கம்யூனிஸ்ட் கட்சிகளை விஜய்யுடன் சேருமாறு கூறி அனுப்பினாரா ஸ்டாலின்?

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போதைய அரசியல் சூழல் ஒரு கிளைமாக்ஸ் காட்சியைப் போல விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெறப் போராடி வரும் நிலையில், இன்று மாலை இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM) கட்சிகள் முறைப்படி தவெக-வுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்துள்ளன.
கடந்த மே 4-ஆம் திகதி வெளியான தேர்தல் முடிவுகளில், தமிழகத்தின் எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்கள் (மேஜிக் நம்பர்) கிடைக்கவில்லை. 107 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் ஏற்கனவே ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரைச் சந்தித்தது.
ஆட்சியமைக்க இன்னும் 6 இடங்கள் தேவை என்ற நிலையில், “சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை” எனக் கூறி, ஆளுநர் மாளிகை விஜய்யின் கோரிக்கையை இரண்டாவது முறையாக நிராகரித்தது.வியாழக்கிழமை மீண்டும் விஜய் மூன்றாவது முறை சந்தித்த போதும் இதேபோல் அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது, இந்த இழுபறி நீடித்ததால் தவெக தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பு நிலவி வந்தது.
திமுக – அதிமுக ரகசிய வியூகம் முறியடிப்பு? இதற்கிடையில், தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு விசித்திரமான கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிந்தன. 59 இடங்களைப் பெற்றுள்ள திமுகவும், 47 இடங்களைப் பெற்றுள்ள அதிமுகவும் இணைந்து செயல்படக்கூடும் என்ற யூகங்கள் பரவின. ஒருவேளை திமுக, அதிமுகவுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தால், அந்த அணியின் பலம் 106-ஆக உயரும்.
இவர்களுடன் விசிக (2), கம்யூனிஸ்ட் கட்சிகள் (4), ஐயுஎம்எல் (2) மற்றும் தேமுதிக (1) இணைந்தாலும் மொத்த பலம் 115 மட்டுமே வரும். இதில் பாமக இணைந்தால் விசிக வெளியேறும் சூழல் உருவாகும். பாஜக மற்றும் காங்கிரஸை உள்ளடக்கிய கணக்குகளும் சிக்கலாக இருந்ததால், தமிழகம் ஒரு அரசியல் முட்டுக்கட்டையைச் சந்தித்திருந்தது. ஆளுநரும் யாரையும் ஆட்சியமைக்க அழைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இந்த நெருக்கடியான சூழலில் தான் ஒரு மாபெரும் அரசியல் திருப்பம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சியை அமைக்கவும், அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு வியூகத்தை முன்னெடுத்துள்ளார். தனது கூட்டணியில் உள்ள விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து ஆட்சியமைக்க அவர் ‘பச்சைக்கொடி’ காட்டியுள்ளதாகத் தெரிகிறது.
கூட்டணிக் கட்சிகளைத் தனது பிடிக்குள் வைத்திருக்க நினைக்காமல், ஒரு ஜனநாயக முதிர்ச்சியுடன் “தமிழகத்தின் நலனுக்காகவும், நிலையான ஆட்சிக்காகவும் நீங்கள் தவெக-விற்கு ஆதரவு அளிக்கலாம்” என ஸ்டாலின் வெளிப்படையாகவே சுதந்திரம் அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஸ்டாலினின் இந்த பெருந்தன்மையான அணுகுமுறை அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தலைமையில் புதிய கூட்டணி உதயம் ஸ்டாலினின் அனுமதியைத் தொடர்ந்து, வெள்ளி மாலை சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் அதிகாரப்பூர்வமாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் தங்களது ஆதரவை உறுதி செய்தன. மேலும் விசிக-வும் இந்த அணியில் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது . இதன் மூலம் தவெக-வின் பலம்: தவெக: 107 காங்கிரஸ்: 5 சிபிஎம்: 2 சிபிஐ: 2 விசிக: 2 (எதிர்பார்க்கப்படுவது)
இந்தக் கூட்டணியின் மொத்த பலம் 118-ஐ எட்டுவதால், ஆளுநரிடம் மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோர விஜய் மீண்டும் வெள்ளி மாலை ஆளுநர் மாளிகை சென்றார்.
![]()