்சி என்றே கூறலாம். இது எளிதில் கடந்து போகும் விசயமல்ல. வாழ்வின் மறுபக்கம் என்னவாக இருக்கிறது என்பதைத் துயரங்களோடும், தவிப்புகளோடும் பெண்களை வைத்து காட்சிப் படுத்தியிருக்கிறார். பெரும்பாலான கதைகளின் முடிவுகள் துன்பவியலையே கேட்பாரற்று விழுங்கி நிற்கிறது. உளவியல் பார்வையில் வாசிக்கும் போது, மனிதன் எப்படித் தன்னையே இழந்து போகிறான் என்பதற்கான ஒரு ஆவணமாகவே என்றும் நிற்கும்.

இத்தொகுப்பின் வழியாக சில கேள்விகள்:

1. பெண்ணின் அமைதியும், அடக்குமுறையும் எப்போது முடியும்?
2. அன்பு என்பது உரிமையா? இல்லை கடமையா?
3. நியாயம் என்பது யாருக்கானது?
4. நடப்பு வாழ்வியலில் உறவுகளின் மீதான தாக்கம் என்னவாக இருக்கிறது?
5. மனிதநேயத்தின் பண்புகள் சிதைவடைவது எதனால்?
6. இக்கதைகளின் முன்னெடுப்பில் இச்சமூகம் நமக்கு எதைக் காட்சிப்படுத்துகிறது?

நூல் விவரம்:
நூலின் பெயர் : சரோஜாதேவி காலத்துத் தையல்காரன்
ஆசிரியர் : அம்பிகா குமரன்
வெளியீடு : வேரல் புக்ஸ்
தொடர்புக்கு : 9578764322.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button