இலங்கை

ரில்வினை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்; முதலில் விசாரணைக்கு அழைக்க வலியுறுத்து 

ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை உடனடியாக அழைத்து வாக்குமூலங்களை பெற்று அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோதாபய ராஜபக்‌ஷவின் முன்னாள் செயலாளரும் நவ ஜனதா பெரமுன கட்சியின் தலைவருமான சுகீஸ்வர பண்டார, நிலக்கரி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

வியாழக்கிழமை அந்த அணைக்குழுவுக்கு சென்ற சுகீஸ்வர பண்டார, ஆணைக்குழுவின் செயலாளரிடம் தனது முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுகீஸ்வர பண்டார கூறுகையில்,

நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்டுள்ள மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை செய்துள்ளோம்.

அதாவது, ஏப்ரல் 17ஆம் திகதி இந்த ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்து, நிலக்கரி மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக சுயாதீன ஆணைக்குழுவை அமைத்துள்ளதாக கூறினார். உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இதற்காக நியமிக்கப்பட்டனர். இதன்படி இந்த ஆணைக்குழுவுக்கு நீதிமன்ற அதிகாரம் உள்ளது. இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டு இரண்டு வாரங்களில் தங்காலையில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதியின் கட்சியினது பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உரையாற்றும் போது, மூன்று மாதங்களில் இந்த ஆணைக்குழுவின் அறிக்கை வெளியில் வரும், எதிர்க்கட்சியில் சிலர் சிறைக்கு செல்வார்கள் என்று கூறியிருந்தார்.

இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடாகும். ரில்வின்சில்வா எவ்வாறு 6 மாதங்களுக்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை மூன்று மாதங்களில் வரும் என்பதனை அறிந்தார். பெலவத்தையில் பதுங்கு குழிக்குள் இருந்துகொண்டு நாட்டின் நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டவாக்கத்துறையை ரில்வின் சில்வாவே வழிநடத்துகின்றார். அத்துடன் நீதித்துறைக்கும் அவர் அழுத்தம் கொடுக்கின்றார்.

இதனால் 2024/8ஆம் இலக்க நீதிமன்றத்தை அவமதிக்கும் சட்டத்தில் ரில்வின் சில்வாவை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவரை இந்த ஆணைக்குழுவுக்கு அழைத்து அவரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்து, கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறே நாங்கள் ஆணைக்குழுவில் அதன் செயலாளரிடம் முறைப்பாட்டை செய்துள்ளோம். அவரும் ஆணைக்குழுவுக்குள்ள சுயாதீனத்துவத்தை ஏற்றுக்கொண்டார். நீதியரசர்களுக்குரிய சுய கௌரவத்திற்கும் மற்றும் நடுநிலைக்கும் ரில்வின் சில்வாவின் கருத்து சிக்கலுக்குரியது என்று ஆணைக்குழுவின் செயலாளரும் ஏற்றுக்கொண்டார்.

இந்த ஆணைக்குழுவானது எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக அமைக்கப்பட்டதா? என்ற சந்தேகங்கள் எழுகின்றன. இதனால் ரில்வின் சில்வாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்யாமல் இந்த ஆணைக்குழு தொடர்பில் கதைப்பதில் பலனில்லை என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button