இலங்கை

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை: தமிழ்த் தேசியத்தை அழிக்க முயன்றனர்

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய அரசியலை அழிக்க வேண்டும் என்கின்ற ஒரு போக்கில் செயற்பட்டுள்ளார்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் குற்றவாளிகள் பாதுகாக்கப்பட்டதன் விளைவுதான், தொடர்ந்தும் படுகொலைகள் நடைபெற்றதற்குரிய காரணமாக இருந்தது. ஆகவே, குற்றவாளிகளைத் தண்டிப்பதன் மூலமாக, இந்த அரசாங்கம் தாங்கள் சரியான பாதையில், சரியான நீதியில் செல்லுகின்றோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

படுகொலை செய்யப்பட்ட நாட்டுப்பற்றாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் 22ஆம் ஆண்டு நினைவு தினம்  மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டு. ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.

மட்டு. ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் திருவுருவப் படத்துக்கு சிரேஸ்ட ஊடகவியலாளர் கங்காதரன் மற்றும் ஊடகவியலாளரும் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருமான சிவம் பாக்கியநாதன் ஆகியோர் இணைந்து மலர்மாலை அணிவித்தனர்.

அத்தோடு நிகழ்வில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக ஏற்பாட்டாளர்கள் என பலரும் திருவுருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தியதோடு, ஈகைச் சுடர்களையும் ஏற்றி அவணக்கம் செலுத்தினார்கள்.

அதனை தொடர்ந்து தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மறுக்கப்பட்ட நீதி தொடர்பில் அஞ்சலி உரைகளும் இதன்போது இடம்பெற்றன.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

துணிச்சலாகத் தன்னுடைய பத்திரிகைச் செயல்பாட்டை முன்கொண்டு சென்ற ஒருவர்,

அந்தக்காலத்தில் அவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். கடைசியாக எழுதின கட்டுரையாக இருக்க வேண்டும். நான் நினைக்கிறேன், சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பையா அவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதன் பின்னர், “இந்த அநியாயங்களை, இந்த கொடூரங்களை மக்கள் வீதியில் வந்து கேட்க மாட்டார்களா?” என்ற அடிப்படையில், மக்களில், மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக அந்தக் கட்டுரையை எழுதியிருக்க வேண்டும். ஆனால், அந்த கட்டுரை எழுதப்பட்டதன் பின்னர், மிக வேகமாக அவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

அவர் அலுவலகத்துக்கு, அதாவது மாமாங்கம் அந்தப் பிரதேசத்தில் அவருடைய அலுவலகம் காணப்பட்டது, அந்த அலுவலகத்திற்குச் செல்லுகின்ற போது அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார். அவர் அப்படி எதிர்பார்த்திருக்க மாட்டார், இவ்வளவு கெதியாக இந்த வேலையைச் செய்வார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், மக்கள் இதனைத் தட்டிக் கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர், தன்னுடைய கருத்துக்களைத் துணிச்சலாக வெளியிட்டுக் கொண்டிருந்தவர். அவருக்குக் கிடைத்த பரிசு என்னவென்றால், அவரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இன்று அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டு, 2004-ஆம் ஆண்டு என்று பார்க்கின்ற போது, நாங்கள் 22 ஆண்டுகளைக் கடந்து நாங்கள் இங்கு நிற்கின்றோம்.

ஆகவே, அவருக்குரிய நீதி கிடைக்கவில்லை. அவர் அழிக்கப்பட்டு, அவர்களுடைய எண்ணத்தை நிறைவேற்றியிருக்கிறது. அதாவது, இந்த ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய அந்தச் சிந்தனையை, தமிழ்த் தேசிய அரசியலை அழிக்க வேண்டும் என்கின்ற ஒரு போக்கில் அவர்கள் செயற்பட்டிருந்தார்கள்.

அதற்காக ஏவலாளிகள் பலரை இங்கு நியமித்திருந்தார்கள். அந்த ஏவலாளிகள் விரல் நீட்டுகின்ற பக்கமெல்லாம் அவர்கள் வேட்டுக்களைத் தீர்த்துக் கொண்டிருந்த ஒரு காலம் என்று சொல்லலாம். அந்த அடிப்படையில் தான் யோசப் பரராசசிங்கம் ஐயா அவர்கள் கொல்லப்பட்டது, நடேசன் அவர்கள் கொல்லப்பட்டது, தம்பையா விரிவுரையாளர் அவர்கள் கொல்லப்பட்டது, இதேபோன்று சந்திரநேரு அவர்கள் கொல்லப்பட்டது, ரவீந்திரநாத் அவர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்டது.

இவ்வாறு, இந்த படுகொலைகளை மிகவும் வெற்றிகரமான முறையில் அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள் என்று சொன்னால், அவர்களை இயக்குகின்றவர்கள் பின்னணியில் புலனாய்வுப் பிரிவினர் இருந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் எங்களுக்கு, இந்த உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடந்த போது எங்களுக்கு, என்ன நடந்திருக்கும் என்று நாங்கள் சிந்தித்த போது, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தகவல்கள் வந்து கொண்டிருந்தன.

ஆகவே இப்போது அந்தத் தகவல்கள் என்பது ஆசாத் மௌலானா அவர்களால் மிகவும் துல்லியமாக எடுத்துக்கூறப்பட்டிருக்கின்றது. அதாவது, புலனாய்வுத் துறையின் முக்கிய ஒரு தளபதியாக இருந்த ஒருவர் தான், இதனை முக்கியமான சூத்திரதாரியாக இருந்து செய்திருக்கின்றார் என்றால், அதற்குப் பின்னால் நின்றவர்கள் முன்னாள் ராஜபக்சர்கள் நின்றிருக்கிறார்கள், இவ்வாறெல்லாம் நின்று இந்த படுகொலைகளைச் செய்து முடித்திருக்கின்றார்கள்.

ஆகவே, இன்னும் அவர்களுக்கான நீதி கிடைக்கவில்லை. நீதிக்கான குரல், “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆனால், இதுவரை நீதி கிடைக்கவில்லை. ஆனால், இந்த அரசாங்க மாற்றத்தின் பின்னர் ஏதாவது நடக்குமா என்று எதிர்பார்த்தார்கள்.

சில குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், இன்னும் பல குற்றவாளிகள் நடமாடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களைக் கைது செய்யக்கூடிய சூழ்நிலை இனிவருங்காலத்தில் ஏற்படுமா என்ற கேள்வி எழுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது சர்வதேச ரீதியாக கிறிஸ்தவ மக்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட ஒரு அநீதி.

பாப்பரசரிலிருந்து சர்வதேச அமைப்புகள் வரை கேட்டதன் அடிப்படையில், அது மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்த இன அழிப்போடு சம்பந்தப்பட்ட விடயங்கள், எங்களுடைய ஊடகவியலாளர்கள், நான் நினைக்கிறேன் 43-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

அதிலும் 27-க்கும் மேற்பட்டவர்கள் என்று நினைக்கின்றேன், ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். எங்களுக்கு, கடத்தப்பட்டவர்களும் இல்லை, காணாமல் ஆக்கப்பட்டவர்களும் இல்லை, கொல்லப்பட்டவர்களுக்குரிய நீதியும் இல்லாத நிலையில், நாங்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

இதுதான் எமது நாட்டு மக்கள், இந்த அரசாங்கத்தில் மத்திய அரசின் ஒற்றையாட்சி, பௌத்த மேலாதிக்கப் பொறிமுறையிலிருந்து வாழ முடியாது, எங்களுக்குச் சமநீதி கிடைக்க முடியாது என்ற காரணத்திற்காகத்தான், அவர்கள், “எங்களைத் தனியாக விட்டு விடுங்கள்” என்று சிந்திக்கக்கூடிய ஒரு நிலைமை வந்தது என்னவென்றால், அந்தக்காலத்தில் அவர்கள் சமநீதி, சமத்துவமான ஒரு உரிமையை வழங்க முடியாது இருந்த விடயத்தைச் செய்தார்கள்.

ஆகவே, இன்று நாங்கள் கேட்பது, நடேசன் அவர்களது இந்த 22-ஆவது நினைவேந்துகின்ற இந்த நிகழ்வில், அவருக்குரிய நீதி கிடைக்கவில்லை, அவரைச் சுட்டவர்கள் யார் என்பதை மக்கள் கேட்டால் சொல்லுவார்கள், அந்த அளவுக்கு அதனை நேரடியாகப் பார்த்தவர்களும் இருக்கின்றார்கள். ஆனால், அவர்களுக்குரிய நீதி கிடைக்கவில்லை. ஆகவே, இவ்வாறு கொலை செய்த கொலையாளிகள் தண்டிக்கப்படுகின்ற போது, ஓரளவுக்கு அந்த இழப்பில் வருந்திக் கொண்டிருக்கின்ற அவருடைய உறவுகள், தமிழ் உறவுகள், எல்லோரும் ஓரளவுக்காவது நிம்மதி அடையக்கூடிய மாதிரி இருக்கும்.

ஆகவே, அதனை இந்த அரசாங்கம் செய்ய வேண்டும். கொலையாளிகள், குற்றவாளிகள் தப்பித்து வாழ்வது என்பது, மிக மோசமான ஒரு அரசியலை எடுத்துக் காட்டும். கடந்த காலத்தில் குற்றவாளிகள் பாதுகாக்கப்பட்டதன் விளைவுதான், தொடர்ந்தும் படுகொலைகள் நடைபெற்றதற்குரிய காரணமாக இருந்தது. ஆகவே, குற்றவாளிகளைத் தண்டிப்பதன் மூலமாக, இந்த அரசாங்கம் தாங்கள் சரியான பாதையில், சரியான நீதியில் செல்லுகின்றோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அவ்வாறு இல்லாத போதுதான், இந்த உள்நாட்டுப் பொறிமுறையெல்லாம் பொய்ப்பித்துப்போகின்ற போதுதான், நாங்கள் சர்வதேசப் பொறிமுறையைக் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். அதற்கும் உரிய காரணம், இந்த அரசாங்கங்கள் எடுக்காத நடவடிக்கை என்பதைக் கூறிக்கொள்வதோடு, அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும், அவரது குடும்பத்தினர் மனசாந்தியடைய வேண்டும், எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button