உலகம்

வளைகுடாவில் அமெரிக்காவின் இரகசிய எண்ணெய் நடவடிக்கை?; செயற்கைக்கோள் படங்கள் வெளியிடும் உண்மை

வளைகுடா நாடுகளின் எரிபொருள் ஏற்றுமதியைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக, அமெரிக்க இராணுவம் வான்வெளி மற்றும் கடல்சார் ட்ரோன்கள், உலங்குவானூர்திகள் ஆகியவற்றின் உதவியுடன் கடலில் கப்பல்களுக்கு இடையே இரகசிய எண்ணெய் பரிமாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள், பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்காக ஈரான் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த கப்பல்களுக்கு இடையிலான எண்ணெய் பரிமாற்ற உத்தியையே ஒத்ததாக இருப்பதாகவும், இந்த விவகாரம் தொடர்பில் அறிவு கொண்ட 11 தரப்புகள் தகவல் வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா (Fujairah) கடற்கரைக்கு அப்பாலும், Sohar துறைமுகத்திற்கு அருகிலும் இந்த எண்ணெய் பரிமாற்ற நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளில் குறைந்தது 92 கப்பல்கள் ஈடுபட்டுள்ளதாக கப்பல் தரவுகள் மற்றும் செயற்கைக்கோள் படங்களின் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

ஜூன் 11 ஆம் திகதி பதிவுசெய்யப்பட்ட செயற்கைக்கோள் படங்களின்படி, ஒரே நேரத்தில் 17 ஜோடி கப்பல்கள் எண்ணெய் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஜூன் 9 ஆம் திகதி ஹோர்முஸ் நீரிணை அருகே வீழ்ந்த அமெரிக்க ‘அப்பாச்சி’ உலங்குவானூர்தி இந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய பணியில் ஈடுபட்டிருந்ததாக சில ஆதாரங்கள் தெரிவித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அந்த உலங்குவானூர்தியின் துல்லியமான பங்கு குறித்து ரொய்ட்டர்ஸ் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம், கடல்சார் எண்ணெய் பரிமாற்ற நடவடிக்கைகளில் தங்களது படைகள் நேரடியாக ஈடுபட்டதாகும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

அறிக்கையின்படி, எண்ணெய் ஏற்றிய கப்பல்கள் தங்களது இருப்பிடத்தை வெளிப்படுத்தும் டிரான்ஸ்பாண்டர் கருவிகளை அணைத்தும், விளக்குகளை மங்கலாக்கியும் இரவு நேரங்களில் பயணிக்கின்றன.

பின்னர், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பெரிய எண்ணெய் கப்பல்களுடன் இணைந்து எண்ணெய் பரிமாற்றம் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. ஒரு பரிமாற்ற நடவடிக்கைக்கு 24 முதல் 40 மணித்தியாலங்கள் வரை ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் – இஸ்ரேல் மோதலால் ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சமாளிக்கவும், உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பணவீக்க அழுத்தங்களை கட்டுப்படுத்தவும் இந்த மாற்று நடைமுறை பயன்படுத்தப்படுவதாக ரொய்ட்டர்ஸ் மதிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இராணுவக் கப்பல்களின் நேரடி பாதுகாப்பின்றி இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள், கடலில் கப்பல்கள் மோதிக்கொள்ளும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என கடல்சார் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button