இலங்கை

மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் ; அரசாங்கத்தை அசைத்துக் காட்டுகிறோம் ; ஜனாதிபதிக்கு சவால் விடுக்கிறேன்

அரசாங்கத்தை அசைக்க முடியுமா, முடியாதா என்பதை அறிய ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் அரசாங்கத்தை அசைத்துக் காட்டுகிறோம் என ஜனாதிபதிக்கு சவால் விடுக்கிறேன். அரசாங்கத்தின் பலவீனமான நிர்வாகத்தின் சுமை ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில்  இடம்பெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் எரிபொருள் இறக்குமதியின்போது அதன் வரி வலுசக்தி அமைச்சருக்கு செல்வதாக மக்கள் விடுதலை முன்னணியினர் குற்றஞ்சாட்டினார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வரியை இரத்துச் செய்து அதன் பயனை மக்களுக்கு எரிபொருள் விலை குறைப்பு ஊடாக வழங்குவதாக குறிப்பிட்டார்கள்.

தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் ஏற்பட்ட நிதி இழப்பை முகாமைத்துவம் செய்வதற்காகவே ஒவ்வொரு மாதமும் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படுகிறது.தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் இழக்கப்பட்ட பல பில்லியன் ரூபா நிதியை மீள அறவிடுவதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கவில்லை.

எரிபொருள் விலையேற்றத்தால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஜனாதிபதி குறிப்பிடும் நிவாரணங்கள் வெறும் பேச்சளவில் மாத்திரமே வரையறுக்கப்பட்டுள்ளது. செயலில் ஏதுமில்லை.

அரசாங்கத்தை அசைக்க முடியுமா, முடியாதா என்பதை அறிய ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை நடத்துங்கள் அரசாங்கத்தை அசைத்துக் காட்;டுகிறோம் என ஜனாதிபதிக்கு சவால் விடுக்கிறேன். இனிவரும் காலங்களில் எந்த அரசியல் கட்சியையும் ஆட்சிக்கு வர இடமளிக்க கூடாது என்ற மனநிலையில் இருந்துக்கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது. கடந்த அரசாங்கங்கள் அவ்வாறு செயற்பட்டிருந்தால் மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் ஆட்சிக்கு வந்திருக்காது.

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம். தோல்வியடைவது என்பதற்காக தேர்தலை நடத்தாமல் இருக்க கூடாது. நல்லாட்சி அரசாங்கம் 2017ஆம் ஆண்டு தோல்வியை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமல் மாகாணசபைத் தேர்தல் முறைமையை நெருக்கடிக்குள்ளாக்கியது. இதன் தாக்கமே இன்றுவரை தொடர்கிறது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button