பொருளாதார வீழ்ச்சியை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது – ராஜித்த சேனாரத்ன

அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாத வகையில் நாட்டின் பொருளாதரம் வீழ்ச்சியடைந்து செல்கிறது. அரசாங்கத்தின் இயலாமையே இதற்கு காரணமாகும். அன்று ரணில் விக்ரமசிங்க நாட்ை பொறுப்பேற்கும்போது இதனைவிட பாரிய பொருளாதார நெருக்கடி நிலைமை இருந்தது. என்றாலும் இரண்டு வருடங்களில் நாட்டை மீள கட்டியெழுப்ப அவர் நடவடிக்கை எடுத்தார் என முன்னாள் அமைச்சர் ராஜித்த நேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் கூட்டு எதிர்கட்சி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
அன்று சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் எவ்வாறு பணியாற்றினோம்? எவ்வாறு நமது மக்களுக்காகத் தீர்மானங்களை எடுத்தோம்? இன்று ஏன் அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்க முடியாமல் போயுள்ளது? இதையே நாம் பார்க்க வேண்டும்.
ரணில் விக்ரமசிங்க அன்று எதிர்கொண்ட நெருக்கடி என்பது இன்று மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது ஏதோ ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி அல்ல. இங்கு இலங்கையின் அனைத்துத் துறைகளும் உடைந்து விழுந்திருந்தன. இந்நாட்டில் உண்பதற்கு உணவு இருக்கவில்லை, எரிபொருள் இருக்கவில்லை, மின்சாரம் இருக்கவில்லை. அது மாத்திரமன்றிப் பணம் இருக்கவில்லை, உணவுப் பொருட்கள் இருக்கவில்லை.
அனைத்து வகையான நெருக்கடிகளையுமே அன்று ரணில் விக்ரமசிங்க எதிர்கொண்டார். அத்தகையதொரு நெருக்கடியைக் கையில் எடுத்து, இரண்டு ஆண்டுகள் செல்லும்போது அனைத்துப் பொருளாதாரக் சுட்டிகளையும் மேம்படுத்த முடிந்ததென்றால், அவ்வாறு மேம்படுத்தப்பட்டுள்ள சுட்டிகள் மத்திய கிழக்கு போர் ஒன்று வந்ததனால், இந்த ஒரேயொரு காரணத்திற்காக எவ்வாறு சரிந்து விழ முடியும்?
அன்று இலங்கைபஞ்சம் மற்றும் நோயால் சீரழிந்த நகரம் போல இருந்தது. இந்நாட்டில் எதுவும் இருக்கவில்லை. மக்கள் நான்கு, ஐந்து கிலோமீட்டர் வரிசைகளில் நின்றுகொண்டிருந்தார்கள். வாகனங்கள் மற்றும் மக்கள் வரிசைகளில் இருந்தார்கள். அப்படியொரு அராஜக நிலை இந்நாட்டில் ஏற்பட்டிருந்தது. திறைசேரியின் வெளிநாட்டு நாணய இருப்பு 20 மில்லியன் டாெலர்கள் வரை சரிந்து வீழ்ந்திருந்தது. எதுவும் இருக்கவில்லை, பொருட்களைக் கொண்டுவரப் பணமில்லை, மக்களுக்கு உணவளிக்கப் பணமில்லை, எதுவுமே இல்லாத ஒரு நாட்டில் அன்று இதனை எவ்வாறு எதிர்கொண்டார்கள்?
அன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்நாட்டைப் பொறுப்பேற்கும்போது பொருளாதார வளர்ச்சி வீதம் மறை 17.2 ஆக வீழ்ச்சியடைந்திருந்தது. அதாவது பொருளாதார வளர்ச்சி அல்ல, பொருளாதாரம் மறை 17.2 வீத வேகத்தில் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது.
அவர் அதனைப் பொறுப்பேற்று 2024 ஆம் ஆண்டாகும்போது, இந்த மறைப் பெறுமானத்தை நேர் 5.3 வீத பொருளாதார வளர்ச்சி வேகத்திற்கு கொண்டுவந்தார். அதாவது இரண்டு வருடங்களுக்குள் பொருளாதாரத்தை 22.5வீதத்தால் மேம்படுத்தினார்.இதனால்தான் கலாநிதி டொனால்ட் லூ இதனைப் பொருளாதாரத்தின் ஒரு ‘அதிசயம்’ என்று கூறினார்.
அப்படியென்றால் இன்று எவ்வளவு? அவ்வாறு மீளெழுச்சி பெற்ற நாட்டில், இந்த மத்திய கிழக்கு நெருக்கடி வந்துவிட்டது என்று கூறி, ஏதோ ஒரு இடத்தில் இருக்கும் நெருக்கடியைக் காட்டி, இப்போது பொருளாதாரம் 3வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரம் குறைகிறது என்றால் இந்நாட்டில் எந்தவொரு அபிவிருத்தியும் இல்லை என்று அர்த்தம். இந்நாட்டின் முன்னேற்றம் இல்லை, முன்னேற்றம் சீர்குலைந்துள்ளது.
அதேபோன்று வெளிநாட்டு இருப்பு. அன்று 2022 நெருக்கடி நேரத்தில், கையில் 20 மில்லியன் டாெலர்கள் மாத்திரமே இருந்தன. பின்னர் 2024 ஆகும்போது அவர் அதனை 6100 மில்லியன் டாெலர்களாகக் கொண்டுவந்தார். அதாவது 6.1 பில்லியனாகக் கொண்டுவந்தார். இன்று எவ்வளவு இருக்கிறது? இன்று இப்போது கிடைத்த 700 மில்லியன் டாெலர்களையும் சேர்த்துப் பார்த்தால், மொத்தமாக ஏழரை பில்லியன் டாெலர்கள் வருகிறது. இப்போது மிக அண்மையில் செலுத்த வேண்டியுள்ள கடன் தொகை அண்ணளவாக 1300 மில்லியன் டாெலர்கள்.
அதாவது 1.3 பில்லியன். அதனையும் கழித்துவிட்டால் அப்போது என்னவாகும்? மீண்டும் 6.2 பில்லியனாகக் குறையும். அதுவும் இறக்குமதிகள் இல்லாமல், உணவுப் பொருட்களைக் கொண்டுவருவதற்கான செலவுகள் இல்லாமல் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவையும் கழிக்கப்படும் போது இன்னும் குறையும். இப்போது எவ்வளவு? 6.2 பில்லியன்.
அப்படியெனில், 2025 ஆம் ஆண்டாகும்போது நமது 2028ஆம் ஆண்டு கடன்களைச் செலுத்துவதற்குக் குறைந்தது நமது கையில் 8.5 பில்லியன் டாெலர்கள் இருக்க வேண்டும். இன்றும்கூட இல்லை.
2026 ஆம் ஆண்டாகும்போது டாெலர் இருப்பு 10 பில்லியனைத் தாண்டியிருக்க வேண்டும். நாம் கடனைச் செலுத்தாவிட்டால், நாடு மீண்டும் வங்குராேத்தாகும். ஆனால் 10 பில்லியன் இருக்க வேண்டிய நாட்டில் வெறும் 6.2 பில்லியன் மாத்திரமே உள்ளது.
இப்போது இதற்கு மத்திய கிழக்குப் போரை ஒரு காரணமாகக் கூற முடியுமா? அப்படியென்றால் ரணில் விக்ரமசிங்கவிற்கு இருந்த நெருக்கடி சாதாரண போரல்ல, இலங்கைக்குள் ஒரு உலகப் போர் போலத்தான் இருந்தது.
அப்போது அவர் அரச வருமானத்தை 16 வீதத்தால் அதிகரித்தார். இப்போது அரச வருமானம் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார்களே, அந்த அரச வருமானம் அதிகரிக்கும் போது எவ்வளவு வரி விதிக்கப்பட்டது? எவ்வளவு குறைந்த அளவிலான வரிகளை விதித்துத்தான் அந்த 6.1 பில்லியனைப் பெற்றார்கள்? இன்று எவ்வளவு வரிகள்? இன்று இந்த வாட் வரியைக் குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த இவர்கள், 20வீதத்துக்கும் அதிகமாக இப்போது வட் வரி விதிக்கிறார்கள். இவ்வாறு எல்லாவற்றிற்கும் வரி விதித்துவிட்டுத்தான் இன்று 6 வீத அரச வருமானத்தை அதிகரிக்கிறோம் என்று கூறுகிறார்கள்.
2022 இல் ரணில் விக்ரமசிங்க ஆட்சியைப் பொறுப்பேற்கும்போது வேலையின்மை வீதம் 7.2வீதமாக இருந்தது. அவர் 2024 ஆகும்போது அதனை 3.2 வீதமாகக் குறைத்தார். ஒரு பொருளாதார நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பதைத்தான் நான் இதற்கூடாகக் காட்டுகிறேன். இன்று இவர்களின் திறமையின்மையையே இந்த நிலைக்கு காரணமாகும் என்றார்.
![]()