செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணனின் “கனகர் கிராமம்”; அரசியல் – சமூக – வரலாற்று நாவல்

செங்கதிரோன் தனது அகவை எழுபத்தைந்தைப் பூர்த்தி செய்த 13.12.2025 அன்று வெளியான அவரது ‘கனகர் கிராமம்’ அரசியல் – சமூக – வரலாற்று நாவலின் சம்பிரதாயபூர்வமான வெளியீட்டு நிகழ்வு 28.03.2026 அன்று ஏஎஸ்கே ‘திருவதிகை கலைக்கூடம்’ திருக்கோவில், அம்பாரை ஏற்பாட்டில் திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்திலும் அதன் பின்னர் அதன் அறிமுகநிகழ்வு 26.04.2026 அன்று கதிரவன் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நாவற்குடா இந்துகலாச்சார நிலையத்திலும் நடைபெற்றமை அனைவரும் அறிந்ததே.
இந்நாவல் கிழக்கிலங்கைத் தமிழ்ச்சமூகத்தின் சமூக – பொருளாதார – அரசியல் வாழ்வியலையும் வரலாற்றையும் பொதுவாகவும் அம்பாறை மாவட்டத்தமிழர்கள் பற்றியதாகக் குறிப்பாகவும் புனைவுகளில்லாமல் – கற்பனைகளில்லாமல் உண்மைச் சம்பவங்களை உண்மைப் பாத்திரங்களினூடாக யதார்த்தப் பண்புகளுடனும் அழகியலுடனும் அம்மணமாகப் பேசுகிறது.
இந்நாவலில் சேனைப்பயிர்ச்செய்கை – சங்கமன்கண்டி , உகந்தை மற்றும் கதிர்காமம் ஆலயங்களின் வரலாறு – திருக்கோயில் ‘விஷக்கல் – கதிர்காம நடையாத்திரை – ‘யால’ சரணாலயம் – ‘சித்தர்கள்’ மற்றும் ‘அவுலியாக்கள்’ – கல்முனைக் கடற்கரைப்பள்ளிவாசல் – சித்தானைக்குட்டி சுவாமிகளின் வரலாறு, அவர் நிகழ்த்திய அற்புதங்கள் – நாடு தழுவிய 1977 ஆம் ஆண்டின் இனக்கலவரம் – 1978 சூறாவளி – தமிழ் முஸ்லீம் உறவு – தமிழர் தரப்பு அரசியலின் பலம், பலவீனங்கள் – தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்ட ஆரம்பகாலம் – பொத்துவில் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர்.ம.கனகரட்ணம் அவர்களின் வரலாறு, அரசியல் மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகள், அவர் உருவாக்கிய ‘கனகர்கிராமம்’ எனும் குடியேற்றம் அதன் இன்றையநிலை என்பவை எல்லாம் அரிய பல தகவல்களுடன் பதிவாகியிருக்கின்றன.

‘கனகர் கிராமம்’ நாவலின் ஒரு பக்க கதைச் சுருக்கம்
கதைக் களம்
இந்நாவல் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டது. 1970 களின் பிற்பகுதியிலிருந்து நிலவிய சமூக, அரசியல் மற்றும் வரலாற்றுச் சூழலை இது விவரிக்கிறது.
கதைச் சுருக்கம்
நாவலின் மையக் கதாபாத்திரமான கோகுலன், நீர்ப்பாசனத் திணைக்களத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தராகப் பணியாற்றுகிறார். அவர் தனது கடமைக்கு அப்பாற்பட்டு சமூக அக்கறையுடன் தூர்ந்த குளங்களைப் புனரமைத்தல் மற்றும் விவசாயத்தை மேம்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடுகிறார். அவருக்கு அப்போதைய பொத்துவில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கனகரட்ணம் (எம்.சி.ஐயா) பெரும் உறுதுணையாக இருக்கிறார்.
1977ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் அகதிகளாகப் பொத்துவில் பகுதிக்கு வருகிறார்கள். அவர்களைப் பாதுகாத்து, முறையான குடியிருப்பை உருவாக்க கோகுலன் திட்டமிடுகிறார். எம். கனகரட்ணத்தின் முயற்சியால், விளிம்புநிலை மக்களுக்காக ‘கனகர் கிராமம்’ என்ற நவீன குடியிருப்பு உருவாக்கப்படுகிறது.
அரசியல் திருப்பங்கள்
அரசியல் ரீதியாக, தமிழர் விடுதலைக் கூட்டணியில் வெற்றி பெற்ற கனகரட்ணம், தனது பிரதேச அபிவிருத்திக்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசுடன் இணைந்ததால் ‘துரோகி’ என்று முத்திரை குத்தப்படுகிறார். அவர் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சித் தாக்குதல் மற்றும் அவரது மரணத்திற்குப் பின் கிழக்கு மாகாணத்தின் அரசியல் திசை மாறுகிறது. சுயலாபத்திற்காக அரசியல் செய்யும் “குள்ளநரிகள்” முன்னிலைக்கு வர, கோகுலன் போன்ற மக்கள் பணியாளர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள்.
முடிவு
யுத்தச் சூழல் மற்றும் அரசியல் சூழ்ச்சிகளால் ‘கனகர் கிராமம்’ சிதைந்து, மக்களின் கனவுகள் பறிபோகின்றன. கோகுலன் அந்த மாவட்டத்தை விட்டே துரத்தப்படும் அவலத்துடன் கதை முடிகிறது.
சிறப்பம்சங்கள்
பாம்புக்கற்கள் பற்றிய மரபு மற்றும் தமிழ் – முஸ்லிம் உறவுகளைப் பேசுகிறது.
1978-ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தைத் தாக்கிய பாரிய சூறாவளி ஏற்படுத்திய பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளது.
கதிர்காம யாத்திரை மற்றும் அடர்ந்த காடுகளின் இயற்கை அழகினை விவரிக்கிறது.
ஒட்டுமொத்தமாக, ஒரு கிராமத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் கிழக்கு மாகாணத்தின் அரசியல் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து இந்த நாவல் கூறுகிறது.
இந்நாவலில் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் கோகுலனாகக் கிழக்கில் மூடப்பட்டுக்கிடந்த ஒரு பெட்டகத்தைத் திறந்து காட்டியுள்ளார். ‘கனகர் கிராமம்’ கிழக்குக் கரைவாழ்வியலின் நீள்வெட்டுமுகம். கிழக்கில் பொதுவாகவும், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் குறிப்பாகவும் சிறப்பாகவும் சமூக ஆர்வலர்கள் வாசிக்க வேண்டியதும் வீட்டு நூலகங்களில் இடம் ஒதுக்கப்பட வேண்டியதுமான ஒரு வரலாற்று ஆவணம் – புலமைசார் பொக்கிஷம் ‘கனகர்கிராமம்’.
653 + XV பக்கங்களைக் கொண்ட இந்நாவலின் விலை ரூபா. 3000.00 ஆகும்.
இந்நூலைப்பெற விரும்பும் ஆர்வலர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் ஏதாவதொன்றுடன் தொடர்பு கொள்க.
கதிரவன் த. இன்பராசா – 0752508041
ஈழகவி சு. கார்த்திகேசு – 0760103607
க. திலகேஸ்வரம் – 0760994161
செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் – 0771900614
![]()