இலக்கியச்சோலை

மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் எழுதிய – பத்திரிகைத்துறையில் என்கதை! ….. முருகபூபதி.

மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம்

எழுதிய – பத்திரிகைத்துறையில் என்கதை – நூல்

இன்று 17 ஆம் திகதி கொழும்பில் வெளியாகிறது.

 

( இலங்கையில் நீண்ட காலமாக பத்திரிகைத்துறையில் இயங்கிவரும் பிரபல மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் எழுதியிருக்கும் பத்திரிகைத்துறையில் என் கதை நூலின் வெளியீட்டுவிழா இன்று மே 17 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் வெளியிடப்படுகிறது, அதனை முன்னிட்டு எழுதப்பட்டுள்ள பதிவு ) ————– ——————- முருகபூபதி.

மேர்வின்டீ. சில்வாவின் புதல்வன் கலாநிதி தயான் ஜெயதிலக்காவும் இலங்கையில் மிகவும் பிரபலமானவர். கடந்த அரசாங்கங்களின் காலத்தில் ரஷ்யா, மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராவும் பணியாற்றியவர்.

இவர் ஒரு காலகட்டத்தில் வட-கிழக்கு மாகாண சபையிலும் அமைச்சராக இருந்தார். அதற்கு முன்னர் இவரும் இலங்கையில் சிறிது காலம் தலைமறைவாக வாழ நேரிட்டது.

அவ்வாறான தலைமறைவு வாழ்க்கையின்போது ஒரு பிரபல தமிழரின் கொழும்பு இல்லத்தில்தான் தங்கியிருந்தார்.

அந்தத் தமிழரும் மிகவும் பிரபலமானவர்தான். அவர் தோழர் என். சண்முகதாசன்.

இதுபோன்ற பல செய்திகளை வீரகேசரி – தினக்குரல் மற்றும் சமகாலம் முதலான ஏடுகளில் சிரேஷ்ட ஆசிரியராக பணியாற்றிய வீரகத்தி தனபாலசிங்கம் எழுதியிருக்கும் – பத்திரிகைத்துறையில் என் கதை – என்ற நூலிலிருந்து நாம் தெரிந்துகொள்கின்றோம்.

தனபாலசிங்கம், ஏற்கனவே, நோக்கு ( தினக்குரல் ஆசிரிய தலையங்கங்கள்) ஊருக்கு நல்லது சொல்வேன், தமிழ் தேசியவாத

அரசியல், ஆகிய நூல்களையும் வரவாக்கியிருப்பவர். தோழர் சண்முகதாசனின் கட்டுரைகள், மற்றும் சண்முகதாசன் நூற்றாண்டு மனப்பதிவுகள் ஆகியற்றையும் வெளியிட்டிருக்கிறார்.

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை உக்கிரமடைந்து கலவரங்கள் தொடங்கிய காலப்பகுதியில் பத்திரிகைத்துறையில் பிரவேசித்தவர். வீரகேசரியில் தனது தொழில்சார்ந்த வாழ்க்கையை முதலில் ஒப்புநோக்காளராக ஆரம்பித்தவர். 1977 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தென்னிலங்கையில் இனக்கலவரம் நடந்தது. அப்போது, பிரதமராகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்தனா “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் “ என்று சூளுரைத்தார். இவ்வாறு நாட்டில் மிகுந்த நெருக்கடி தொடங்கியவேளையிவ் தனபாலசிங்கத்தின் கொழும்பு வாழ்க்கை ஆரம்பமாகிறது.

நாமிருவரும் அவ்வேளையில் வீரகேசரியில் ஒப்புநோக்காளர்களாக இணைந்தோம்.

அன்று முதல் இற்றை வரையில் இவருடனான எனது நட்புறவு நீடிக்கிறது.

படிப்படியாக தன்னை இவர் எவ்வாறு வளர்த்துக்கொண்டார் என்பதையும், இந்நூலில் நனவிடை தோய்ந்து பதிவுசெய்திருக்கிறார். இந்நூலை இலங்கையின் மூத்த இடதுசாரித்தோழரும் பத்திரிகையாளருமான (அமரர் பாதிநேசன் வீ. சின்னத்தம்பி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.

பேராசிரியர் எம். ஏ. நுஃமான் முகவுரையும், மூத்த பத்திரிகையாளர் டீ. பி. எஸ். ஜெயராஜ், பேராசிரியர் சந்திரிக்கா சுப்பிரமணியம், தெட்சணா மூர்த்தி மதுசூதனன் ஆகியோர் தங்கள் கருத்துரைகளையும் எழுதியுள்ளனர்.

தனது 21 வயதில் வீரகேசரி பணிமனையில் பிரவேசித்த தனபாலசிங்கத்திற்கு அவ்வேளையில் தலைநகரம் முற்றிலும் புதிது. இவரது தாய்மாமனார் கந்தசாமியின் ( வீரகேசரியின் விளம்பரப்பிரிவு – உதவி முகாமையாளர் ) தூண்டுதலால் ஒப்புநோக்காளர் பணியை ஏற்கிறார்.

1980 இற்குப்பின்னர் ஆசிரியபீடத்திற்குள் இணைக்கப்படுகிறார். வெளிநாட்டுச்செய்திச்சேவைகள் தரும் செய்திகளை மொழிபெயர்த்து வழங்கிக்கொண்டிருந்தவருக்கு அரசாங்க பணியொன்றும் கிடைக்கிறது. அது ஆங்கில ஆசிரியர் தொழில்.

அரச தொழிலில் ஈடுபட்டால், பின்னாளில் இளைப்பாறும்போது ஓய்வூதியம் கிடைக்கும். பெற்றவர்களுக்கு இவர் ஆசிரியர்

தொழிலுக்கு செல்வதே பெரிய விருப்பம். அந்தத் தொழிலையும் ஏற்றுவிட்டு, மீண்டும் வீரகேசரிக்குள் பிரவேசிக்கிறார்.

அதன்பிறகு பாராளுமன்ற செய்தியாளராக மாறுகின்றார். தினக்குரல், வீரகேசரி, சமகாலம் என்று இவரது வாழ்க்கை திசைதிரும்புகிறது.

இத்தனைக்கும் மத்தியில் இவரது நெருங்கிய தோழர் என். சண்முகதாசனின் ஆக்கங்களை மொழிபெயர்த்து ஊடகங்களுக்கும் வழங்குகிறார்.

எவ்வாறு தன்னை வளர்த்துக்கொண்டேன் என்பதை இந்நூலின் ஒவ்வாரு அங்கங்களிலும் சுவைபட சொல்கிறார். அத்தகைய சுயசரிதைப்பாங்கில் அமைந்த இந்நூலில் நாம் அறியாத செய்திகள் பலவுண்டு. அதில் ஒன்றுதான், இப்பத்தியில் முதலில் குறிப்பிட்ட தயான் ஜெயதிலக்கா பற்றிய தகவல்.

தனபாலசிங்கம் தனது கல்லூரிப்படிப்பை நிறைவுசெய்த பின்னர், சீனச்சார்பு அரசியல் நிலைப்பாட்டுடன் இயங்கியவர். உலக அரசியலிலும் ஆர்வம்கொண்டிருந்தார். அதனால், பத்திரிகை ஆசிரியர் பணி இவருக்கு எளிதாக அமைந்தது.

வீரகேசரி ஆசிரிய பீடத்தில் தனக்கு வழிகாட்டிகளாக விளங்கிய மூத்த பத்திரிகையாளர்கள் டேவிட் ராஜூ, நடராஜா, கார்மேகம், பொன் ராஜகோபால் , ஆ. சிவநேசச் செல்வன், சந்திரிக்கா சுப்பிரமணியம் உட்பட பலரையும் நன்றியோடு சொல்லும் தனபாலசிங்கம், பல சந்தர்ப்பங்களில் வீரகேசரி. மித்திரன் ஆகியவற்றில் ஆசிரியத் தலையங்கங்களும் எழுதியிருப்பவர்.

செய்திகளை எழுதும்போது, அதனை எழுதுபவர் தனது அரசியல் சாய்வுகளை அல்லது தனது விருப்புவெறுப்புகளை அவற்றில் பிரதிபலிக்கலாகாது. இதனை தான் பெற்ற பயிற்சிகளின் மூலம் தெரிந்துகொண்டிருக்கும் தனபாலசிங்கம், நடுநிலைமை குறித்து இவரிடம் வித்தியாசமான சிந்தனை இருக்கிறது.

உண்மைக்கும், பொய்மைக்கும் நீதிக்கும் அநீதிக்கும் இடையில் எவ்வாறு நடுநிலைமையுடன் எழுதுவது…? மக்களுக்கு எவ்வாறு உண்மையை கூறவேண்டும்?

அரச தரப்புச் செய்திகளையும், பிரதேச நிருபர்கள் தரும் செய்திகளையும் வெளியிடும்போது, பெறும் அனுபவம் குறித்தெல்லாம் இந்நூல் , பேசுகிறது.

பல முனைகளில் நெருக்கடிகளையும் தனபாலசிங்கம் சந்தித்திருக்கிறார்.

உலகின் பல பாகங்களிலும் பத்திரிகைகள்மீது தணிக்கை அழுத்தங்கள் நடந்துவருகின்றன. அது மட்டுமன்றி ஆளும் வர்க்கத்தின் அச்சுறுத்தல்களுக்கும் பத்திரிகையாளர்கள் இலக்காகியுள்ளனர். பலர் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

தனபாலசிங்கம் அத்தகைய செய்திகளையும் தொட்டுச்செல்கிறார். சுமார் மூன்றுவருடகாலம் துணை ஆசிரியராக பணியாற்றியபின்னர் மற்றும் ஒரு பொறுப்பினை இவர் ஏற்க நேரிடுகிறது.

இதுகுறித்து தனபாலசிங்கம், பத்திரிகையாளராக வரவிரும்புபவர்களுக்கு சிறந்த ஆலோசனையை கூறுகிறார். அலுவலக நிருபராகவோ, பிராந்திய நிருபராகவோ முதலில் பணியாற்றினால் அதனால் கிடைக்கும் அனுகூலம் வலிமையானது.

தன்னை அர்ப்பணித்து பணியாற்றும் ஒருவருக்கு உரிய பதவியுர்வு கிடைக்காது போனால், வேறு பணிக்குச்செல்வார், அல்லது, மற்றும் ஏதாவது பத்திரிகைக்குள் பிரவேசிக்க முயற்சிப்பார். ஆனால், தனபாலசிங்கம் பொறுமையுடன் காத்திருந்தவர்.

பொறுமைக்கு பலன் கிடைத்திருக்கிறது.

தனது கதையை சொல்லும் அதேசமயம், குறிப்பிட்ட காலகட்டத்தில் இலங்கையில் நிகழ்ந்த அரசியல் பொருளாதார மாற்றங்களையும் பதிவுசெய்திருக்கிறார்.

1991 இல் அதிபர் ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக அவரது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கொண்டுவந்த குற்றப்பிரேரணைக்கு இறுதியில் என்ன நடந்தது ? என்பதையும் தனபாலசிங்கம் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தினபதி – சிந்தாமணி ஆசிரியர் எஸ். டி. சிவநாயகம் மறைந்த வேளையில் அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி மலர் வளையம் வைத்துவிட்டு, திரும்புகையில் பத்திரிகையாளர்கள் அனைவருடனும் சகோதர வாஞ்சையுடன் உறவாடும் தினகரன் ஆசிரியர் ஆர். சிவகுருநாதன். தான் இறந்ததும் இவ்வாறு தனது பூதவுடலுக்கும் அஞ்சலி செய்வாயா? எனக்கேட்டிருக்கும் தகவலையும் மிகுந்த நெகிழ்ச்சியுடன் பதிவுசெய்கிறார்.

1930 இல் வீரகேசரி பத்திரிகை ஆரம்பமாகியது. அக்காலப்பகுதியில் பாரதியாரின் நண்பர் வா.ரா சிறிது காலம் ஆசிரியராக பணியாற்றியவேளையில் ஊர்க்குருவி என்ற தலைப்பில் பத்தி எழுத்துக்களை எழுதினார். இந்த மரபு பின்னர் ஏனைய பத்திரிகைகளிலும் பரவியிருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button