பலதும் பத்தும்

மொழி தெரியாததால் கேரள இளைஞர் அடித்துக்கொலை!

மேற்கு வங்க மாநிலத்தில் திருடன் என தவறாக கருதி கேரள மாநில இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் கடந்த 09 ஆம் திகதி சங்கிஜஹான் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த நபர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சங்கிஜஹானில் குல்தாலி பகுதிக்கு தனது வேலை செய்ய நண்பர்களுடன் வந்துள்ளார்.

கடந்த 09 ஆம் திகதி காலை, அவர் மட்டும் தனியாக அருகில் உள்ள ஒரு உள்ளூர் சந்தைக்கு சென்றுள்ளார்.

ஆனால், திரும்பும் போது எதிர்பாராதவிதமாக அவர் வழியைத் தவறவிட்டு, அப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நீண்ட நேரமாக அலைந்து திரிந்துள்ளார்.

அப்பகுதியில் புதிய நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிவதைக் கண்ட கிராம மக்கள் அவரைப் பிடித்து விசாரித்துள்ளனர்.

அவரிடம் கிராம மக்கள் பெங்காலி மொழியில் கேள்விகளைக் கேட்டுள்ளனர். ஆனால், அந்த வாலிபருக்குப் பெங்காலி மொழி தெரியாததாலும், அவர் மலையாளம் அல்லது ஆங்கிலத்தில் பேசியதாலும் கிராம மக்களால் அவரது பதிலை புரிந்துகொள்ள முடியவில்லை.

இதனால் அவர் ஒரு திருடன் என்ற சந்தேகம் கிராம மக்களிடையே வலுத்துள்ளது. ஆத்திரமடைந்த ஒரு கும்பல், அந்த வாலிபரைக் கயிற்றால் கட்டி வைத்து மிருகத்தனமாக அடித்து துன்புறுத்தியுள்ளது.

வீதியோரமாக கடுமையான காயங்களுடன் வாலிபர் ஒருவர் மயங்கிக் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், குல்தாலி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டனர்.

உடனடியாக அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்தனர்.

ஆரம்பத்தில் அந்த வாலிபர் எப்படி இறந்தார், அவரது பின்னணி என்ன என்பது குறித்துப் பொலிஸாருக்கு எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை.

ஆனால், சில நாட்களுக்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் வைரலான ஒரு வீடியோ காட்சியை ஆய்வு செய்த போது, அந்த வாலிபர் அடித்துக் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் முதற்கட்டமாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இருவர் சிறுவர்கள் ஆவர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button