அரசாங்கம் நிலைமையைச் சமாளிக்கும் 2022 நெருக்கடி நிலை மீண்டும் ஏற்படாது!

2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி நாட்டில் மீண்டும் ஏற்படும் என சிலர் கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும், அத்தகையதொரு சூழ்நிலை நாட்டில் எவ்வகையிலும் ஏற்படாது என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை ஒரு வெளிப்புற நெருக்கடியாக இருந்தபோதிலும், அதனை முகாமைத்துவம் செய்யும் சக்தி அரசாங்கத்திற்கு இருக்கின்றது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நிந்தவூர் கலாசார நிலையத்தின் நீர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இதனைக் கூறியுள்ளார்.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது,
மக்கள் சிரமத்திற்குள்ளான சந்தர்ப்பத்தில் மக்களைக் கவனித்துக்கொள்ளும் ஒரு அரசாங்கமாகவே நாங்கள் இருக்கின்றோம். டித்வா சூறாவளியின் போதும் மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலையின் போதும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நாங்கள் பெருமளவு நிதியை ஒதுக்கினோம். நாம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தினோம். எனினும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் யுத்த சூழ்நிலை தீவிரமடையத் தொடங்கியது. எரிபொருள் இறக்குமதியின் போது டொலரின் மதிப்பு உயர்ந்தது. அனைத்து இறக்குமதி பொருட்களின் விலைகளும் அதிகரித்தன. இதனால் அதிகளவான டொலர்கள் இன்று வெளியேறுகின்றன. எமக்கு டொலர்கள் கிடைக்கவிருந்த சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டது. சில ஏற்றுமதி வருமானங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ரூபாவுக்கு நிகராக டொலரின் மதிப்பு ஓரளவுக்கு உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் சிலர் கூறுகிறார்கள், இது 2022 போன்றது என்று. எனினும் 2022 போல் இந்த நிலைமை இருக்காது. 2022 இல் எங்களிடம் ரூபாவும் இருக்கவில்லை, மத்திய வங்கியிலும் டொலர் இருக்கவில்லை. இன்று அப்படி அல்ல, மத்திய வங்கியில் கிட்டத்தட்ட 7,000 மில்லியன் டொலர் நிதி உள்ளது. அன்று மத்திய வங்கியில் இருந்தது 50 மில்லியன் டொலர் மட்டுமே. இன்னும் ஓரிரு நாட்களில் எமக்கு மேலும் 700 மில்லியன் டொலர் கிடைக்கவுள்ளது. அப்போது கணிசமான டொலர் இருப்பு எங்களிடம் இருக்கும்.
ஆயினும், நாம் படிப்படியாக நாட்டின் பொருளாதாரத்தைக் கையாள வேண்டும். இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், எரிவாயு, பால் மா, உரம் ஆகியவற்றில் எந்தவொரு தட்டுப்பாடும் ஏற்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். அன்று எரிபொருள் இருக்கவில்லை. பால் மா இருக்கவில்லை, எரிபொருள் இருக்கவில்லை, உரம் இருக்கவில்லை. அத்தகையதொரு சூழ்நிலை மீண்டும் ஏற்படாது. எனினும் எமக்கு சில அழுத்தங்கள் உள்ளன. நாம் அதனை முகாமைத்துவம் செய்ய வேண்டும். நாட்டுக்குள்ளே ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு நாம் முகங்கொடுத்தோம். டித்வா சூறாவளிக்கு முகங்கொடுத்தோம், அது உள்நாட்டுப் பிரச்சினை. ஆனால், இது எமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த சூழ்நிலையாகும். இதற்கும் எம்மால் முகங்கொடுக்க முடியும். இப்போது பலர் இது 2022 போன்றதே என்று ஒரு சித்தாந்தத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். அவ்வாறு நடக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாம் அந்தப் பிரச்சினையைத் தீர்ப்போம் என்றார்.
![]()