முச்சந்தி

முதலீட்டாளர்களைப் பாதுகாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்; ஜனாதிபதி கூறுகிறார் 

பிராந்தியங்களில் ஏற்படும் நெருக்கடிகள் காரணமாக டொலர் இருப்புத் தொடர்பான பிரச்சினைகள் எழுந்து வருவதாகவும், இதனை எதிர்கொள்வதற்கு முறையான திட்டமொன்று அவசியம் எனவும், அதற்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்டத்தின் இரண்டாம் பகுதியாக, ரம்புக்கனை முதல் கலகெதர வரையான பகுதியின் கட்டுமானப் பணிகள் வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்ட போது அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். .

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி கூறியுள்ளதாவது,

டொலர் பிரச்சினை ஏற்படுவதற்கான அபாயங்கள் உள்ளன. அதற்கு எமக்கு ஒரு திட்டம் தேவை. நாம் பல திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். முதலாவதாக, நாம் நேரடி வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வர வேண்டும். அதற்குப் பெரிய தடைகள் உள்ளன. அதில் ஒன்று, நமது அரச நிர்வாக அமைப்பிலேயே காணப்படும் பலவீனங்கள் இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. சில திட்டங்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை நாம் அறிவோம். சில சமயங்களில் காணி விடுவிப்பு பொறிமுறையிலேயே நமக்குத் தடைகள் ஏற்படுகின்றன.

எனவே, நமக்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகள் தேவை என்பதை அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். அதற்கான தடைகளை நீக்குவதற்கு நாம் கவனம் செலுத்தியுள்ளோம். அதேபோல், முதலீட்டாளர்களுக்காக முதலீட்டு பாதுகாப்புச் சட்டம் ஒன்றை பாராளுமன்றத்தில் மிக விரைவில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம். மேலும், முதலீட்டாளர்கள் தங்களது அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்து கொள்வதற்காக முறைமையொன்றை உருவாக்க எதிர்பார்க்கிறோம். வேறு ஒரு பிராந்தியத்தில் நெருக்கடி ஏற்பட்டாலும், அதனை உடனடியாக எதிர்கொள்ளக்கூடிய அளவிலான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கே நமக்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகள் தேவையாக இருக்கின்றன.

இரண்டாவதாக, நமது ஏற்றுமதிகளை ஊக்குவிக்க வேண்டும். நமது ஏற்றுமதியில் 25 வீதம் அமெரிக்காவைச் சார்ந்தே உள்ளது. நமக்கு ஏற்றுமதிகளை மேலும் பல நாடுகளுக்கு பல்வகைப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அத்தோடு, பொருட்களின் உற்பத்தியிலும் பல்வகைப்படுத்தலுக்கு செல்ல வேண்டும். எனவே, ஏற்றுமதி பங்கை அதிகரிப்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button