சமாதான உடன்படிக்கையில் அமெரிக்க – ஈரான் ஜனாதிபதிகள் கையெழுத்திடுவார்களா?

போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தற்போது தயாரிக்கப்பட்டுள்ள இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனும் கையெழுத்திடக்கூடும் என தகவல் வௌியாகியுள்ளது.
ஈரானின் வெளியுறவு அமைச்சு இதனை தெரிவித்துள்ளதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தகவல் வௌியிட்டுள்ளது.
இது தொடர்பான யோசனை பரிசீலிக்கப்பட்டு வருவதாக ஈரான் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஹி கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் கையெழுத்திடும் விழாவிற்காக தாம் அங்கேயே இருக்கக்கூடும் என ஜி7 செய்தியாளர் சந்திப்பில் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து இந்த செய்தி வௌியாகியுள்ளது.
முன்னதாக குறித்த உடன்படிக்கையில் அமெரிக்க உப ஜனாதிபதி மற்றும் ஈரான் சபாநாயகர் ஆகியோர் கையெழுத்திடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
குறித்த சமாதான உடன்படிக்கையில், 14 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகள் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தப்படுவதாக இந்த ஒப்பந்தம் அறிவிக்கிறது.
அமெரிக்காவும் ஈரான் இஸ்லாமியக் குடியரசும் அதிகபட்சமாக 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தைப் பேச்சுவார்த்தை நடத்தி முடிப்பதென உறுதியளிக்கின்றன. இருதரப்பு ஒப்புதலுடன் இந்த காலக்கெடு நீட்டிக்கப்படலாம்.
ஈரான் மீதான தனது கடற்படை முற்றுகையை அமெரிக்கா 30 நாட்களுக்குள் நீக்கும். இந்தக் காலகட்டத்தில், போருக்கு முந்தைய கப்பல் போக்குவரத்தை ஈரான் இஸ்லாமியக் குடியரசு மீட்டெடுப்பதற்கு ஏற்ப, கப்பல்களின் போக்குவரத்து இருக்கும்.
மேலும், அமெரிக்கா இறுதி ஒப்பந்தத்திற்குப் பிறகு 30 நாட்களுக்குள் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் எல்லைப் பகுதிகளிலிருந்து தனது படைகளை அகற்றுவதற்கும் உறுதியளிக்கிறது.
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுகிறது: இந்த முக்கிய கடல்வழிப் பாதை 60 நாட்களுக்குக் கட்டணமில்லாப் பாதையாக இருக்கும். அதன் பிறகு, ஹோர்முஸ் நீரிணை குறித்து ஓமானுடன் மட்டுமல்லாமல், பிற வளைகுடா நாடுகளுடனும் இணைந்து ஈரான் ஒரு பரந்த, நீண்ட கால ஒப்பந்தத்தை உருவாக்கப் பணியாற்றும் என்று ஒரு உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக குறைந்தது $300 பில்லியன் மதிப்பிலான நிதியத்தை பிராந்திய பங்காளிகளுடன் இணைந்து உருவாக்க அமெரிக்கா உறுதியளிக்கிறது.
ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு எதிரான அனைத்து வகையான தடைகளையும் நீக்குவதற்கு அமெரிக்கா ஒப்புக்கொள்கிறது, இதற்கான கால அட்டவணை பின்னர் முடிவு செய்யப்படும்.
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்காது என்பதில் அமெரிக்காவும் ஈரானும் உடன்படுகின்றன. மேலும், ஈரானிடம் செறிவூட்டப்பட்ட அணுசக்திப் பொருட்களை சர்வதேச அணுசக்தி முகமையின் மேற்பார்வையின் கீழ் அந்த இடத்திலேயே கலப்பதன் மூலம் அகற்றுவதற்கு இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என அதில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
![]()