தலையணையுடன் நள்ளிரவில் முறையிட சென்ற பெண்

மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பை பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நள்ளிரவில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த தொடர் மின்வெட்டால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, பெண் ஒருவர் நள்ளிரவில் தன் தலையணையுடன் மின்சார அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அப்பெண் கண்ணீர் மல்கக் கதறுவது சோகத்தை ஏற்படுத்துகிறது. அவர் கூறுகையில், “இரவு 11 மணிக்கு வேலை முடிந்து வருகிறேன். மீண்டும் காலை 6 மணிக்கு வேலைக்குக் கிளம்ப வேண்டும். ஆனால் தினமும் நள்ளிரவில் பவர்கட் செய்து காலை தான் கரண்ட் விடுகிறார்கள்… நல்லா தூங்கி ஒரு வாரம் ஆச்சு… என்னால இந்த சித்ரவதையை இதுக்கு மேல தாங்க முடியாது… மனசளவுல உடைஞ்சிட்டேன்… போதும்…” என்று வேதனை தெரிவித்துள்ளார்.
மின்சாரத் துறையின் அலட்சியப் போக்கால் ஏற்படும் இத்தகைய தொடர் மின்வெட்டுகள் குறித்து அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
![]()