இலங்கை

மாகாண சபைத் தேர்தலுக்கு அரசிடம் பணம் இருக்கிறது வாக்குகள் இல்லை

அரசு நிதியியல் நெருக்கடிகளைக் காரணம் காட்டி, மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து தாமதப்படுத்தி வருகின்றது. அரசிடம் பணம் இல்லை என்பது பொய். உண்மையில் அவர்களிடம் வாக்குகள் இல்லை. தேர்தல் தோல்விக்கு அஞ்சியே தேர்தலை நடத்தாமல் தவிர்க்கின்றது என தயாசிறி ஜயசேகர கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தவுடன், தற்போதுள்ள மாகாண சபை கட்டமைப்புக்குப் பதிலாகப் புதியதொரு முறையை அறிமுகப்படுத்துவதாக ஆரம்பத்தில் உறுதியளித்திருந்தது.

எனினும், அது குறித்துப் பேசி ஒன்றரை வருடங்களுக்கும் மேல் கடந்துள்ள நிலையிலும், இதுவரை எந்தவொரு தெளிவான பொறிமுறையையும் அரசு அறிமுகப்படுத்தவில்லை.

இந்தநிலையில், தேர்தலை நடத்துவதற்கு நிதி பற்றாக்குறை நிலவுவதாக அண்மையில் அரசியல் கட்சியின் பொதுச் செயலாளரான டில்வின் சில்வா குறிப்பிட்டிருந்தார்.

தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பான இவ்வாறான அறிவிப்புகளை வெளியிடுவதற்கு ஒரு அரசியல் கட்சியின் பொதுச்செயலாளருக்கு என்ன அதிகாரம் உள்ளது?

அரசின் மீதான மக்கள் நம்பிக்கை

மக்களாட்சியைப் பாதுகாப்பதும், தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்படுவதை உறுதி செய்வதுமே அரசியல் தலைவர்களின் பொறுப்பாக இருக்க வேண்டுமே தவிர, சாக்குப்போக்குக் கூறி தேர்தல்களைத் தாமதப்படுத்துவது அல்ல.

அரசின் மீது இன்னும் மக்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது என அவர்கள் உண்மையாகவே கருதினால், தமக்கான மக்கள் ஆதரவைச் சோதித்துப் பார்க்கத் தேர்தலுக்கு முன்வர வேண்டும்.

நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது என்றும், தங்களின் ஆட்சிக்கு மக்கள் மத்தியில் பலத்த அங்கீகாரம் உள்ளது என்றும் அரசு உண்மையாகவே நம்பினால், சட்ட அல்லது கட்டமைப்பு திருத்தங்களைச் சாக்குப்போக்காகக் கூறாமல், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்வர வேண்டும் என நான் சவால் விடுக்கின்றேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button