முற்றத்து மரச் சிலை… கதை… குமுதினி கலையழகன்


மென்குளிர், சிலிர்ப்புக் கரங்களால் தடித்த போர்வையையும் தாண்டி, அவனைத் தொட்டு எழுப்பிற்று. இலையுதிர் காலமும் குளிர்காலமும் சந்தித்துக் கொள்கின்ற இடைப்பட்ட மாதம். கண்களை விழித்தான் நரேன். சில விநாடிகள் சிந்தனை திகைத்தது.
‘இன்று அப்பாவா, அம்மாவா…’
சட்டென எழுந்து கட்டிலில் உட்கார்ந்தான். வெள்ளைக் கண்ணாடி தாண்டி பசேலென மெல்லச் சரிவோடு ஏறும் மலையடிவாரம் கண்ணில் விழத் தெளிவு பிறந்தது. இன்று அப்பா.
ஒரு பெருமூச்சொன்று அடிவயிற்றில் எழுந்தது. விழித்தெழுந்த கணத்தில் இருந்த புத்துணர்வைப் பறித்து எடுத்துக் கொண்டு காற்றில் மறைந்தது. அவன் பலமிழந்தது போல உணர்ந்தான். மறுபடியும் கட்டிலில் சாய்ந்து போர்வையுள் புகுந்தான்.
‘அம்மா என்ன செய்து கொண்டிருப்பாள்’
நூற்றைம்பது கிலோ மீட்டர்கள் நெடுஞ்சாலை கடந்து அம்மாவின் வீடு இருக்கிறது. ஆறு மாதமாகத்தான் இந்த ஏற்பாடு. சட்டம் கண்களால் பார்த்துக் கைகளால் எழுதிற்று. அது இருதயம் இல்லாது நடந்து கொண்டதாய் அம்மா அழுதது ஞாபகம் வரக் கண்கள் ஈரமாகின.
‘அம்மா அம்மா’ மெல்ல உச்சரித்தான்.
இந்நேரம் அவள் கண் விழித்திருப்பாள். உற்சாகமும் மகிழ்வுமற்று வரண்டிருப்பாள். அவன் அவற்றை எடுத்துக் கொண்டு போய்விடுவதாக அவள் ஏதோ ஒரு நாளின் உரையாடல் மத்தியில் சொன்னது அவனுக்குக் கல்லெழுத்தாக விழுந்து விட்டிருந்தது. குற்றவுணர்வைச் சுமந்து நடக்கின்ற நாட்கள் கனமானவை.
நெடிய உடலைக் குறுக்கிப் போர்வையுள் மறைவது கொஞ்சம் இதம் தந்தது.
‘நரேன்…’
கதவைத் தட்டும் சத்தம் அவனை எழுப்பி நடக்க வைத்தது. பதின்மூன்று முடிந்து பதின்நான்கு தொடங்கும் பையனை மரியாதையுடன் அணுகும் தந்தைமை.
கதவைத் திறந்து ‘குட்மோனிங் அப்பா’ என்றான்.

சட்டென சந்தேகம் எழுந்தது ‘கண் ஈரமாயிருக்குமோ’ முகத்தைத் தேய்ப்பது போலக் கண்களைத் துடைத்துக் கொண்டான். ஆறடியில் நிமிர்ந்து நிற்கின்ற தந்தையை அவன் சின்னக் கண்ணீர் முழுதாக உடைத்துவிடும். அதுவும் தாங்க முடியாத ஒன்றுதான்.
‘நேரமாகி விட்டது; புறப்பட வேண்டும் நரேன்’
‘ஓகே அப்பா. நான் தயாராகின்றேன்’
ஜீவாவின் கண்கள் நரேனை அளந்திருக்க வேண்டும். கைகளை நீட்டி அவனைத் தன் தோளில் அணைத்துக் கொண்டான். இருவர் நெஞ்சிலும் இருந்த ஏதோ ஒரு வெறுமையை இருவரும் உணர்ந்து ஒத்துக் கொள்ளும் தருணம். இது நீண்டு விட அனுமதிக்க முடியாது.
ஜீவா சட்டென விலகிக் கடிகாரத்தைப் பார்த்தான். ‘முப்பது நிமிடத்தில் புறப்பட வேண்டும்’.
நரேன் தலையசைத்து அறைக்குள்ளே சென்றான். குனிந்து துவாலையை எடுத்தபோது சுவரில் நரேன் எழுதப்பழகிய காலத்தில் தன் உயரத்தில் கலர்ப் பென்சிலால் எழுதிய எழுத்துக்கள் கண்ணில் விழுந்தன.
ஜீவா – ஜெனா
சுவரெழுத்துக்களை யாரும் கவனிக்கவில்லைப் போல. நிஜத்தில் காலம் உலகறிய அவர்களின் பிரிதலை அறிவித்து ஆறுமாதங்களாய் விட்டது. ஒரு அழகிய தூக்கணாங் குருவிக் கூட்டுள் இருந்த இதமான வாழ்வு மறைந்து போன ஆறு மாதங்கள்.
நரேன் ஷவரை அளவாகத் திறந்து விட இதமான சூட்டுடன் விழுந்த நீரில் நினைவுகள் மெல்லத் தணிந்தன. குளித்து வெளியே வந்தபோது அம்மா மீள நினைவுள் புகுந்தாள்.
அம்மா இப்போது முன்னறையில் மௌனமாய் இருந்து தேநீர் அருந்துவாள். இவன் இல்லாத நாட்களில் அவள் காலையுணவு தயாரிப்பதில்லை என்பதை அவன் அவதானித்திருந்தான். அவள் மெலிந்து விட்டிருந்தாள் கூட. அம்மா கஷ்டப்படுகிறாள்,பல விஷயங்களில்.
‘அம்மா Love you’
மெல்ல முணுமுணுத்தான். அவள் புன்னகையை அவன் கூடவே எடுத்து வந்து விடவேண்டியிருக்கின்றது.
அவனுக்குப் பாரமான அந்தப் புன்னகைகள்.
அவசரமாய் உடையணிந்து புத்தகப்பையை எடுத்தான்.
‘நரேன் சாப்பாடு ஆயத்தமாகி விட்டது’
ஜீவாவின் குரல் கேட்டு அறையை விட்டு வெளியே வந்தான்.
ஜீவாவுக்கு நிறைய நேரம் பிடித்திருக்கும். நரேனுக்கு விருப்பமான உணவுத் தெரிவுகள். ஆனாலும் அம்மாவின் உணவின் வாசமில்லை.
நரேன் தனக்கும் தந்தைக்குமான தட்டுகளில் உணவைப் பரிமாறினான்.
ஒரு பனிக்காலப் புகையைப் போல அறையுள் நிறைந்திருந்த ஏதோ ஒன்றை விரட்டுவதற்காக இருவரும் எத்தனிப்பதும், இருவரும் கதைப்பதும், இருவருக்கும் புரிந்தது.
அம்மா இங்க இருந்த நாட்களில் சாப்பாட்டறையில் உரையாடல் சரளமாய்ப் புரளத் தொடங்கும். அணையில்லாத சிற்றாறு போல எந்தக் கட்டாயமும் இல்லாமல் அங்குமிங்காய்த் தாவும். மிக இயல்பான உரையாடல்கள். இனிய இசையைக் கேட்கும் வேளை தானாய்க் கைகள் தாளமிடுவது போல எந்த எத்தனிப்பும் இல்லாத உரையாடல்கள். பாதி வயிறை உணவும் பாதி வயிறைப் பேச்சும் சிரிப்பும் நிறைக்க உணவுண்ட வேளைகள்.
‘போதும் அப்பா….’
‘பாதி வயிறுதானே சாப்பிட்டிருக்கிறாய். இன்னும் கொஞ்சம் நரேன்…’
வரண்டு போன தந்தையின் குரலின் ஏமாற்றம் இவனுக்குப் புரிந்தது. மீதி வயிறை நிரப்ப இங்கு எதுவும் இல்லை. ஜீவாவுக்கும் அது தெரியும்.
‘ஓகே மகன். நான் ஒரு ஐந்து நிமிடத்தில் காரை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறேன். நீ வாசலில் காத்திரு’
உணர்வில்லாமல் கதைக்க ஆங்கிலம் உதவி விடுகிறது சமயங்களில்.
தந்தையின் முகத்திலிருந்த ஏமாற்றம் நரேனுக்குப் புதியதல்ல. கடந்த ஆறு மாதங்கள் ஜீவா தன்னாலான வரை எல்லாம் செய்தாலும் பழைய நரேனை அவனுக்குப் பார்க்க முடியவில்லை.
உணர்வுகளின் கலவையாய் நிகழ்காலம் இருந்திருக்கிறது. ஒரு பழுப்பு நிற அமைதி போல தன்னில் தாயில், தகப்பனில் எல்லோராலும் இடையிடை அது கவிழ்த்து செல்கின்றது. எப்போது இது முடிந்து போகும்? முடிந்தே போகாத முடிவிலியாய்க் கூடப் போகுமோ?
வெளியே மெல்லிய சாரல் மழை தொடங்கியிருந்தது. ஜீவா இவனைப் பாடசாலை வாசலில் இறக்கி விடுவான். மழையைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.

அறையின் வெளியே ஜன்னல் கண்ணாடியில் மழைத்துளிகள் விழுந்து கோடமைத்துக் கீழே விழுந்தன. முதல் விழுந்த துளியின் அடையாளத்தைப் பிறகு வந்தது அழித்துச் சென்றது. முதல் நிறைந்த நினைவுகளும் இப்படியே அழிந்து போய் விடுமெனில் எத்துணை நல்லது!
அம்மாவும் இப்போது வீட்டை விட்டுப் புறப்பட்டிருப்பாள். நீண்ட தெருவின் கரையிலிருக்கின்ற ஒற்றையடிப் பாதையில் நடந்து கொண்டிருப்பாள். தோள் பையுடன் மகனின் நினைவுகளுடன், பஸ் நிலையத்துக்குப் போக பத்து நிமிடம் நடக்க வேண்டும் அவளுக்கு. சாப்பிட்டும் இருக்கமாட்டாள்.
நரேன் புத்தகப் பையுடன் வாசலுக்கு வந்தான். வாசலில் நின்ற மரச்சிலை கண்களிற் தடக்கிற்று. அழகிய சிறுமி ஒருத்தி ஒரு பூத்தட்டைத் தாங்கி நிற்பது போன்ற சிலை.
ஜெனாதான் ஆசைப்பட்டு வாங்கி வந்திருந்தாள். மழையோ வெயிலோ தாக்க முடியாதபடி வண்ணக் கலவையால் பாதுகாக்கப்பட்ட சிலை. கற்பீடம் ஒன்றில் நிற்க வைக்கப்பட்டிருந்தது. ஜெனா கற்பீடம் மண்ணுள் மறையுமாறு நிலத்தில் அதை வைப்பித்திருந்தாள். காற்றும் விழுத்த முடியாது அதை.
விவாகரத்து முடிவான பிறகு தாயும் தந்தையும் சொத்துக்களையும் வீட்டுப் பொருட்களையும் பிரித்து எடுக்கச் செலவிட்ட நேரங்கள் பாரம் மிகுந்தவை.
ஜீவா இருந்த வீட்டிலேயே இருக்க ஜெனா வீட்டை விட்டு வெளியேற வேண்டுமெனத் தீர்மானமாயிற்று.
நீதி நடுநிலையில் இருந்து ஒரு ஆத்மாவை இரண்டாய்ப் பிரித்து நடுநிலை பேணலில் புளகாங்கித்து இருந்தது. வழக்கறிஞர் நீதிமன்றத்தின் வெளியே வந்து,
‘Fifty; fifty. I made it ’ என்று சந்தோஷமாய் அறிவித்தபோது தந்தைமையையும் தாய்மையையும் சமனாக வெற்றிபெற வைத்த கர்வம் அதில் இருந்தது. அந்த வெற்றியின் பின்னால் இரு கூறாகிப் போன அவனது உலகம் இன்னும் பரிச்சயமாகவில்லை அவனுக்கு; ஆறு மாதங்களின் பின்னும்.
அம்மா இந்த வீட்டை விட்டு வெளியேறிய கடைசி நாள், தன் கண்ணீரை அவன் பார்க்காமல் மறைக்க முயற்சித்து அவள் நடந்தபோது இவன் பின்னிருந்து கூப்பிட்டான்.
‘அம்மா இந்தச் சிலை நீங்கள் ஆசைப்பட்டு வாங்கினது அம்மா. நீங்கள் எடுங்கள் அம்மா’
ஜெனா ஒரு நிமிடம் நின்றாள். சிலையருகே சென்று அதை மெல்ல வருடினாள்.
‘இல்லை நரேன். இது இங்கேயே இருக்கட்டும் அடித்தளத்தை மண்ணிலிருந்து எடுக்கேக்கை அது உடைஞ்சுபோகும் சில வேளை.’
‘……………….’
பிறகு அவனை நோக்கி நடந்து அவனை இறுகக் கட்டி அணைத்தாள். கைகளில் நடுக்கம் இருந்தது போல நரேன் உணர்ந்தான்.
‘இந்த மகன் மட்டும் தான் எனக்கு வேணும்’ குரல் தளுதளுத்தது. அந்தச் சிவந்த முகத்திலிருந்த வேதனை இவன் கண்களுக்குள் அடிக்கடி ஞாபகமாய் எழுகிறது.
ஒருநாள் கூட இவனைப் பிரிந்திருக்க முடியாதவள்.
‘அம்மா பாவம்’ மெல்லச் சொல்லிக் கொண்டான். அழ முடியாது, விரும்பினாலும்.
ஜீவாவின் கார் வாசலுக்கு வந்து விட்டது.
‘Sorry நரேன். கொஞ்சம் லேற்றாகிட்டுது நான் Ready ஆக’
ஜீவாவுக்குப் பழக்கமில்லாத பல நாளாந்த வேலைகளை அவன் செய்ய வேண்டியிருக்கிறது. சமையற் பொருட்கள் வாங்குவது முதல் சாப்பிட்ட பிறகு கழுவித் துடைப்பது வரை எல்லாமே. அவனுக்குப் பரிச்சயமில்லாதவை; ஆறுமாதத்திற்கு முன்பு வரை.
ஜெனா ஒரு மௌனமான உயிர்மூச்சுப் போல அத்தியாவசியமான எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தாள். அவள் இருந்தவரை.
நரேனுக்கு எதுவும் பதில் செல்ல வேண்டுமெனத் தோன்றவில்லை.
முன்னரெல்லாம் கார்ப் பயணங்கள் களிப்பும் சத்தமும் நிறைந்தவை.
சத்தமும் களிப்பும் இரட்டைப் பிள்ளைகள்.
துயரமும் மௌனமும் கூடத்தான்.
ஜீவா கேட்ட கேள்விகளில் சிலவற்றுக்குத் தலையசைத்துப் பெரும்பாலும் மௌனமாய் இருந்தான் நரேன்.
‘ஏன் மகன் ஏதும் பிரச்சினையா?’
ஜீவா கேட்டபோது அவனின் முகத்தைத் திரும்பிப் பார்த்தான்.
ஜீவாவின் முகம் களைத்திருந்தது. ஏமாற்றமாய்க் காயம்பட்டது போலிருந்தது.
‘எல்லாமே’ என்று சொல்ல விரும்பினாலும் ‘இல்லை’ என்பதாய்த் தலையசைத்தான்.
கார் பாடசாலை வாசலில் நின்றது.
‘ஓகே நரேன். இதில் ஒரு Snack வைச்சிருக்கிறன். Your favorite one. Have a good week son’
‘ஓகே அப்பா’ இவன் சிற்றுண்டிப் பெட்டியைத் தகப்பனிடம் வாங்கியவாறு கையசைத்தான்.
‘I will pick you next week’
‘Bye’
ஜீவாவின் மகிழ்ச்சியற்ற முகத்தை நரேனுக்கு விளங்க முடிந்தது.
சேர்ந்திருப்பது துன்பமெனப் பிரிந்த பின் வரவேண்டிய மகிழ்ச்சியை ஜீவாவின் முகத்திலும் காண முடிந்திருக்கவில்லை.
நரேன் பதில் சொல்லாது தலையை ஆட்டி பாடசாலை வளாகத்துள் நடக்கத் தொடங்கினான்.
‘எனக்கு மட்டும் ஏன் இப்படி’ காரணமில்லாமல் தன்னில் சொல்லொணாக் கோபம் எழுந்தது.
யாருமில்லாத வெளியில் நின்று பலமாக அழவேண்டும் போல இருந்தது.
முதுகில் கையொன்று விழத் திரும்பிப் பார்த்தான். டேவிட். நீலக் கண்களும் பழுப்பு நிற முடியும் கலகலப்பும் நிறைந்த டேவிட். இவன் கைபற்றி உரக்கக் கதைத்ததில் அதிலிருந்து விடுபட முடியாமல் நரேனும் அந்த உலகத்துள் கலந்து போனான்.
சாப்பாட்டு இடைவேளையில் தந்தையின் சிற்றுண்டியைச் சாப்பிடத் தோன்றவில்லை.
அம்மா சாப்பாடு செய்து காத்துக்கொண்டிருப்பாள்.
மிஸ் விக்ரோறியா கடைசிப் பாடநேரத்தின் போது நரேனைக் கேட்டாள்.
‘Are you okay Naren’
‘I am fine’ இவன் முகம் பாராமல் சொன்னான்.
பாடசாலை விடுப்பு அறிவிக்கப்பட முதல் ஆளாய் வகுப்பறை விட்டு வெளியேறினான்.
தாகம் போல இருந்தது. இந்த விநாடியே அம்மாவைப் பார்த்துவிட வேண்டும். வீட்டுக்கு நடந்துதான் போக வேண்டும். ஐநூறு மீற்றர் தூரம்தான் என்றாலும் மிகத் தொலைவு போலப்பட்டது.
பாடசாலை அண்மித்த தெருக்களில் கார்கள் வரிசையாக நின்றன. கண்ணில் விழுந்த எல்லா மாணவர்களும் தாயினதும் தந்தையினதும் கைபற்றி நடந்து கொண்டிருப்பதாகவே பட்டது.
இலையுதிர்கால வெயிலின் சூடு இன்னும் தணியத் தொடங்கவில்லை.
வேகமாய் நடந்து வீட்டை அடைந்தபோது ஜெனா வாயிலில் நின்றிருந்தாள். இவனைக் கண்டதும் தன் உயிரெனத் தழுவிக் கொண்டாள்.
அவள் முகம் முழுக்கப் புன்னகை. உயிர் நுழைந்த வெற்றுடலின் களிப்பு. அவள் சமையலின் வாசம் வாசல் வரை வந்திருந்தது.
அவளின் சின்னக் கேள்விகளுக்கு ஆர்வமாய்ப் பதிலளித்தான். காற்றில் மிதக்கும் பலூன் போல இலேசாக உணர்ந்தான்.
‘Wash எடுத்துட்டு வாங்கோ மகன்’
‘ஓகே அம்மா’
அவனுக்கென ஒதுக்கப்பட்ட சின்ன அறை.
பாடசாலைப் புத்தகங்களை எடுத்து அடுக்கினான். அடியில் ஜீவா கொடுத்திருந்த சிற்றுண்டிப் பெட்டி கண்ணில் விழுந்தது. பெட்டியைத் திறந்தபோது சின்ன Waffles உம் ஒரு சிறிய டப்பியுள் தேனும் வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. வீட்டில் செய்த waffle. இதைச் செய்ய அப்பாவுக்கு நிறைய நேரம் எடுத்திருக்கும்.

களைத்துப் போன ஏமாற்றம் மிகுந்த தந்தையின் காலை நேரத்து முகம் ஞாபகம் வந்தது.
காரில் வரும்போது, தான் பதில் சொல்லாமல் மௌனமாய் இருந்தது அவரைக் காயப்படுத்தி இருக்கும்.
‘பாவம் அப்பா’ மெல்ல முணுமுணுத்தான்.
பாறாங்கல்லை வைத்து அவனை அழுத்தியது போல உணர்ந்தான் நரேன். மெல்லக் கட்டிலில் அமர்ந்து கைகளால் தலையைத் தாங்கிக் கொண்டான்.
‘நரேன்’
‘நரேன்’ ஜெனாவின் மகிழ்வான ஆர்வமான குரல்.
உடைமாற்றி வெளியே வந்தபோது ஜெனா உணவு பரிமாறி இருந்தாள். எல்லாமே அவனுக்குப் பிடித்தவை.
அவனுக்குப் பசி எங்கோ போய்விட்டிருந்தது.
தட்டின் முன்னால் இருந்து சாப்பிடத் தொடங்கினான்.
அம்மாவின் குரல் காதுகளில் விழுந்தது. எந்த அர்த்தங்களுமில்லாமல் அவன் செவிகளில் ஒலித்து மறைந்தது.
அவன் உணவைத் துழாவியபடி இருந்தான்.
‘அப்பா என்ன செய்து கொண்டிருப்பார்’

![]()