வாழ்க்கைச் செலவு கடுமையாக அதிகரிப்பு; அடுத்த 6 மாதங்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

பணவீக்கம்,ரூபா மதிப்பிழப்பு மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் ஆகியவற்றின் தாக்கத்திலிருந்து குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களை அடுத்த ஆறு மாதங்களுக்குப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்னவென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யுமான இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நிலையியல் கட்டளை 27/2 இல் விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,
2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல், இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக சுமார் 6 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், கடந்த 18 ஆம் திகதி அது 327.60 ரூபாவை எட்டியுள்ளது. இது 2022 ஆம் ஆண்டு நெருக்கடிக்குப் பின்னரான மிக பலவீனமான நிலைகளில் ஒன்றாகும்.
அண்மைய ‘ரோலிங்-வின்டோ’ மாறும் தன்மையுடைய அளவீடுகளின்படி, தெற்காசியாவில் மிகவும் நிலையற்ற நாணயங்களில் ஒன்றாக இலங்கை ரூபா உள்ளது . இந்த நாணய மதிப்பிழப்பு பொதுவாக வாழ்க்கைச் செலவின் கடுமையான அதிகரிப்புடன் ஒத்துப்போகின்றது. தற்போது, ஏப்ரல் மாதத்திற்கான முதன்மைப் பணவீக்கம் 5.4 சதவீதமாக காணப்படுவதுடன், அமெரிக்க, இஸ்ரேல் – ஈரான் மோதலுக்கு மத்தியில் எரிபொருள் விலைகள் சுமார் 35 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளன. அத்துடன் வீட்டு மின்சாரக் கட்டணங்களும் சடுதியாக உயர்வடைந்துள்ளன.
பணவீக்கம், ரூபா மதிப்பிழப்பு மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் ஆகியவற்றின் தாக்கத்திலிருந்து குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களை அடுத்த ஆறு மாதங்களுக்குப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கும் ?
‘அஸ்வெசும’ நலன்புரித் திட்ட விரிவாக்கம், அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கான போக்குவரத்து மானியங்கள் அல்லது அத்தியாவசியப் பொருட்கள் மீதான தற்காலிக வற் வரி நிவாரணம் ஆகியவற்றின் ஊடாக மேலதிக இலக்கு வைக்கப்பட்ட நிவாரணங்கள் வழங்கப்படுமா? மற்றும் இதற்கான மதிப்பிடப்பட்ட நிதிச் செலவு எவ்வளவு?
ரூபா மதிப்பின் நிலையற்ற தன்மையைக் கையாள்வது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? நேரடி வெளிநாட்டு முதலீடு அரசாங்கத்திற்கு ஒரு தடையாக இருக்கும் நிலையில், நாணய மதிப்பின் தொடர்ச்சியான நிலையற்ற தன்மைக்கு மத்தியிலும் , 2026 இல் எதிர்பார்க்கப்படும் முதலீட்டு உள் வரவுகளை அடைவதற்கும் மேலும் பல நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் எடுக்கப்படும் உறுதியான நடவடிக்கைகள் என்ன ?
சர்வதேச நாணய நிதியத்தின் செயற் திட்டத்தில் எஞ்சியுள்ள காலப்பகுதிக்காக, வாழ்க்கைச் செலவுத் தாக்க மதிப்பீட்டு அறிக்கை ஒன்றை நிதியமைச்சர் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பாரா,?
பூகோள பொது காரணிகள் மற்றும் அரசாங்கத்தின் நிர்வாக குளறுபடிகள் ஆகிய காரணிகளால் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. நடுத்தர மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். சமூக கட்டமைப்பில் ஏழ்மை நிலைமை சடுதியாக உயர்வடைந்துள்ளது. இவ்வாறான பின்னணில் அவதானத்துக்குட்பட்டுள்ள தரப்பினர் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும். நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படுவதை தடுக்க வேண்டும்.அதற்காக தற்போதைய இக்கட்டான நிலையில் ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்றார்.
![]()