அவள் தொட்ட இடம்… (நெடுங்கவிதை)…. முத்தழகு கவியரசன் – திருநெல்வேலி

வாழ்க்கை என்றால் என்னவென்று
யாரோ கேட்டார்கள். சிரித்தேன்.
இன்று அதே கேள்வியை
என்னுள்ளம் என்னிடமே கேட்கிறது.
பதில் சொல்ல முடியாமல்
ரத்தத்தை வார்த்தை வார்த்தையாகக் கக்கிப் பிழிகிறேன்.
வாழ்க்கை என்பது
பிரேக் பிடிக்காத ஒரு இமைப்பொழுதில்
எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு,
மிச்சம் இருக்கும் சாம்பலை
இரு கைகளாலும் அள்ளி,
அதில் உயிர் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று நம்பி,
கண்ணீரால் நனைத்து, பெருமூச்சால் ஊதி ஊதி
எரிய வைக்க முயல்வது.
அந்தச் சாம்பலுக்குப் பெயர் தான் நான்.
உயிரோடு எரியும் சாம்பல்.
அவள் கலைவாணி.
பெயரை உச்சரிக்கும்போதே
நாக்கில் நெருஞ்சி முள் குத்துகிறது இப்போது.
அவள் பெயர் இல்லை இனி.
அவள் ஒரு காயம். ஈட்டி பாய்ந்த காயம். ஆறாத காயம்.
மூச்சு விடும் போதெல்லாம்
குருதியும் சீழும் சேர்ந்து வடியும் காயம்.
கண் மூடினால் கனவில் வந்து குத்தும் காயம்.
கண் திறந்தால் நிஜத்தில் அறுத்துக் கொல்லும் காயம்.
அதொரு சனிக்கிழமை. வீடு முழுக்க வெளிச்சம்.
சூரியன் வீட்டுக்குள் குடியேறியது போல் வெளிச்சம்.
மூன்று தேவதைகள். என் மகள்கள். என் உயிரின் மூன்று துண்டுகள்.
“அப்பா, ஐஸ்கிரீம்” என்று மூன்று குரலும் சேர்ந்து
காற்றில் தேன் தூவியது.
அவள் என்னைப் பார்த்தாள்.
அந்தப் பார்வையில் ஒரு கடல் இருந்தது.
காதல் கடல். கருணைக் கடல். கனிவுக் கடல்.
“வாங்கித் தருவார் உங்க அப்பா” என்றாள்.
அவ்வளவு தான்.
அது தான் அவள் பேசிய கடைசி வார்த்தை.
அந்த வார்த்தைக்குப் பிறகு
என் உலகத்தில் சத்தமே செத்துப்போனது.
ஊமையாகிவிட்டது எல்லாம்.
காற்றுக்குக் கூட குரல் இல்லை.
தெருமுனையில் கருமை.
ஒரு மாடு நின்றது. இல்லை. அது மாடு இல்லை.
என் தலையெழுத்து நான்கு காலில் நின்றது.
என் விதி கொம்பு முளைத்து நின்றது.
நான் வண்டியின் பிரேக் அழுத்தினேன்.
கை அழுத்தியது. பயம் அழுத்தியது.
ஆனால் என் விதி அழுத்தவில்லை.
வண்டி சரிந்தது. நாங்கள் தார்ச்சாலையில்
நெல்மணிகளைப் போல் சிதறினோம்.
நானும் பிள்ளைகளும் அழுதுகொண்டே எழுந்தோம்.
அவள் மட்டும் எழவில்லை.
ஒரு உடைந்த மல்லிகைக் கொடி போலக் கிடந்தாள்.
வாசம் மட்டும் போகவில்லை.
உயிர் மட்டும் போய்விட்டது.
தலையில் இருந்து வழிந்த குருதி
கருஞ்சாலையில் புதுக் கோலம் போட்டது.
செங்குருதிக் கோலம். அந்தக் கோலம் தான்
என் தலைவிதி.
இனி அழித்துவிட முடியாத கோலம்.
சாகும்வரை.
தீவிர கண்காணிப்புப் பிரிவு.
வெள்ளைச் சுவர்கள். வெள்ளை உடைகள். வெள்ளைப் படுக்கை.
வெள்ளையாகிப் போன என் வாழ்க்கை.
ஏழு நாட்கள் வாசலில் கிடந்தேன்.
ஏழு நாட்கள் இல்லை அவை.
ஏழு யுகங்கள். ஏழு பிறவிகள். ஏழு நரகங்கள்.
ஒவ்வொரு நொடியும் செத்துச் செத்துப் பிழைத்தேன்.
“மூளைச்சாவு” என்றார்கள்.
மருத்துவர்கள் ஆங்கிலத்தில் சொன்ன வார்த்தை அது.
தமிழில் சொன்னால் “அவள் செத்துவிட்டாள்”.
ஆனால் உள்ளம் அதை ஏற்கவில்லை. ஏற்க மறுத்தது.
உடல் மட்டும் கிடக்கிறது. உயிர் எங்கே போனது?
என் உயிரைக் கேட்டிருந்தால்
அவள் எடுத்துக்கொண்டு போயிருப்பாளே.
ஏன் என்னை மட்டும் அனாதையாக விட்டுவிட்டுப் போனாள்?

அவள் கடைசி மூச்சு
என் உள்ளங்கையில் வந்து விழுந்து அடங்கியது.
சில்லென்று இருந்தது.
வாடைக்காற்றைப் போல. மார்கழி மாதத்துப் பனியைப் போல.
மயானத்து மண்ணைப் போல.
அதன் பிறகு என் கைக்கு வெம்மையே இல்லை.
எவ்வளவு வெயிலில் நின்றாலும்,
எவ்வளவு நெருப்பில் காய்ந்தாலும்
அந்தச் சிலிர்ப்பு மட்டும் போகவில்லை.
அது சிலிர்ப்பு இல்லை.
சாவின் ஸ்பரிசம்.
சுடுகாட்டுக்குக் கொண்டுபோனார்கள். நெருப்பு வைத்தார்கள்.
எரிந்தது அவள் உடல் இல்லை.
என் உயிர். என் கனவு. என் எதிர்காலம்.
நான் பார்த்துக்கொண்டே நின்றேன்.
கல்லாக நின்றேன்.
ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை.
கண்ணீர் எல்லாம் உள்ளுக்குள் கடலாகத் தேங்கிவிட்டது.
வெளியே வந்தால் நான் உடைந்து
நொறுங்கிப் போவேன்.
வீடு திரும்பினேன். அது வீடு இல்லை.
பாழடைந்த கருவறை. சாமி இல்லாத கருவறை. கடவுள் கைவிட்ட கருவறை.
அவள் உடுத்திய சேலை கொடியில் காய்கிறது.
இன்னும் ஈரம் போகவில்லை.
என் கண்ணீர் காயவில்லை.
அந்த ஈரத்தில் இன்னும் அவள் வியர்வை வாசம் இருக்கிறது.
முகர்ந்து முகர்ந்து தான் இன்னும் பைத்தியமாகாமல் இருக்கிறேன்.
பீரோவைத் திறந்தேன்.
அவள் பணிபுரிந்த நிதி நிலையத்தின் அடையாள அட்டை.
புகைப்படத்தில் அவள் சிரிக்கிறாள்.
“ஏன் அழுகிறாய் முட்டாளே, நான் இங்கே தானே இருக்கிறேன்”
என்று கேட்பது போல இருக்கிறது.
பதில் சொல்ல வாய் வரவில்லை.
தொண்டைக்குள் முள் சிக்கிக்கொண்டது போல் வலிக்கிறது.
நிலைக்கண்ணாடியில் அவள் வைத்த குங்குமச் சிமிழ்.
திறந்தேன். உள்ளே குங்குமம் இல்லை.
என் வாழ்க்கையின் சாம்பல் தான் இருந்தது.
கருகிப்போன என் கனவின் சாம்பல்.
அதை நெற்றியில் இட்டுக்கொண்டேன்.
இனி எனக்கு அது தான் திலகம். விதவைத் திலகம்.
மூன்று மாதம் கழித்து
அவள் வேலைபார்த்த நிதி நிலையத்தில் இருந்து
அழைப்பு வந்தது.
“கருணை அடிப்படையில் பணி நியமனம்”.
கருணை என்ற வார்த்தையைக் கேட்டதும்
நெஞ்சு கொதித்தது.
காறித் துப்ப வேண்டும் போல் இருந்தது.
யாருக்கு வேண்டும் இந்தக் கருணை?
என் மனைவியைத் திருப்பித் தர முடியுமா
இந்தக் கருணையால்?
என் பிள்ளைகளுக்குத் தாயைத் திருப்பித் தர முடியுமா? முடியாது.
ஆனால் வீட்டில் மூன்று பச்சை மண் குழந்தைகள்.
பால் மணம் மாறாத குழந்தைகள்.
அவர்கள் முகத்தைப் பார்த்ததும்
கோபத்தை விழுங்கிக்கொண்டேன்.
ரோஷத்தைக் கொன்றுவிட்டேன்.
கருணையை ஏற்றுக்கொண்டேன்.
வேறு வழி இல்லை.
முதல் நாள் பணிக்குச் சென்றேன்.
அவள் அமர்ந்த இருக்கை.
இன்னும் அவள் உடலின் வெம்மை ஆறவில்லை.
அமர்ந்தேன்.
மின்சாரம் தாக்கியது போல் உடல் நடுங்கியது.
அவள் தொட்ட கணினி.
திரையில் அவள் விரல் தடம் தெரிந்தது.
தொட்டுப் பார்த்தேன்.
என் விரல் அவள் விரல் மேல் பட்டது போல் இருந்தது.
அவள் கையெழுத்திட்ட பதிவேடு.
மை காயவே இல்லை.
இன்னும் ஈரமாக இருந்தது.
என் கண்ணீரைப் போல.
இது பணி இல்லை.
இது தவம்.
நாள்தோறும் அவள் நடந்த இடத்தில் நடந்து,
அவள் தொட்ட பொருளைத் தொட்டு,
அவள் சுவாசித்த காற்றைச் சுவாசித்து,
அவளோடு வாழும் தவம்.
காசாளர் இருக்கையில்
அமர்ந்து பணம் எண்ணிக் கொடுக்கிறேன்.
ஆனால் நான் எண்ணுவது தாள்களை இல்லை.
அவள் இல்லாத நாட்களை.
இன்றோடு ஐநூற்று பதினேழு.
ஒவ்வொரு நாளும் ஒரு முள்கிரீடம்.
என் தலையில் இறங்கி இறங்கி
ரத்தம் கசிய வைக்கிறது.
ஒவ்வொரு நாளும் ஒரு சவப்பெட்டி.
அதற்குள் நான் உயிரோடு புதைக்கப்படுகிறேன்.
வீட்டில் ஏழு அகவை நிரம்பிய மூத்த மகள்
இப்போது தாய். தாயாகிவிட்டாள்.
பால் மணம் மாறாத வாய் “அப்பா”
என்று கூப்பிட வேண்டிய வாய்,
இப்போது தங்கைகளுக்குச் “சாப்பிடு கண்ணு” என்று சொல்கிறது.
அவள் தங்கைகளுக்குச் சோறூட்டுகிறாள்.
தலைவாரி இரட்டைப் பின்னல் போடுகிறாள்.
சடை போடும்போது அவள் கைகள் நடுங்குகின்றன.
ஆனாலும் போடுகிறாள்.
இரவில் என் கண்ணீரைத் துடைத்து
“அப்பா அழாதீங்க, நாங்க இருக்கோம்ல” என்கிறாள்.
அவள் கண்ணில் கலைவாணி தெரிகிறாள்.
அவள் கோபத்தில் கலைவாணி தெரிகிறாள்.
அவள் சிரிப்பில் கலைவாணி தெரிகிறாள்.
அவள் மௌனத்தில் கூட கலைவாணி தெரிகிறாள்.
ஆனால் அவளை “அம்மா” என்று அழைக்க முடியாது.
அழைத்தால் அது கலைவாணிக்குச் செய்யும் மாபெரும் துரோகம்.
பெற்ற வயிற்றுக்குச் செய்யும் பச்சைத் துரோகம்.
அந்தப் பாவத்தைச் சுமக்க
முதுகெலும்பில் தெம்பு இல்லை.
இரவு பத்து மணிக்கு மேல்
வீடு அமைதியாகிவிடும்.
மூவரும் என் நெஞ்சில் தலைசாய்த்து
உறங்கிவிடுவார்கள்.
மூன்று இமைகள். இந்த இமைகள் தான்
நான் சாகாமல் இருக்கக் காரணம்.
நான் மட்டும் விழித்திருப்பேன்.
உலகமே உறங்கும்போது
என் துயரம் மட்டும் விழித்திருக்கும்.
கோரப்பற்களோடு என்னைப் பார்த்துச் சிரிக்கும்.
மெதுவாக செல்பேசியை எடுப்பேன்.
திருடன் போல எடுப்பேன்.
நடுங்கும் விரலால் அவள் எண்ணை அழுத்துவேன்.
“மன்னிக்கவும், நீங்கள் தொடர்புகொள்ள முயலும் எண்
தற்போது உபயோகத்தில் இல்லை” என்று
ஒரு இயந்திரப் பெண் குரல் சொல்லும்.
அது குரல் இல்லை. சவுக்கு. நெஞ்சைப் பிளக்கும் சவுக்கு.
ஆயிரம் முறை கேட்டுவிட்டேன்.
ஆயிரத்து ஒராவது முறையும் அழுத்துவேன்.
ஒருவேளை… அந்த ஒருவேளை
என்ற நம்பிக்கை தான்
என்னை இன்னும் கொல்லாமல் வைத்திருக்கிறது.
ஒருவேளை அவள் எடுத்துவிட்டால்?
“என்னங்க, பிள்ளைங்க சாப்பிட்டாங்களா? நீங்க சாப்பிட்டீங்களா?
ஏன் இன்னும் தூங்கல?” என்று கேட்டுவிட்டால்?
அந்த ஒரு வார்த்தைக்காகத் தான்
இந்த உயிர் இன்னும் ஊசலாடுகிறது.
அந்த ஒரு வார்த்தை கிடைக்காது
என்று மூளைக்குத் தெரியும்.
ஆனால் மனசு கேட்க மாட்டேங்குது.
காத்திருக்கிறது. காத்திருப்பது தான்
இப்போது என் முழுநேர வேலை.
வாழ்க்கை என்றால் என்ன தெரியுமா?
பிரேக் பிடிக்காத ஒரு இமைப்பொழுதில்
அனைத்தையும் பறிகொடுத்துவிட்டு,
எஞ்சிய கடனை அடைக்க,
புன்னகை என்ற முகமூடியை அணிந்துகொண்டு,
ஊரார் முன் வேஷம் கட்டி,
உள்ளுக்குள் நாள்தோறும்
செத்துச் செத்துப் பிழைப்பது.
அவ்வளவு தான் வாழ்க்கை.
வேறொன்றும் இல்லை.
காதல் இல்லை. கனவு இல்லை. எதிர்காலம் இல்லை.
இருப்பது எல்லாம் கடந்தகாலம் மட்டும் தான்.
அந்தக் கடந்தகாலம் என்ற சவப்பெட்டிக்குள் தான்
என் நிகழ்காலம் புதைக்கப்பட்டிருக்கிறது.
அவள் என்னை விட்டுப் போகவில்லை.
எனக்குள் வந்துவிட்டாள். குடியேறிவிட்டாள்.
நிரந்தரமாகக் குடியேறிவிட்டாள்.
நான் இடும் ஒவ்வொரு கையொப்பத்திலும்
அவள் பெயர் இருக்கிறது.
நான் வாங்கும் ஒவ்வொரு மாத ஊதியத்திலும்
அவள் மூச்சு இருக்கிறது.
நான் சுமக்கும் இந்த மூன்று உயிர்களும்
அவள் எனக்கு விட்டுச்சென்ற சொத்து இல்லை.
அவை அவளே தான். அவள் உடலின் நீட்சி. அவள் உயிரின் நீட்சி.
அவள் தான் இப்போது என் தாலி.
கழுத்தில் இல்லாத தாலி.
நெஞ்சுக்குள் கட்டிய தாலி.
அவள் தான் இப்போது என் கொடிவழி.
அறுத்துவிட முடியாத கொடிவழி.
மண்ணுக்குள் போகும்வரை சுமக்க வேண்டிய கொடிவழி.
கண்ணீரால் நனைத்து, பெருமூச்சால் காயவைத்து,
ரத்தத்தால் உரமிட்டு வளர்க்க வேண்டிய கொடிவழி.
அவள் தொட்ட எல்லா இடமும்
இன்னும் உயிரோடு இருக்கிறது.
அவள் அமர்ந்த இருக்கை, படுத்த தலையணை,
உடுத்திய சேலை, பெற்ற மக்கள், கட்டிய கணவன்,
எல்லாமே அவள் தொட்ட இடங்கள். அவள் கை பட்ட இடங்கள்.
அவள் மூச்சுப் பட்ட இடங்கள். அவள் மட்டும் இல்லை.
இதுதான் விதியின் கொடூர நகைச்சுவை.
தொட்டவள் போய்விட்டாள்.
தொடப்பட்டவை மட்டும் அழ முடியாமல்,
வாழ முடியாமல், சாக முடியாமல்
நடைப்பிணங்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன.
(நினைவுகள் தான் மனிதனுக்கு விதிக்கப்பட்ட மிகக் கொடூரமான ஆயுள் தண்டனை. கம்பிகள் இல்லாத சிறைக்கூடம் அது. கதவுகள் இல்லாத சிறைக்கூடம் அது. காவலர்கள் இல்லாத சிறைக்கூடம் அது. மரணம் மட்டுமே விடுதலை தரும் சிறைக்கூடம் அது. அந்தச் சிறைக்குள் தான் நாம் எல்லாரும் ஆயுள் கைதிகள். தப்பிக்க வழியே இல்லாத கைதிகள். இது உண்மையில் ஒருவருக்கு நடந்த சம்பவம். புனைக்குள் கொண்டு வந்திருக்கிறேன்.)

![]()