உலகம்

அமெரிக்காவுக்கு ஈரானின் எச்சரிக்கை; ட்ரம்பின் எச்சரிக்கைக்கு கலிபாப் கடும் பதில்

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரும், முக்கிய பேச்சுவார்த்தையாளருமான மொஹமட் பாகர் கலிபாப் கடுமையான பதிலளித்துள்ளார்.

தேவைப்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்க ஈரான் முழுமையாக தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை ஈரான் பெரிதாகக் கருதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அமெரிக்காவின் அச்சுறுத்தல்களால் ஏதேனும் பலன் கிடைத்திருந்தால், அவர்கள் இன்று இருக்கும் விரக்தி நிலையை அடைந்திருக்க மாட்டார்கள். அமெரிக்க தரப்பினர் தங்களது கருத்துக்களை வெளியிடும்போது கவனமாக இருக்க வேண்டும்.

எங்களது ஆயுதப் படைகள் முற்றிலும் வேறுபட்ட முறையில் பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளன. அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்.

ஆனால் களத்தில் செயல்படுபவர்கள் நாங்கள்தான்,” என அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, லெபனானில் செயற்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் உடனடியாக வன்முறைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அவ்வாறு செய்யத் தவறினால், ஈரான் மீது மீண்டும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சுவிட்சர்லாந்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில், தனது சமூக வலைத்தளமான ‘ட்ரூத் சோஷியல்’ ஊடாக ஜனாதிபதி ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக சர்வதேச அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button