இலங்கை

21 மாத ஆட்சியில் நாட்டினை சீரழித்து விட்டனர்; முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்தி பலத்தைக் காட்டுமாறு அரசுக்கு எதிரணி சவால்!

தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 21 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், எமது நாட்டின் பொருளாதாரம், முதலீடுகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் பெரும் வீழ்ச்சியை நோக்கிச் சென்றுள்ளன என்றும், முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்தி அரசு தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் சவால் விடுத்துள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள அக்கட்சியின் பிரதான அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்தச் சவாலை விடுத்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கான வற் வரியை நீக்குவதாகவும், மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதாகவும், கப்பலில் இருந்து தரையிறக்கப்படும் விலைக்கே எரிபொருளை வழங்குவதாகவும் விலைகளைக் குறிப்பிட்டுத் தெரிவித்தே தேசிய மக்கள் சக்தியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஆட்சிக்கு வந்தன. ஆனால், தற்போது எரிபொருள் விலையைப் பெருமளவில் உயர்த்தியுள்ளதுடன், மின்சாரக் கட்டணத்தை ஒரேடியாக 43 சதவீதத்தால் அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

 

கடந்த 2024ஆம் ஆண்டில் 140 பில்லியன் ரூபா இலாபமீட்டிய இலங்கை மின்சார சபை, தற்போதைய அரசின் மோசமான நிர்வாகத்தால் 38 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால், மக்கள் தங்களின் மூன்று நேர உணவில் ஒரு நேர உணவைத் தவிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 

அரசின் தவறான கொள்கைகளால் டொலரின் மதிப்பு சில மாதங்களுக்குள் 50 ரூபாவால் உயர்ந்துள்ளது. டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்தமையால் நாட்டின் கடன் சுமை ஒரேடியாக 2 ஆயிரம் பில்லியன் ரூபாவா ல் அதிகரித்துள்ளது.

 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டைப் பொறுப்பேற்கும்போது 93 பில்லியனாக இருந்த நாட்டின் கடன் சுமை, தற்போது எவ்வித அபிவிருத்தியுமின்றி 107 ஆக அதிகரித்துள்ளது.

 

மேலும், தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்தமையால் 300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போனது. அந்த மின்சாரத் தேவையை ஈடுசெய்ய டீசல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதால், மேலதிகமாக ஒரு டீசல் கப்பலை நாட்டுக்குக் கொண்டுவர நேரிட்டது. கடந்த ஆண்டு முழுவதும் எரிபொருள் இறக்குமதிக்கு 1,500 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களுக்குள்ளேயே 1,500 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகை வீணடிக்கப்பட்டுள்ளது.

 

நாட்டில் உள்ள 527 அரச நிறுவனங்களில் கட்டுமானத்துறை போன்ற போட்டித்தன்மை வாய்ந்த சந்தையைக் கொண்ட நிறுவனங்கள் 709 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளன. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு 23 பில்லியன் ரூபாவை அரசு வழங்கிய போதிலும் அது 25 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளது. நட்டமடையும் அரச நிறுவனங்களைப் பராமரிப்பதற்காக மட்டும் அரசு மக்களின் வரிப்பணத்திலிருந்து 103 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.

 

கடந்த 2024 ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட நேரடி வெளிநாட்டு முதலீடுகள் குறித்து நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தேன். ஆனால், அரசால் அதற்குப் பதிலளிக்க முடியாமல் கால அவகாசம் கோரியது. கொழும்பு பங்குச்சந்தைக்கு வந்த 10 மில்லியனைத் தவிர வேறு எந்தவொரு டொலரும் நாட்டுக்குக் கிடைக்கவில்லை.

 

அரசு கூறியது போல மக்களின் வாழ்க்கையை வளமாக்கியுள்ளதா என்பதை நிரூபிப்பதற்கான சந்தர்ப்பம் இப்போது வந்துள்ளது. எனவே, வெற்றுப் பொய்ப் பிரசாரங்களைச் செய்யாமல் முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசுக்குச் சவால் விடுக்கின்றேன்.” – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button