இலங்கை

மீகொடவில் நள்ளிரவில் பயங்கரம் அன்னதான வரிசைக்குள் புகுந்து 6 பேரை பலியெடுத்த கெப் வாகனம்; சிறிய குழந்தை உட்பட 7 பேர் படுகாயம் 

மீகொட பகுதியில் தன்சல் (அன்னதானம்) வரிசையில் நின்றவர்கள் மீது கெப் வாகனமொன்று மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறிய குழந்தை உட்பட மேலும் 7 பேர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெசாக் பண்டிகையையொட்டி கொழும்பு அவிசாவளை ஹைலெவல் வீதியில் மீகொட பிரதேசத்தில் வீதியோரத்தில் பிரதேசவாசிகளால் ரொட்டி தன்சல் வழங்கிய நிலையில், நள்ளிரவு வெசாக் தோரணங்களை பார்வையிட சென்ற பலர் அங்கு வரிசையில் நின்றுக்கொண்டிருந்துள்ளனர்.

இவ்வேளையில் அவிசாவளை பக்கமிருந்து கொழும்பு பக்கமாக அதிவேகமாக பயணித்த கெப் ரக வாகனமொன்று அங்கு வரிசையில் நின்றிருந்தவர்களை மோதித்தள்ளியுள்ளது. இதன்போது அந்த வரிசையில் நின்றிருந்த சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேர் படுகாயமடைந்துள்ளதுடன். அவர்கள் உடனடியாக பிரதேசவாசிகளால் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15, 32 மற்றும் 56 வயதுடைய மூன்று பெண்களும், 35 மற்றும் 38 வயதுடைய மூன்று ஆண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களில் பாதுக்கை பிரதேசத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில் சகோததர்களும், பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த தம்பதியொன்றும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு உறவினர்கள் அடங்குவதாகத் தெரியவந்துள்ளது.உயிரிழந்தவர்களில் பி.பி.இந்திராணி (56 வயது) – பிலியந்தலை, வேவல, பள்ளி வீதியைச் சேர்ந்தவர்.நவிஷா நிலக்ஷி (35 வயது) – இந்திராணியின் மகள்,லசிக பிரியங்கர நாணயக்கார (38 வயது) – இந்திராணியின் மருமகன் (மகளின் கணவர்),15 வயது சிறுமி – உயிரிழந்த இந்திராணியின் சகோதரரின் மகள் (உறவினர் முறை தங்கை).

அவிசாவளைப் பகுதியில் வசித்து வந்த நவிஷா மற்றும் அவரது கணவர் லசிக ஆகியோர், கடந்த சனிக்கிழமை பிலியந்தலையில் உள்ள தங்களது பெற்றோரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் அவர்களை மீண்டும் அவிசாவளையில் உள்ள வீட்டிற்கு முச்சக்கரவண்டியில் கொண்டு போய் விடுவதற்காக இந்திராணியும் அவரது கணவரும் புறப்பட்டுள்ளனர்.

அவிசாவளை நோக்கிச் செல்லும் வழியில் வீதியோரத்தில் இருந்த ‘ரொட்டித் தானசாலை’ ஒன்றில் ரொட்டி வாங்குவதற்காக அவர்கள் முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு வரிசையில் நின்றுள்ளனர்.

இந்த விபத்து நடந்த நேரத்தில் முச்சக்கரவண்டியை ஓட்டி வந்த இந்திராணியின் கணவர் (நவிஷாவின் தந்தை) மற்றும் நவிஷாவின் மூத்த பிள்ளை ஆகிய இருவரும் முச்சக்கரவண்டிக்குள்ளேயே அமர்ந்திருந்ததால் அவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

எனினும், உயிரிழந்த நவிஷா, அவரது கணவர் லசிக, தாய் இந்திராணி மற்றும் உறவினர் முறை தங்கை ஆகியோருடன் வரிசையில் நின்றுகொண்டிருந்த போதே இந்த கொடூர விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இதேவேளை விபத்தை ஏற்படுத்திய அந்த கெப் வாகனம் நிறுத்தாமல் தொடர்ந்தும் பயணித்துள்ள நிலையில், கொடகம சந்தியில் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அதன் சாரதியை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சாரதி பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் எனவும், இதன்போது இவர் மதுபோதையில் இருந்தார் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சாரதி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சாரதியை இம் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button