பலதும் பத்தும்

`மாமா… உன் பொண்ண கொடு`னு இனி கேட்க முடியாது…

நெருங்கிய இரத்த உறவுகளுக்கு இடையிலான திருமண வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், சுவீடன் நாட்டு பாராளுமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய சட்டத்தை அதிரடியாக நிறைவேற்றியுள்ளது.

அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற நெருங்கிய இரத்த உறவுகளுக்கு இடையே நடைபெறும் திருமணங்களை (Cousin Marriage) முற்றிலும் தடை செய்யும் வகையிலேயே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை இயற்றியதன் பின்னணியில் மிக முக்கியமான காரணங்களை சுவீடன் அரசு முன்வைத்துள்ளது:

• சமூகப் பாதுகாப்பு: குடும்ப அழுத்தம், கௌரவக் கொலைகள் மற்றும் கட்டாயத் திருமணங்கள் மூலம் இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் ஒடுக்கப்படுவதைத் தடுத்தல்.

• ஆரோக்கியம்: நெருங்கிய உறவுகளுக்குள் நடக்கும் திருமணங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் மரபணு ரீதியான பிறவிக் குறைபாடுகளைக் கட்டுப்படுத்துதல்.

உலக நாடுகளிடையே புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ள இந்தச் சட்டம், எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி (2026.07.01) முதல் அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள்: இந்தச் சட்டத்தின்படி, இனிவரும் காலங்களில் வெளிநாடுகளில் வைத்து இத்தகைய நெருங்கிய உறவுகளுக்குள் நடத்தப்படும் திருமணங்கள் கூட, சுவீடன் நாட்டில் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட மாட்டாது. சுவீடன் நாட்டுப் பிரஜைகள் மட்டுமன்றி, வெளிநாடுகளில் இருந்து அங்கு வந்து குடியேறியவர்களுக்கும் இந்தச் சட்ட விதிகள், எந்தவித விதிவிலக்குகளும் இன்றி சமமாகப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடான நோர்வேயைத் தொடர்ந்து, நெருங்கிய உறவினர்களுக்கு இடையிலான திருமணங்களைத் தடை செய்யும் ஐரோப்பிய நாடுகளின் வரிசையில் சுவீடனும் தற்போது அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இது சமூக அமைப்பையும் தனிநபர் சுதந்திரத்தையும் மேம்படுத்துவதற்கான ஒரு துணிச்சலான முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button