பஷிலுக்கு மீண்டும் ஒரு கைதுக்கான உத்தரவு

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேக நபராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரையும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையே மேலும் சில சந்தேக நபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பான வழக்கின் சந்தேக நபர்களின் பெயர்கள் வெள்ளிக்கிழமை குறிப்பிடப்பட்ட போதே நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் நிதியைப் பயன்படுத்தி, சுற்றுலாப் பிரச்சார நடவடிக்கை எனக்கூறி 12,000 டிசேர்ட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதுடன், அந்த டி-ஷர்ட்டின் ஒரு பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படமும், மறுபக்கத்தில் அரசியல் கட்சியொன்றின் பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. அத்தடன் குறித்த டிசேர்ட்டுகள் மொனராகலை மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றிற்காக விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோர் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக அவர்களின் வசிப்பிடங்களுக்குச் சென்ற போதிலும், அவர்கள் அங்கு இருக்கவில்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதேவேளை சந்தேகநபர்களுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையை விதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த நீதவான், அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து, அதனை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டார்.
அத்துடன் சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, மாத்தறை எலியகந்த வீதி, பிரவுன்ஸ்ஹில் முகவரியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணியை கொள்வனவு செய்தமை தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுற்கு எதிராக பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளில் தொடர்ச்சியாக ஆஜராகாமல் இருந்து வரும் பஸில் ராஜபக்ஷவை கைது செய்வதற்காக கடந்த 22ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
![]()