கவிதைகள்

திருவடி சரணம் திருமுரு கையா!… கவிதை… ஜெயராம்சர்மா

உருகிடு மடியார் உளமுறை வோனே
கதிர் வடிவேலா கந்தா சரணம்
வருவினை யகல வைத்திடு முருகா
திருவடி சரணம் திருமுரு கையா

அடங்கா அசுரரை அடக்கிய குமரா
ஆணவப் பேயை அகற்றிடு குமரா
உறங்கா உன்னையே நினைக்கிறோம் குமரா
உன்கடைக் கண்ணால் பார்த்திடு குமரா

வேலால் வினைகள் வெட்டிடும் முருகா
வெற்றிக் கொடியை ஏந்திய முருகா
காலடி கிடக்க அருளிடு முருகா
காலனும் அணுகா பார்த்திடு முருகா

அழகு மயிலில் அமர்ந்திடும் குமரா
அருண கிருக்கு அருளிய குமரா
அவ்வைத் தமிழை அணைத்த நல்குமரா
அடியார் தமிழையும் அணைப்பாய் குமரா

ஆசை வலையினை அறுத்திடு குமரா
மாசுடை மனத்தை மாற்றிடு முருகா
காசினி வாழ்வினில் கஷ்டங்கள் அகல
கந்தா குகனே காப்பாய் காப்பாய் !

மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button