உலகம்

கனேடிய குடியுரிமைச் சான்றிதழ்களை திருப்பிக் கொடுக்க கோரும் கடிதம்: அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தகவல்

கனடாவில், வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஆனால், அவர்களில் பலருக்கு அதிர்ச்சியை உருவாக்கும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது!

கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் திகதி, Bill C-3 என அழைக்கப்படும், வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஏராளமானோர் கனடாவில் குடியுரிமை கோரி விண்ணப்பித்தார்கள்.

அவர்களில் ஆயிரக்கணக்கானோருக்கு குடியுரிமைச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிலையில், அப்படி கனேடிய குடியுரிமைச் சான்றிதழ் பெற்ற பலருக்கு கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பிடமிருந்து கடிதம் ஒன்று வந்துள்ளது.

கனேடிய குடியுரிமைப் பதிவாளரான பெக்கி சன் (Peggy Sun) என்பவர் கையொப்பமிட்டுள்ள அந்த கடிதத்தில், ’நீங்கள் கனேடிய குடியுரிமைச் சான்றிதழைப் பெறுவதற்குத் தகுதி பெறாமல் இருக்கலாம் என்பதைக் குறிப்பிடும் தகவல் என்னிடம் உள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதே இந்தக் கடிதத்தின் நோக்கம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கடிதம் அனுப்பப்பட்டவர்களுடைய ஆவணங்களை மீளாய்வு செய்யவேண்டியுள்ளதாகவும், ஆகவே அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமைச் சான்றிதழ்களை திருப்பிக் கொடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்த விடயம் குடியுரிமைச் சான்றிதழ் பெற்றவர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

சிலர் இந்த குடியுரிமைச் சான்றிதழ் பெற்றதைத் தொடர்ந்து கனடாவில் வந்து குடியமர்வதற்காக தங்கள் வீடுகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், அந்த திட்டங்களை ஒத்திவைத்துள்ளார்கள்.

இந்நிலையில், அப்படி குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களின் ஆவணங்கள் குறித்து கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பிற்கு சந்தேகம் இருக்கும் பட்சத்தில், குடியுரிமைச் சான்றிதழ் வழங்கும் முன்பே இது குறித்து விசாரித்திருக்கவேண்டும்.

நம்பிக்கையூட்டிவிட்டு பிறகு இப்படி திடீரென சான்றிதழ்களைத் திருப்பிக் கேட்பது துரதிர்ஷ்டவசமானது மற்றும் கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்கிறார்கள் புலம்பெயர்தல் சட்டத்தரணிகள் சிலர்.

இந்த கடிதம் பெற்றவர்கள் அமெரிக்காவில் இருப்பார்களானால், அமெரிக்காவில் நிலவும் சூழல் காரணமாக, கனடாவில் குடியுரிமை கிடைக்கும், கனடாவுக்கு வந்துவிடலாம் என தயாராகிக்கொண்டிருந்த நேரத்தில் இப்படி ஒரு கடிதம் வந்துள்ளதால் அவர்கள் பயங்கர கோபத்திலிருப்பார்கள்.

குடியுரிமைச் சான்றிதழை திருப்பிக் கொடுக்குமாறு கடிதம் பெற்றவர்கள் கனடாவில் இருப்பார்களானால், அவர்கள் புதிதாக வேலை ஒன்றைத் தொடங்கவும், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவும் திட்டமிட்டிருந்திருப்பார்கள்.

ஆக, அந்தக் கடிதம் அவர்களுக்கு அச்சத்தை உருவாக்கியிருக்கும் என்கிறார்கள் சட்டத்தரணிகள்!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button